
வீட்டிற்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதற்கு வாஸ்து மற்றும் ஃபெங் சுய் சாஸ்திரங்களின்படி சில சிலைகளை வைப்பது நல்ல பலன்களை தரும் என்று சொல்லப்படுகிறது.
கன்றுடன் கூடிய காமதேனு சிலையை பூஜை அறையில் வைப்பது வற்றாத செல்வம், செழிப்பு,நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் நம் விருப்பங்களையும் நிறைவேற்றும். குறிப்பாக இந்த சிலையை வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது சிறந்த பலனைத் தரும். வாஸ்து தோஷங்களை நீக்கி குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். குறிப்பாக பித்தளை அல்லது வெள்ளி பொருட்களால் ஆன சிலைகள் மிகவும் விசேஷமாக கருதப்படுகின்றன.
வாஸ்துவில் யானைகளுக்கு பெரும் பங்கு உண்டு. இரட்டை யானை சிலையை பூஜை அறையில் வைப்பது சிறந்த பலன்களைத் தரும்; குறிப்பாக ஞானம், பலம் மற்றும் பாதுகாப்பை தரக்கூடியது. நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடியது. வெள்ளை அல்லது தங்க நிறத்திலான யானை சிலை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வரவேற்பரையிலோ அல்லது நுழைவாயிலுக்கு அருகிலோ ஒரு ஜோடி யானைகளை வைப்பது உறவுகளை வலுப்படுத்துவதுடன், குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும் வளர்கிறது.
வாஸ்து மற்றும் ஃபெங் சுய் சாஸ்திரப்படி வீட்டில் பித்தளை, வெள்ளி அல்லது தங்க முலாம் பூசப்பட்ட அரோவானா(Arowana) மீன் சிலை அல்லது கோய்(Koi) மீன் ஜோடி சிலைகளை வைப்பது செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். இந்த மீன் சிலைகளை வீட்டில் வடகிழக்கு திசையில் அல்லது வரவேற்பறையில் வைப்பது நிதி ரீதியான அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். வருமான பெருக்கத்திற்கு வழிவகுக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி அதில் இந்த மீன் சிலையை வைப்பது வீட்டில் செல்வத்தின் ஓட்டத்தை குறிக்கும்.
வாஸ்து மற்றும் ஃபெங் சுய் சாஸ்திரப்படி வீட்டில் ஓடும் நிலையில் உள்ள குதிரை சிலை அல்லது ஓவியம் குறிப்பாக 7 வெள்ளை குதிரைகள் வைப்பது தொழிலில் வேகம் மற்றும் லாபம், செல்வம், வெற்றி மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். இந்த சிலைகளை வீட்டின் வட திசையில் அல்லது தெற்கு திசையில் வீட்டின் வெளிப்புறத்தை நோக்கி இல்லாமல், வீட்டின் உள்ளே வருவது போல் வீட்டைப் பார்த்தவாறு வைப்பது அதிகப்படியான நற்பலன்களைத் தரும். வெண்கலம், பித்தளை போன்ற உலோகத்தினால் ஆன குதிரை சிலைகள் அதிக பலன்களைத் தரும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஆமை சிலையை(குறிப்பாக உலோகம், ஸ்படிகம் அல்லது மரம்) சரியான திசையில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரித்து, பணவரவு, ஆரோக்கியம் மற்றும் நிம்மதியைத் தரும். ஆமையின் தலை எப்போதும் வீட்டின் உள்ளே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வடகிழக்கு, வடக்கு அல்லது தென்மேற்கு திசைகள் இதற்கு உகந்தவை. வடக்கில் ஆமை சிலையை வைப்பது வேலை மற்றும் வணிகத்தில் செல்வத்தையும், வெற்றியையும் கொண்டுவரும். ஆமை சிலையை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பது அதிக பலன் தரும். வாசல் கதவுக்கு அருகில் வைப்பது தீய சக்திகளை தடுக்கும். 3 சிறிய ஆமைகள் கொண்ட சிலை குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையை உண்டாக்கும்.
பித்தளை அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட ஆந்தை சிலைகள் வாஸ்து ரீதியாக மிகவும் சிறந்தது. இவற்றை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது. ஜோடி ஆந்தை சிலைகளை வைப்பது குடும்பத்தில் ஒற்றுமையையும் நன்மையையும் அதிகப்படுத்தும். வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கவும், எதிர்மறை ஆற்றலை நீக்கி வாஸ்து பிரச்சனைகளை போக்கவும் ஆந்தை சிலை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது மகாலட்சுமியின் வாகனமாக பார்க்கப்படுவதால் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் நீங்கி, செல்வம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
பெரும்பாலான அதிர்ஷ்ட சிலைகளை வீட்டின் வடகிழக்கு (ஈசானிய மூலை) அல்லது வடக்கு திசையில் வைப்பது நல்லது. விநாயகர், அனுமன் சிலைகளை பிரதான வாசலுக்கு நேராக உள்ளே பார்த்தவாறு வைக்கவேண்டும். சிலைகளை வைக்கும் இடம் சுத்தமாகவும் தூசியின்றியும் இருக்கவேண்டும். சேதமடைந்த அல்லது விரிசல் விழுந்த சிலைகளை வீட்டில் வைப்பதை தவிர்க்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கவும், குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கவும் இந்த சிலைகள் வீட்டில் இருக்க வேண்டியது அவசியம்.