
விபத்து என்பது பல வடிவங்களில் வரக்கூடியது. வீட்டுக்குள் ஏற்படும் விபத்துகளில் மிகவும் பயங்கரமானது. சமையலறையில் உள்ள LPG கேஸ் கசிவது மற்றும் சிலிண்டர் வெடித்து தீப் பிடித்துக் கொள்வது போன்றவை யாகும். இந்த மாதிரியான சம்பவங்கள் நேரும்போது அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அவற்றைத் தடுப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
கேஸ் சிலிண்டரில் தீப் பிடிப்பதற்கான முக்கிய காரணம் கேஸ் கசிவுதான் (Gas leakage) எனலாம். எனவே, பெண்கள் சிறிதளவு கேஸ் வாசனையை உணர்ந்தவுடன் வால்வை மூடி கேஸ் ட்யூப் வழியே வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பிறகு சமையலறை ஜன்னல் கதவுகள் மற்றும் நுழைவு வாயில் கதவையும் முழுவதுமாக திறந்து வைக்க வேண்டும். சமையல் வாயு மிக மெதுவாகவே பரவக் கூடியது.
அந்த நேரங்களில் எரிந்து கொண்டிருக்கும் மின் சாதானங்களின் சுவிட்ச்சை அணைக்கவோ அல்லது வேறு ஏதாவது சுவிட்ச்சை ஆன் (On) பண்ணுவதோ கூடவே கூடாது.
சிகரெட் லைட், மெழுகு வர்த்தி, அகல் விளக்கு போன்ற எதையும் ஏற்றக் கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் சிறு பொறி கேஸ் தீ பிடித்துக் கொள்ள உதவி செய்யும்.
சமையலறைக்குள் நெருப்பு பற்றிக் கொண்டால், நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள்:
முதலில் நீங்கள் பதற்றமடையக் கூடாது.
பிளாஸ்டிக் அல்லாத திரைச் சீலை, படுக்கை விரிப்பு அல்லது கோணிப்பை ஆகிய வற்றில் ஏதாவதொன்றை தண்ணீரில் முக்கிக் கொண்டு வந்து, காற்றடிக்கும் திசைக்கு எதிராக நின்று, சிலிண்டரின் தலைப் பகுதியை சுற்றி, முழுக்க மூடி விட வேண்டும். சிலிண்டரின் உள்ளிருந்து கசியும் கேஸ், ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் எரிவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிடும்.
வீட்டில் CO2 தீ அணைப்பான் கருவி இருந்தால் அதை உபயோகித்தும் தீயை அணைக்க முயற்சிக்கலாம்.
பிறகு நீங்கள் வீட்டிற்கு வெளியில் வந்து நின்று கொண்டு கேஸ் ஏஜென்சி அல்லது தீயணைப்பு அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளிப்பது அவசியம். மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அவர்கள் முறைப்படியாக எடுத்துச் செய்து நிலைமையை சீர்படுத்தி விடுவார்கள்.
கேஸ் கசிவை தடுப்பதற்கு சில ஆலோசனைகள்:
வருடத்திற்கு ஒரு முறை உங்கள் அடுப்பு, ரெகுலேட்டர், ரப்பர் ஹோஸ் போன்றவற்றில், தொடர் உபயோகத்தில் இருந்ததன் காரணமாக, ஏதாவது பழுதேற்பட்டுள்ளதா என்பதைக் கண்டு பிடித்து சரி செய்வதும், கேஸ் சிலிண்டரின் காலாவதி தேதியை சரி பார்ப்பதும் அவசியம்.
இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் மேடைக்கு அடியில் அருகருகே வைத்திருப்பது தவறு.
சிலிண்டரை எப்பொழுதும் நிற்பது போன்ற நிலையில் வைத்திருப்பதே பாதுகாப்பு.
கேஸ் கசிவை உடனடியாக உணர்த்த உதவும் கருவியை (Gas leak detector) வைத்துக்கொள்வது கூடுதல் சிறப்பு.
சிலிண்டரில் உள்ள வால்வு சரியாக உள்ளதா என்பதை, ஒவ்வொரு முறையும் சிலிண்டர் கொண்டு வரும் ஊழியர் மூலம் சரி பார்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக சிலிண்டரை பைக்கில் எடுத்துச் செல்வது ஆபத்தானது. எந்த வாகனமாக இருந்தாலும் நிற்பது போன்ற நிலையில் வைத்து எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
பொதுவாக சமையல் அறையில் பெண்களே அதிக நேரம் இருப்பது வழக்கம் என்பதால் இந்த பாதுகாப்பு முறைகளை பெண்கள் முழுவதுமாக தெரிந்து கொள்வது நல்லது. மன தைரியம் இல்லாத பெண்கள் கேஸ் கசிவை உணர்ந்தவுடன் வெளியில் வந்து பிறர் உதவியை நாடுவது நலம்.