
கல் சட்டியில் இரண்டு வகை உள்ளது. மாக்கல் சட்டி, களிமண் சட்டி என்று இரண்டு ரகம் உள்ளது. முன்பெல்லாம் அம்மா மாக்கல் சட்டியில் தான் சமைப்பார்கள். காஸ் அடுப்பு இருந்தாலும் கொல்லைப்புறத்தில் விறகடுப்பை வைத்து கல் சட்டியில் சமைக்கும்பொழுது அதன் ருசியே தனியாக இருக்கும்.
விறகடுப்பில் சமைக்கும்பொழுது விறகு பற்றிக்கொள்ள நேரம் எடுக்கும். ஆனால் பற்றிவிட்டால் நன்கு எரியும். அம்மா ஒரு துண்டு கற்பூரத்தை விறகுகளுக்கு நடுவில் வைத்து காய்ந்த தென்னை ஓலையையும் சிறிது வைத்து பற்ற வைப்பார். உடனே பற்றிவிடும். வீட்டில் ஏழு எட்டு தென்னை மரங்கள், கொல்லைப்புறம் வசதியாக விறகடுப்பை வைக்க போதுமான இடம் என்று இருந்த காலம் அது.
கல் சட்டி ஏக கனமாக இருக்கும். இது விறகடுப்பின் அதிகமான சூட்டை தாங்கும் சக்தி கொண்டது. சமையலின் சுவைக்கும், சமைக்கும் பாத்திரங்களுக்கும் சம்பந்தமுண்டு. ஈயப் பாத்திரத்தில் வைக்கும் ரசம் எப்படி ருசிக்கிறதோ அதுபோல்தான் கல்சட்டி சமையலின் ருசியும் அதிகமாக இருக்கும். நாங்கள் பள்ளி செல்லும் காலங்களில் எல்லாம் கல் சட்டியில்தான் பெரும்பாலும் சமையல் இருக்கும்.
தற்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் அதிசயம்தான். இவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கும் பொழுது மீண்டும் கல்சட்டி பயன்பாட்டில் வர ஆரம்பித்துவிட்டது.
எங்கள் வீட்டில் உணவு சமைப்பதுடன், கல் உப்பு போட்டு வைக்கவும் இந்த மாக்கல் சட்டியைத்தான் பயன்படுத்துவார்கள். மாக்கல் சட்டி உடைந்துவிட்டால் அந்த உடைந்த துண்டுகளை தரையில் எழுதும்போது சாக்பீஸ் போலவே எழுதும். இவை எல்லாம் எங்கள் சின்ன வயது ஞாபகங்கள்.
கல் சட்டியை பழக்குவது எப்படி?
பக்க விளைவுகள் அற்ற ஆரோக்கியத்தை பெறவேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும். வாங்கிய புது கல் சட்டியை நன்கு துடைத்துக்கொண்டு அதில் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன், விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு குழைத்த கலவையை கையால் எடுத்து கல் சட்டியின் உள்புறமும், வெளிப்புறமும் தடவி வெயிலில் நான்கைந்து நாட்கள் காயவைக்க வேண்டும்.
பின்பு வழக்கமாக பாத்திரங்களை தேய்க்கும் லிக்விட் கொண்டு சட்டியை கழுவி விடவும். பிறகு அரிசி களைந்த தண்ணீரை லேசாக சூடு செய்து அதில் விட்டு வைக்கவும். இப்படி நன்கு பழக்கிய கல் சட்டி சமையலுக்கு தயாராகிவிடும்.
வெறும் கல்சட்டியை அடுப்பில் வைக்கக்கூடாது. குழம்பிற்கு தயார் செய்து அதை கல் சட்டியில் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கல் சட்டி சூடு ஏறுவதற்கு தான் நேரம் பிடிக்கும். சூடு ஏறி விட்டாலோ கடகடவென வேலை முடிந்துவிடும். கல்சட்டி ஒருமுறை சூடு பிடித்து விட்டால் அந்த சூடு அவ்வளவு சீக்கிரம் தணியாது.
இது சமைத்த உணவை நீண்ட நேரம் சூட்டுடனும், சுவையுடனும் வைத்திருக்கும். கல் சட்டி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து சமைக்கவும். சாம்பார், ரசம், கீரை, மசியல், கூட்டு என எது வேண்டுமானாலும் செய்யலாம். அடுப்பை அணைத்தும் கூட ஒரு நிமிடம் கொதித்துக்கொண்டே இருக்கும். காரணம் கல்சுட்டியில் சூடு அதிகம் இருப்பதால்.
நன்கு பழக்கிய பிறகு கல் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், மிளகாய் என தாளித்து அதிலேயே குழம்பு வைக்கலாம். அதுவும் குறிப்பாக இந்த வெயில் காலத்தில் கல் சட்டியில் தயிரை வைக்க எளிதில் புளிப்பு தன்மை தட்டாது நன்றாக இருக்கும். ஹாட் பாக்ஸ் போல் வேலை செய்யும் இதனை கேஸ் ஸ்டவ்வில் வைத்து தாராளமாக சமைக்கலாம்.
செயற்கை பூச்சுகளோ, ரசாயனங்களோ இல்லாத அலுமினியம், நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் போது ஏற்படும் ஆபத்துகளைபோல் இல்லாமல் உடலுக்கு நன்மை செய்யும்.பொரியல், கூட்டு, மசியல் என வெரைட்டி காட்டலாம். பாத்திர கடைகளில் மட்டுமல்லாது ஆன்லைனிலும் ஆர்டர் செய்து வாங்கலாம்.