
உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது முதியோர்களை அவமதிப்பதன் தீய விளைவுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம், முதியோர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் புறக்கணிப்புகளைத் தடுக்கவும், அவர்களை மதிக்கவும் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில், முதியோர்களை அவமதிப்பதன் பல்வேறு வடிவங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நல்ல சிகிச்சை, பொருளாதார பிரச்சனைகளையும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சமூகத்தில் அவர்களை மதிக்கவும் ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைப்பருவம்போல முதுமைப் பருவமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் முதியோரை வீட்டின் சுமை என்று கருதுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை முதியவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் முதுமைக்காலத்தில் ஆண்களை விட பெண்களே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அதிகளவு பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் முதியோர்கள் மீதான கொடுமைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 23 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் ஆண்களை பொறுத்தவரை 48% பேரும் பெண்களைப் பொறுத்தவரை 53 சதவீதம் பேரும் தன் சொந்தங்கள் மற்றும் குடும்பத்தினரால் கொடுமைக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.
தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலை பார்க்கும்போது, இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போதைய காலகட்டங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் யாருடைய தலையீடுகளையும் விரும்பாதவர்களாகவும், குடும்ப சுமையை ஏற்க விரும்பாதவர்களாகவும், எதிர்காலம் குறித்து சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்துள்ளதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
நாம் நம் வீட்டில் இருக்கும் பெரியோர்களை கொடுமைப்படுத்தினால் பின்னாளில் நமக்கு வயதானாலும் அந்த நிலைதான் என்பதை மறந்துவிடக்கூடாது. வீட்டில் உள்ள வயதானவர்கள் குழந்தையை போன்றவர்கள். நாம் குழந்தையாக இருக்கும் போது நம்மை பெற்றோர் எப்படி கவனித்து கொண்டார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அதிலும் குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாகத் தேய்ந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர்களை புறக்கணிப்பது கொடுமையின் உச்சம் என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் வளர்ந்தவுடன் வயதாகும் பெற்றோரை நன்றாக கவனித்துகொள்ளவேண்டும் என்பதை இளையதலைமுறையினருக்கு புரியவைக்க வேண்டும்.
முதியோர்கள் உண்மையான அன்பையும் பாசத்தையும் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவற்றைக் கொடுக்க இன்றைய குடும்பத்தினர் முன்வர வேண்டும்.
முதியோர்களை மதிப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர்கள் நிம்மதியாக, கௌரவமாக வாழ எல்லோரும் துணை புரிவோம்.