‘சக மனிதனை நேசிக்க வேண்டும்’ என்று எல்லா மதங்களும் சொல்கின்றன. அதேசமயம் சுய அன்பு மிகவும் முக்கியமானது. அது மிக அதிக சக்தி வாய்ந்தது. சுய அன்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஒன்பது விதமான நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தன்னைத் தானே நேசிப்பதுதான் சுய அன்பு எனப்படுகிறது. சிலர் சுய அன்பை சுயநலம் எனக் கருதுகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. தன்னை முழுமையாக நேசித்தால் மட்டுமே ஒருவரால் பிறரையும் நேசிக்க முடியும். மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும்.
1. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது: ஒருவர் தன் மீது அன்பு கொண்டு நேசிக்கும் போது அவருடைய தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. தான் யார் என்பதையும் தன்னுடைய இலக்கை அடைய முடியும் என்கிற நம்பிக்கையையும் அவருக்கு தருகிறது. அது அவருடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
2. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: ஒருவருக்கு தன்னைப் பற்றிய நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அதிகரிக்கிறது. அவற்றை ஊக்குவிப்பதன் மூலம் மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்க சுய அன்பு உதவுகிறது.
3. தோல்வியிலிருந்து மீண்டு வருதல்: தன்னை நேசிக்கும் ஒருவரால் தன்னுடைய மதிப்பை உணர முடியும். அவரால் வெகு எளிதாக பின்னடைவுகள் மற்றும் சவால்கள், தோல்விகளில் இருந்து மீண்டு வர முடியும்.
4. உறவு மேலாண்மை: ஒருவர் தன்னை நேசிக்கும்போது அவரால் பிறரையும் அதேபோல அன்பு கொண்டு நேசிக்க முடியும். ஆரோக்கியமான எல்லைகளை அமைத்துக் கொண்டு பிறரை அவரால் நேசிக்க முடியும். பிறரை வெகு எளிதாக ஈர்க்க முடியும்.
5. சுய கவனிப்பை மேம்படுத்துகிறது: சுய அன்பு ஒருவரின் உணர்ச்சி மற்றும் மனநலனை கவனித்துக்கொள்ள ஊக்கம் தருகிறது. இதனால் அவரால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நடத்த முடியும். அதோடு அவருடைய மன ஆரோக்கியமும் மேம்படும்.
6. அமைதியை வளர்க்கிறது: தன்னை நேசிக்கும் ஒரு மனிதனால் தன்னுடைய குறைகளையும் சேர்த்தே நேசிக்க முடியும். அதனால் தன்னை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு அவரால் மன அமைதியுடன் நிறைவுடன் வாழ முடியும்.
7. தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது: சுய அன்பு ஒருவருடைய இலக்குகள் மற்றும் கனவுகளைத் தொடரத் தூண்டுகிறது. அவருடைய வாழ்வில் முன்னேற்றத்தை அதிகரித்து வெற்றி பெற்ற மனிதராக வலம் வர உதவுகிறது.
8. ஒரு நேர்மறையான உதாரணம்: ஒருவர் தன்னை நேசிப்பதன் மூலம் மற்றவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவிக்கிறார். அவர் ஒரு நடமாடும் நேர்மறையான உதாரணமாக திகழ்கிறார். அன்பான இரக்கமுள்ள உலகத்தை உருவாக்க உதவுகிறார்.
9. மகிழ்ச்சி: சுய அன்பு அதிக மகிழ்ச்சி மற்றும் மனநிறைவுக்கு வழி வகுக்கிறது. ஏனென்றால், சுய அன்புள்ள மனிதன் தன்னிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் தன்னை நேசிப்பதால் அவரால் பிறருடைய குறைகளையும் பெரிதுபடுத்தாமல் நேசிக்க முடிகிறது. அதனால் எப்போதும் அதிக மகிழ்ச்சியுடன் அவரால் வாழ முடியும்.
இத்தனை நன்மைகளைத் தரும் சுய அன்பை எல்லோருமே வாழ்க்கையில் கடைப்பிடிப்போமே.