
அக்காலத்தில் வீடு நிறைய குழந்தைகள், அத்தை, மாமா, பாட்டி, தாத்தா என்று இருந்தது போக, தற்போது ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்றான பிறகு முதியவர்களுக்கு அந்த வீட்டில் இடம் இருப்பதில்லை. இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால் முதியவர்களைப் பார்த்துக் கொள்ளவோ, பேசவோ நேரம் இருப்பதில்லை. இதனால் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. நாளை நமக்கும் இதே நிலைமைதான் என்பதை உணர்ந்தாவது முதியவர்களுக்கு மரியாதை கொடுப்பதுடன், அவர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிப் பேசவும், நேரம் கிடைக்கும்பொழுது அட்லீஸ்ட் மாதத்திற்கு ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்லவதை கடைப்பிடித்தால் அதைப் பார்த்து வளரும் நம் குழந்தைகளும் இதனை கற்றுக் கொள்வார்கள்.
விருப்பம் அறிந்து செயல்படுதல்: இருவரும் வேலைக்குச் சென்று விடும் வீடுகளில் காலை முதல் மாலை வரை எவ்வளவு நேரம்தான் டிவியை பார்த்துக் கொண்டே இருப்பது? தனியாக எங்கேயாவது வெளியில் செல்லலாம் என்றால் வயதின் காரணமாக பயம் வந்து விடுகிறது. ‘எங்கேயாவது விழுந்து பிறருக்கு பாரமாகி விடக்கூடாதே’ என்று பயப்படுவார்கள். எனவே, வீட்டில் உள்ள நம் குழந்தைகளை வீட்டுப் பெரியோர்களின் விருப்பம் அறிந்து அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் செல்லவும், பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு நடக்க வைத்துச் செல்லவும் பழக்கப்படுத்தலாம். இதன் மூலம் ஒரு அன்னியோன்யமான சூழ்நிலை ஏற்படுவதுடன், வயதானவர்கள் தனிமையில் தவிப்பதையும் தவிர்க்க முடியும்.
புது நட்புகளை அறிமுகப்படுத்துதல்: இப்போதெல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகி விட்டது. அருகில் யார் வசிக்கிறார்கள் என்பது கூடத் தெரிவதில்லை. இதனைத் தவிர்க்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், நம் வீட்டு பெரியவர்களையும் அறிமுகப்படுத்துவதன் மூலம் (அந்த வீட்டிலும் வயதானவர்கள் இருப்பார்கள் அல்லவா) வயதானவர்களுக்கு புதுப்புது நட்புகள், புதிய மனிதர்களின் தொடர்பு, அவசர காலத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதற்கும் வழிவகுக்கும்.
புது தெம்பு: அடுக்குமாடி குடியிருப்புகளின் உள்ளேயே சிறிய அளவில் பார்க், கோயில், கம்யூனிட்டி ஹால் என்று இருப்பதால் வயதானவர்கள் தங்கள் உடல் உபாதைகளை மறந்து வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேசுவது, கோயிலுக்குச் செல்வது, காலாற நடப்பது, பஜனைகள் செய்வது என சந்தோஷமாக நேரம் கழிக்கலாம். இதனால் வயதானவர்களுக்கு ஒரு புது தெம்பு ஏற்படும். நமக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவர்களை தெம்பாக ஆரோக்கியமுடன் வளைய வர வைக்கும்.
தனிமை உணர்வு மறைந்திட: அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் இடங்களில் கவலைகள் பறந்து விடும். பேச்சுத் துணைக்கு ஆட்கள் இருப்பதால் தனிமை போய்விடும். கைவேலை தெரிந்தவர்கள், நன்கு படித்தவர்கள் அங்குள்ள பிள்ளைகளுக்கு மாலை நேரங்களில் டியூஷன் எடுப்பதும், விருப்பம் உள்ளவர்களுக்கு கை வேலைகளை சொல்லித் தருவதும் அவர்களின் மன நலம் சிறக்க உதவும். உளவியல் ரீதியாக பார்த்தால் கூட அவர்களின் மன நலம் சிறப்பாக இருப்பதால் வாழ்நாள் நீடித்து ஆரோக்கியமாக இருக்க உதவும்.
சிரிப்பில் இறைவனைக் காணலாம்: வயதானவர்களுக்கு இயல்பாகவே ஆன்மிக உணர்வு அதிகம் இருக்கும். எனவே, நேரம் கிடைக்கும்பொழுது அவர்களையும், வீட்டிலுள்ள பிள்ளைகளையும் அருகில் உள்ள கோயில்களுக்கு அழைத்துச் சென்று வரலாம். இதனால் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே ஆன்மிகத்தை ஊட்டிய பலன் கிடைப்பதுடன், வயதானவர்களுடன் செல்வதால் அவர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். இதன் மூலம் வயதான காலத்தில் நம்மை ஒதுக்கி விடாமல் நன்கு கவனித்துக் கொள்ளும் மனப்பான்மை வளரும்.
வீட்டிலுள்ள வயதானவர்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையும் கவனித்து வளரும் பிள்ளைகள் நாளை நமக்கு வயதாகும்பொழுது நிச்சயம் நல்லபடி நடத்துவார்கள்.