

எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் வீட்டு வேலைகளில் ஒரு சிரமம் இருக்கத்தான் செய்யும். சில க்ளீனிங் வேலைகளை நினைக்கும்போது எரிச்சல் வரும். எப்படித்தான் இதை சுத்தம் செய்யப் போகிறோமோ என்ற ஒரு சலிப்பு மனநிலை ஏற்படும்.
அதில் ஒன்று கால் மிதியடிகளை துவைப்பது. ஏற்கனவே கனமாக உள்ளதை தண்ணீரில் போட்டு ஊறவைக்கும் போது மேலும் கனமாகிவிடும். அதை அடித்து துவைப்பது ஆகாத காரியம். இதை எப்படித்தான் துவைப்பது?அழுக்குகள் அப்படியே இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? இங்கு சொல்லியிருப்பதுபோல் செய்து பாருங்கள். ஈசியாக இருக்கும். மேலும் வீட்டுக்கு உபயோகமான பல டிப்ஸ்கள் இங்கே உங்களுக்காக…
வீட்டில் உள்ள தலை சீவும் சீப்புகளில் நிச்சயம் அழுக்குகள் படிந்துவிடும். வாரம் ஒருமுறையாவது அதை சுத்தம் செய்ய நினைப்போம். அதற்காக சுடுநீர் வைத்து அதில் சோப்பு தூள் போட்டு பிறகு பல் துலக்கும் பிரஷினால் அழுக்குகளை எடுத்து பின் அந்த சீப்பை நீர் போக துடைத்து வைப்போம்.
இதில் நமக்கு நேரம்தான் விரயம். கைவசம் இருக்கும் ஏதேனும் ஒரு முகப்பவுடரை சீப்பில் மேல் லேசாக தூவிவிட்டு பிறகு பழைய டூத்பிரஷினால் அழுக்குகளை எடுத்துப்பாருங்கள். வெகு எளிதாக அழுக்குகள் நீங்கிவிடும். சீப்பும் புதுசுபோல் காட்சி அளிக்கும்.
கால் மிதியடிகளை எளிதாக அலச இது சிறந்த வழி. ஒரு பக்கெட்டில் எத்தனை மிதியடிகளோ அதற்கு ஏற்ப டாய்லெட் கிளீன் பண்ண உதவும் கிளீனரை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்துகொள்ளுங்கள். பின் அதில் இந்த மேட்டுகளை போட்டு ஊற வையுங்கள். அரைமணி நேரம் கழித்து ஊறவைத்த மேட்டை எடுத்து நன்றாக அலசி மீண்டும் மிதமான சுடு நீரில் அலசி காய வையுங்கள். அழுக்குகள் அப்படியே நீங்கிவிடுவதை பார்ப்பீர்கள். இது எளிதாகவும்பயனுள்ளதாகவும் இருக்கும்.
எலுமிச்சம் பழங்களை வாங்கி ஃப்ரிட்ஜில் கவரில் போட்டு வைப்பதைவிட அழகாக ஒரு கண்ணாடி பௌலில் நீரூற்றி அதில் எலுமிச்சம் பழங்களை போட்டு வைத்தால் வீட்டுனுள் வருபவர்களுக்கு அது அழகாகவும் தெரியும். அறை மணமாகவும் இருக்கும். அதேசமயம் நீண்ட நாட்கள் எலுமிச்சம் பழங்கள் கெடாமலும் இருக்கும் .
நாம் வீணாக தூக்கிப்போடும் இனிப்புகள் அல்லது உணவுப் பொருட்கள் வரும் கெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களை தூக்கி போடாமல் அதன் அடியில் ஆறு துளைகள் போட்டு பாட்டில் மூடியை நான்கு புறங்களிலும் டூ பின் டேப் கொண்டு ஒட்டிவிட்டால் அதில் சோப்புகளை வைக்கலாம். இதனால் சோப்பில் உள்ள நீர் கீழே வழிந்து சோப்பு கசகச என்று ஆகாமல் இருக்கும்.
சோப்பு டப்பாக்களில் அதன் அளவுக்கு ஏற்ப சிறிய ஸ்பாஞ்ச் ஒன்றை வைத்து அதன் மேல் சோப்புகளை வைக்கும்போது நீரில் கரையும் சோப்புகள் அந்த ஸ்பான்சில் படிந்து விடுவதால் அதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எடுத்து அதையும் துணிகளுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் அல்லது பாத்திரங்கள் துலக்கவும் வைத்துக்கொள்ளலாம்.
கேரட் நிறைய வாங்கி விட்டீர்களா? என்னதான் பிரிட்ஜில் வைத்தாலும் எளிதில் வாடிப்போய் வதங்கிவிடும். அதை தவிர்க்க ஒரு நீரினால் நனைக்கப்பட்டு பிழிந்த துணியில் கேரட்டுகளை இருபுறமும் லேசாக நறுக்கிவிட்டு சுற்றி வைத்துப் பாருங்கள். நீண்ட நாட்களுக்கு அந்த கேரட் புதிதுபோல் அப்படியே இருக்கும்.
தக்காளிகள் மலிவாக இருக்கும்போது நிறைய வாங்கி வைப்போம். ஆனால் விரைவில் அழுகும் வாய்ப்பு உண்டு. அதை தவிர்க்க தக்காளிகளை நன்கு கழுவி ஈரம்போக துடைத்துவிட்டு தக்காளியின் காம்பு இருக்கும் பகுதியில் சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு அதை காம்புப்பகுதி அடியில் இருக்கும்படி திருப்பி வைத்து அடுக்கிப் பாருங்கள். ஏனெனில் காம்பு பகுதிதான் விரைவில் அழுகிவிடும் என்பதால் அதில் நாம் எண்ணெய் தடவுகிறோம் இப்படி செய்து பாருங்கள் நிச்சயம் தக்காளிகள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.