இன்ட்ரோவெர்ட்டாக (Introvert), அதாவது உள்முக சிந்தனையாளராக ஒருவர் இருந்தால் அவரை தவறாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள். இன்ட்ரோவெர்ட்டுகள் தனிமையில் இருக்க மட்டுமே விரும்புவார்கள். யாருடனும் பேச மாட்டார்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர் கூச்ச சுபாவியோ அல்லது சமூகத்துடன் கலந்து பழகாதவர் என்றோ பொருள் அல்ல. அவர்களின் சிறப்பு குணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. தனிமை விரும்பிகள்: ‘எக்ஸ்ட்ராவெர்ட்ஸ்’ எனப்படும் கலகலப்பான பேர்வழிகள் பிறருடன் பழகும்போது அவர்களுக்கு ஆற்றல் கிடைத்து விடுகிறது. ஆனால், இன்ட்ரோவெர்ட்டுகள் தனிமையில் இருக்கும்போது மிகவும் சந்தோஷத்துடன் அதை அனுபவிப்பார்கள். ஏனெனில், அவர்கள் தங்களுடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள தனிமை தேவைப்படுகிறது.
2. அர்த்தமுள்ள அரட்டையை விரும்புபவர்கள்: இவர்கள் பார்ட்டிகளில் பிறரைப் பற்றிய கிசுகிசுக்களில் ஈடுபடுவதோ அல்லது தேவையில்லாத பேச்சுக்களிலோ ஈடுபடுவதில்லை. அர்த்தமுள்ள பேச்சுக்களில் மட்டும்தான் ஈடுபடுவார்கள். மேலோட்டமான விஷயங்களைப் பற்றி இவர்கள் பேசுவதில்லை. நல்ல ஆழமான விஷயங்களை அலசி ஆராய்ந்து பேசுவார்கள்.
3. நேர்முக சிந்தனையாளர்கள்: எப்போதும் நேர்மறையாக சிந்திப்பார்கள். முடிவெடுப்பதில் வல்லவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். நிறைய விஷயங்களை அலசி ஆராய்வார்கள். தன்னைப் பற்றிய சுய விழிப்புணர்வும் பிறரை பற்றிய நல்ல புரிதலும் இவர்களிடத்தில் இருக்கும்.
4. கூச்சல், இரைச்சல் பிடிக்காது: மிகப்பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தன்னுடைய ஆற்றல் எல்லாம் வடிந்துவிட்டது போல உணர்வார்கள். பலர் அங்கு கத்திக்கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்தால் அவர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள்.
5. பிறர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பார்கள்: மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடாமல் அமைதியாகவும் ஆழமாகவும் கவனிப்பார்கள். தான் பேசுவதை குறைத்துக்கொண்டு உரையாடலை நீட்டித்துக் கொண்டு செல்ல மாட்டார்கள். ஆனால், பிறர் பேசும் போது அவற்றை நன்கு உள்வாங்கிக் கொள்வார்கள். மற்றவர் மேல் கருணையும் அன்பும் அதிகமாக இருக்கும். அதனால் பிறருக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
6. நட்பு வட்டம்: குறைவான நல்ல நட்பு வட்டம் இவர்களுக்கு இருக்கும். உண்மையான நண்பர்கள், அர்த்தமுள்ள உறவுகள் இவர்களுக்கு இருக்கும். நிறைய போலியான நண்பர்களை விட, உண்மையான அக்கறை கொண்ட சில நண்பர்கள் போதும் என்று இவர்கள் நினைப்பார்கள். அவர்களைப் பொக்கிஷம் போல நினைப்பார்கள். அவர்களுக்காக பிரத்தியேகமாக நேரம் ஒதுக்கி அந்த நட்பை நன்றாக வளர்த்துக் கொள்வார்கள்.
7. பேசும் முன் எதையும் யோசித்துப் பேசுவார்கள்: இவர்கள் ஒருபோதும் சிந்திக்காமல் பேசுவதே கிடையாது. இவர்கள் போதுமான நேரம் எடுத்து சிந்தித்து அதன் பிறகு தங்கள் கருத்துக்களை வெளியே சொல்வார்கள். உணர்ச்சிவசப்பட்டு உடனே பதில் சொல்வதோ அர்த்தமில்லாமல் பேசுவதோ இவர்களுக்குப் பிடிக்காது.
8. எழுத்தில் வல்லவர்கள்: இவர்களுக்கு பேச்சை விட. எழுத்தில்தான் ஆர்வம் அதிகம். உங்களுடைய உணர்வுகளை. எண்ணங்களை எழுத்தில் வடிப்பதில் வல்லவர்கள். போதுமான அளவு நேரம் எடுத்துக்கொண்டு தங்களுடைய எண்ண ஓட்டத்தை எழுத்தில் வடிப்பார்கள். இவர்களுடைய கடிதம் இமெயில் போன்றவை மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.