

பெரும்பாலான வீடுகளில் தேவையில்லாத பொருட்கள் இடத்தை ஆக்கிரமித்து தூசி, ஒட்டடை படிந்து நடமாடக்கூட இயலாத அளவிற்கு பார்ப்பதற்கே சங்கடத்தை விளைவிக்கும் வண்ணம் இருப்பதைப் பார்த்திருப்போம். நமது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக, ஒவ்வொருவர் வீட்டிலும் அன்றாடம் தேவைப்படும் பொருட்கள், எப்போதாவது தேவைப்படும் பொருட்கள், தேவையற்ற பொருட்கள் என மூன்று விதமான பொருட்கள் காணப்படும். இதில் நாம் முதலில் அகற்ற வேண்டியது எப்போதாவது தேவைப்படும் பொருட்களைத்தான். சில வீடுகளில் ஏராளமான பாத்திரங்கள், டேபிள், சேர்கள், சிறு சிறு பொருட்கள் காணப்படும். வீட்டில் தரை முதல் பரண் மேல் உள்ள பொருட்களை ஒரு முறை நோட்டமிடுங்கள்.
ஒரு வருடம் முழுவதும் எடுத்துப் பயன்படுத்தாதப் பொருட்களை எல்லாம் எடுத்து ஓரிடத்தில் அடுக்கி வையுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பாருங்கள். இனி நிச்சயமாக நமக்குத் தேவையில்லை என்ற பொருட்களை வீட்டிலிருந்து தயவு தாட்சண்யம் பார்க்காமல் அகற்றி விடுங்கள்.
பழைய எவர்சில்வர் பாத்திரங்களை தற்போது கடைகளில் விலைக்கு எடுத்துக் கொள்ளுகிறார்கள். தேவையற்ற பாத்திரங்களை அங்கே கொண்டு சென்று போட்டு விடுங்கள். அன்றாடம் வாங்கும் செய்தித்தாள்கள், வார இதழ்களை ஒவ்வொரு மாத முடிவிலும் பழைய பேப்பர் கடையில் போட்டு விடுங்கள்.
அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது எப்போதாவது தேவைப்படும் பொருட்கள். எப்போதாவது ஒன்றிரண்டு முறை தேவைப்படும் பொருட்களை எதற்காக வீட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்? தேவைப்படும்போது வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது நீங்கள் இந்தப் பொருட்களை முடிந்த வரை வீட்டிலிருந்து அகற்றப் பாருங்கள். பல வீடுகளில் குடிபுகுந்தபோது பரண்மேல் அடுக்கி நிரப்பி வைத்த பொருட்கள் பல வருடங்களானாலும் அங்கேயேதான் இருக்கும். இதனால் ஒட்டடை படியும். அழுக்குகள் சேரும். நமது உடல் நலமும் கெடும்.
சமையல் அறையில் அன்றாட உபயோகத்திற்குத் தேவைப்படும் சமையல் பாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை சமையலறைப் பரண் மீது வைத்து விடுங்கள். தற்போது உபயோகிப்பவை பழையதானால் பரண் மீது இருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அன்றாடப் பணிகளை கவனிக்க அல்லது படிக்க வீட்டிற்கு ஒரு டேபிள் சேர் போதும். யாராவது வந்தால் அமர வைக்க மூன்று சேர்கள் போதும். சிலர் தங்கள் வீட்டில் பத்து அல்லது பதினைந்து சேர்களை வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தேவையான இரண்டு மூன்று சேர்களை வைத்துக் கொண்டு மீதமுள்ளதை தேவைப்படும் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ என யாருக்காவது கொடுத்து விடுங்கள். யாருக்கும் தேவையில்லை என்றால் இருக்கவே இருக்கிறது பழைய பொருட்களை வாங்கும் கடை.
பொதுவாக, பெரும்பாலான வீடுகளில் பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் தேவையில்லாததாகத்தான் இருக்கும். தேவையில்லாத பொருட்களை ஏன் பத்திரப்படுத்திப் பாதுகாக்க வேண்டும்? நம் வீட்டை கூடுமானவரை எளிமையாக வைத்துக்கொள்ளப் பழக வேண்டும். சில வீடுகளில் வரவேற்பறை ஷெல்ப்களில் ஏராளமான பொம்மைகளை அடுக்கி வைத்திருப்பார்கள்.
பெரும்பாலும் அவை தூசி படிந்தே காணப்படும். பலர் அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வதும் இல்லை. தூசி படிந்து காணப்படும் பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அழகான, பார்ப்பவர் கண்களைக் கவரும் சில பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்களை ஷெல்ப்புகளில் அழகாக அடுக்கி வைத்து வாரத்திற்கொரு முறை சுத்தம் செய்து வைத்தால் பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும்.
வீட்டில் தூசி மற்றும் ஒட்டடை சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கொரு நாள் வீட்டிலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். நம் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டில் எவ்வளவு பொருட்களை வைத்திருக்கிறோம் என்பதை வைத்து நம்மை எடை போட மாட்டார்கள். நாம் நமது வீட்டை எவ்வளவு எளிமையாக, சுத்தமாக வைத்திருக்கிறோம் என்பதைத்தான் நம் வீட்டிற்கு வருபவர்கள் பார்ப்பார்கள். மேற்சொன்னவற்றை எல்லாம் செய்து பாருங்கள். பிறகு உங்களை அனைவரும் பாராட்டுவார்கள். எளிமையும் சுத்தமுமே அழகு என்பதை மறக்காதீர்கள்.