உங்கள் குழந்தைகள் அதிகமாக செல்போன் பார்க்கிறார்களா? அப்படியானால் இந்தப் பதிவை முழுவதுமாகப் படியுங்கள்.
காலையில் எழுவது முதல் இரவு தூங்கும் வரை இப்போது எல்லார் கைகளிலும் மொபைல் போன்தான் இருக்கிறது. இந்த பழக்கம் ஆறு மாத கைக்குழந்தையில் தொடங்கி, 70 வயது முதியவர்கள் வரை இருக்கிறது எனலாம். நம் அருகில் இருப்பவர்களைக் கூட கவனிக்காமல் சேட்டிங், ஷேரிங் லைக், கமெண்ட் என பலரது வாழ்க்கை போகிறது. அதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் பலருக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதிலும் சிலர் படங்கள், சீரிஸ் பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பழக்கங்களை அதிகம் வைத்துள்ளனர். இதனால் எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?
தொடர்ச்சியாக அதிக நேரம் செல்போன் பார்க்கும்போது எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என பலருக்குத் தெரிவதில்லை. ஒரு சிலர் டிவி, செல்போன் ஒலியில் தூங்கும் பழக்கம் உடையவர்களாக மாறிவிட்டனர். அதிகமாக மொபைல் ஸ்க்ரீனை பார்ப்பதால் அறிவாற்றல் குறையும் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இளம் வயதில் அனைத்தையும் வேகமாக உள்வாங்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாகவும் சொல்லப்படுகிறது.
குழந்தைகள் சிறு வயதிலேயே மொபைல் போன் பயன்படுத்துவதால், இந்த சமூகத்துடன் ஒன்றுவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது ஒரே நேரத்தில் பல விஷயங்களை மூளை யோசித்து, அதிக அழுத்தத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
குழந்தைகள் அதிகப்படியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு அவ்வப்போது மனநிலை மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் முரட்டுத்தனமாக வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதே போல செல்போன் பயன்பாட்டால் பல இளைய தலைமுறையினர் தூக்கமின்மை நோயால் அவதிப்படுகிறார்களாம். இதற்கு முக்கிய காரணமாக செல்போன் பயன்பாடு சொல்லப்பட்டு வரும் நிலையில், உங்கள் குழந்தைகளுக்கு இனி தேவைக்கு ஏற்ப மட்டுமே செல்போனை உபயோகப்படுத்த அறிவுறுத்துங்கள்.
குறிப்பாக இதில் பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் பல பெற்றோர்கள் குழந்தையிடம் செல்போன் கொடுத்தால் தான் அமைதியாக இருக்கிறது என நினைத்துக் கொண்டு, அவர்களிடம் செல்போனைக் கொடுத்து பழக்கி விடுகிறார்கள். இதனால் அந்த குழந்தை பெரிதும் பாதிக்கப்படும் என்பது பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலனில் கவனம் எடுத்து, செல்போன் பயன்பாட்டை குறைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.