நம் உடல் ஓர் அற்புதமான, வியத்தகு குணாதிசயம் கொண்ட இயந்திரத்தனமான அமைப்பு கொண்டது. நாம் உண்ணும் உணவின் அடிப்படையில் அது தனது வேலைகளை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கும். உணவின் மூலம் ஏதாவது நச்சு, வைரஸ் அல்லது ஜீரணிக்க இயலாத பொருள் வயிற்றுக்குள் சென்றுவிட்டால், வயிறானது உடனடி நடவடிக்கை எடுத்து அதை வெளியேற்ற முயலும்போது உண்டாவதுதான் வாந்தியும் பேதியும் (Diarrhoea) ஆகும். அதன் பின் உறுப்புகளுக்கு ஏற்படும் சக்தியற்ற நிலையை சரிசெய்ய உண்ண வேண்டிய உணவுகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் இலகுவான ஜீரணத்துக்கு உதவி புரிந்து கழிவுகளையும் கெட்டிப்படுத்தக் கூடியது.
பிளைன் வெள்ளை அரிசி சாதம் குறைவான நார்ச்சத்து கொண்டது. பேதியின் காரணமாய் உண்டான அசௌகரியங்களை களைந்து கழிவுகளை இறுகச் செய்யும். மேற்கொண்டு ஜீரணக் கோளாறு வராமல் பாதுகாக்கும்.
ஆப்பிள் சாஸில் உள்ள பெக்டின் என்ற பொருள் மலத்தை இறுகச் செய்யவும், ஜீரண மண்டலம் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் உதவும்.
வேகவைத்த உருளைக் கிழங்கை உண்ணும்பொழுது அதிலுள்ள அதிகளவு பொட்டாசியமானது ஊட்டச் சத்துக்கள் மற்றும் சக்தியின் இழப்பை சரி செய்யவும், எரிச்சலைத் தவிர்க்கவும் உதவுகிறது. உருளைக் கிழங்கு சுலபமாகவும் ஜீரணமாகும்.
பேதியை குணப்படுத்தி ஜீரண மண்டல உறுப்புகளின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வதில் யோகர்டின் பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது. இதிலுள்ள ப்ரோபயோடிக்ஸ் வீக்கத்தைக் குறைத்து செரிமானம் நல்ல முறையில் நடைபெற உதவி புரிகிறது.
ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் குமட்டலைத் தடுக்கக் கூடிய குணங்கள் கொண்ட இஞ்சி டீ, ஜீரண மண்டல உறுப்புகளை சாந்தப்படுத்தி, பேதியின் தீவிரத்தைக் குறைக்கிறது.
அதிக ஊட்டச் சத்துக்களும் குறைந்த நார்ச் சத்தும் கொண்ட கேரட் சூப் குடிப்பதால் பேதியான காலங்களில் உண்டான நீரிழப்பு மற்றும் வைட்டமின் இழப்புகளும் சரி செய்யப்படுகிறது. வயிறும் சுகமடைகிறது.