
நம்முடைய வாழ்க்கை எப்போதும் நான்கு பேர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. ஆனால், சிலரது வாழ்க்கை, அடுத்தவர்கள் பொறாமைப்படக்கூடிய அளவுக்கு இல்லை. அடுத்தவர்களைப் பார்த்துதான் நாம், பொறாமைப்பட்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றோம்.
உங்களது வாழ்க்கை அடுத்தவர்கள் அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு உயரத்தில் செல்ல வேண்டுமா? நாலு பேர் மதிக்கும் வகையில் உங்களுக்கும் ஒரு வேலை கிடைக்க வேண்டும். உங்களுக்குக் கீழ் நாலு பேர் வேலை செய்ய வேண்டும் என்றால், ஆன்மிக ரீதியாக என்ன வழிபாடு செய்வது? இதற்கான சக்தி வாய்ந்த ஹனுமன் வழிபாட்டை எப்படி செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இந்த வழிபாட்டை செய்ய நாள், கிழமை, நட்சத்திரம் எதுவுமே பார்க்க வேண்டாம். நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்களாக நீங்கள் இருந்தால், அதிகாலையில் குளித்துவிட்டு, குல தெய்வத்தை வணங்கிக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் 2 கிராம்பு, 3 ஏலக்காய் எடுத்துக்கொள்ளுங்கள். அனுமனை மனதார நினைத்து கீழ்க்காணும் மந்திரத்தை 48 முறை சொல்லுங்கள்.
ஹனுமன் மந்திரம்:
‘ஓம் ஹம் ஹனுமதே நமஹ!’
எனும் மந்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டு கையில் இருக்கும் ஏலக்காயை ஒரு டம்பளர் தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்தத் தண்ணீரை வடகிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும். இரண்டு நிமிடம் அனுமனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். ‘எனக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாத்தியம் கிடைக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, அந்தத் தண்ணீரை எடுத்து குடித்து விடுங்கள்.
ஏலக்காயையும் கிராம்பையும் மென்று விழுங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. அந்த இரண்டு பொருட்களையும் எடுத்து தனியாக வைத்துவிட்டு, வெறும் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு, உங்களுடைய அன்றாட வேலைகளைத் துவங்கலாம். இன்டர்வியூவுக்கு போவதற்கு முன்பு, இதைச் செய்தாலும் நிச்சயமாக நீங்கள் நினைத்த வேலை கிடைக்கும். தினமும் இந்த மந்திரத்தை சொல்லி அந்த டம்ளர் தண்ணீரை குடித்து வர, உங்களுடைய வாழ்க்கை நான்கு பேர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு நல்லபடியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
குறிப்பாக, வேலை சம்பந்தப்பட்ட விஷயத்திற்குத் தீர்வு கிடைக்க, இந்த வழிபாடு நல்ல பலன் கொடுக்கும். ‘எனக்கு இருக்கின்ற வேலையில் பிரச்னை அதிகமாக இருக்கிறது. மேனேஜர் தொல்லை தாங்க முடியவில்லை’ இப்படி ஏதாவது பிரச்னை இருந்தாலும் நீங்கள் அந்தப் பிரச்னை சரியாவதற்கும் இந்த வழிபாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே நாளில் பலன் கிடைக்க வேண்டும் என்று அவசரப்படக் கூடாது. தொடர்ந்து 21 நாட்கள் இப்படிச் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.