
தற்போது பலரும் பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அடுக்ககங்களில் வசிக்கிறார்கள். மிகவும் சிறிய அளவு இடத்தையே சமையலறைகள் ஆக்கிரமிக்கின்றன. நகர்ப்புற சமையலறைகளில் ஜன்னல்கள் இருப்பது அரிதாகவே இருக்கின்றன. சிறிய இடத்தில் வெளிப்புறக் காற்று இல்லாமல் சமைப்பது பெண்களுக்கு மிகவும் சிரமமான விஷயம். மேலும் சமைக்கும் போது உண்டாகும் புகை, தாளிப்பதால் ஏற்படும் வாசனைகள் போன்றவற்றை நீக்க சமையலறைகளில் எக்ஸாஸ்ட் ஃபேன் பொருத்துவது மிகவும் முக்கியம். அது ஏன் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன்களின் பயன்பாடுகள்:
1. காற்றில் பரவும் மாசுக்களை நீக்குதல்: சமைக்கும்போது குறிப்பாக காய்களை வதக்கும் போதும், வறுக்கும் போதும், அசைவ உணவுகளை கிரில் செய்யும் போதும், கொதிக்க வைக்கும் போதும் காற்றில் பலவிதமான பொருள்கள் வெளியேறுகின்றன. புகை, நீராவி, கிரீஸ் துகள்கள், வெப்பம் போன்றவை சமையலறை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இவற்றை எக்ஸாஸ்ட் ஃபேன்கள் உறிஞ்சி விடுகின்றன.
2. காற்றின் தரம் மேம்படுதல்: மாசுபடுத்திகளை அகற்றுவதன் மூலம் சமையலறையில் உள்ளிருக்கும் காற்றின் தரத்தை எக்ஸாஸ்ட் ஃபேன்கள் மேம்படுத்துகின்றன. இந்த சுவாச ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. எக்ஸாஸ்ட் பேன்கள் காற்றின் தரத்தை மேம்படுத்துவதால் அவை சமையலறையில் நுரையீரல் போல் செயல்படுகின்றன.
3. ஆரோக்கியத்தின் அறிகுறி:
சமைக்கும்போதும், சமையல் எண்ணெயை சூடாக்கும் போதும் வெளிவரும் புகையில் கார்பன் மோனாக்சைடு நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற நச்சுகள் கலந்துள்ளன. இவற்றை சுவாசித்தால் உடல் நலத்துக்கு தீங்கானது. காற்றில் பரவும் ரசாயன புகையால், கண்கள், மூக்கு, தொண்டைப் பகுதியில் எரிச்சல் ஏற்படும். தலைவலி, குமட்டல், ஆஸ்துமா போன்றவற்றுக்கு கூட வழி வகுக்கும். எனவே வீட்டி சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால் இந்த பிரச்சனைகளை சரி செய்து சுத்தமான காற்றை வழங்குகிறது.
4. ஈரப்பதத்தைக் குறைத்தல்: சமைக்கும் போது சுவற்றில் அதிக ஈரப்பதம் உருவாகிறது. இது சமையலறை சுவரில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதுடன் பூஞ்சை காளான் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். சமையலறையில் உள்ள மர வேலைப்பாடுகள் கூட பாதிக்கப்படும். எக்ஸாஸ்ட் ஃபேனில் உள்ள விசிறிகள் இந்த ஈரப்பதமான காற்றை அகற்றி சமையலறை சுவர்களில் ஈரப்பதம் உருவாகாமல் தடுக்கின்றன
5. வெப்பத்தை நிர்வகித்தல்: அடுப்பின் முன் நின்று சமைக்கும் போது ஏற்படும் வெப்பம் சமையலறை முழுவதையும் நிறைக்கும். இந்த வெப்பக் காற்றை வெளியேற்ற எக்ஸாட் உதவுகிறது. அசைவம் சமைக்கும் போதும், டீப் ஃபிரை செய்யும்போதும் ஏற்படும் நாற்றத்தையும் வெளியேற்ற உதவுகிறது. வாசனை வீட்டில் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கிறது.
வீட்டு சமையலறைகளுக்கான எக்ஸாஸ்ட் ஃபேன்களின் வகைகள்:
ஜன்னலில் பொருத்தக்கூடிய எக்ஸாஸ்ட் ஃபேன்கள்: ஜன்னல் திறப்பில் நேரடியாக நிறுவப்படும் இந்த பேன்கள் குறைந்த சக்தி வாய்ந்தவை. ஆனால் சிறிய சமையலறைகளுக்கு ஏற்றவை.
சுவரில் பொருத்தப்படும் ஃபேன்கள்: இவை அடுப்புக்கு மேலே சமையலறையின் வெளிப்புறச்சுவர்களில் நேரடியாக பொருத்தப்படும்.
சமையலறை சீலிங்கில் பொருத்தப்படும் எக்ஸாஸ்ட் ஃபேன்கள்:
இவை அடுப்புக்கு மேலே நேரடியாக பொருத்தப்படும் எக்ஸாஸ்ட் ஃபேனில் இருந்து வேறுபட்டிருக்கும். ஆனால் சமையலறையின் பொதுவான காற்றோட்டத்திற்கு பயன்படுகிறது.
தானியங்கி (ஆட்டோமாடிக்) எக்ஸாஸ்ட் ஃபேன்கள்: இவை சமையல் புகை மற்றும் கடுமையான நாற்றங்களை கண்டறியக்கூடிய வகையில் சென்சார்களைக் கொண்டு இயங்குகின்றன. தானாகவே மின்விசிறி இயங்கி காற்றை சுத்தம் செய்யும். தேவையான அளவு வேகத்தில் சுற்றிமுடித்து ஆஃப் ஆகிவிடும். சமைத்து முடித்த பிறகு, மின்விசிறி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கும் வகையில் டைமரை அமைக்கலாம்.
சில வகையான லேட்டஸ்ட் எக்ஸாஸ்ட் ஃபேன்களை கையை அசைப்பதன் மூலம் அவற்றின் விசிறி வேகத்தை சரி செய்யலாம். சுவிட்சைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. சில ஸ்மார்ட் எக்ஸாஸ்ட் ஃபேன்களை வீட்டு வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்க முடியும். இதனால் தொலைவில் இருந்து அவற்றை இயக்க முடியும். குரல் கட்டுப்பாட்டால் இயங்கும் ஹேண்ட்ஸ் ஃபிரீ ஃபேன்களும் கிடைக்கின்றன.