
நட்புகள் முறியக் காரணங்கள் பல உள்ளன. முக்கியமாக, ஒருவருக்கொருவர் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பணப்பிரச்னை, எதிர்பார்ப்புகள், நேரமின்மை, பொறாமை போன்றவை நட்பை முறிக்கும். நட்பு முறிவுக்கான சில காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கருத்து வேறுபாடுகள்: கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், அதைப் பெரிதுபடுத்தாமல் இருப்பதும், ஒருவர் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், விட்டுக் கொடுப்பதும், சமாதானமாக செல்ல முயற்சிப்பதும், பிரச்னைகளை தீர்க்கும் வழிகளைத் தேடுவதும் நல்லது. கருத்து வேறுபாடுகள் நட்பில் ஏற்படலாம். ஆனால், அந்தக் கருத்து வேறுபாடுகளை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து நட்பு முறிவடையும் அல்லது தொடரும். ஒருவருக்கொருவர் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளில் வேறுபாடுகள் ஏற்படும் பொழுது அது நட்பில் விரிசலை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
2. பொறாமை: ஒருவர் மற்றவரின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் பொழுது அது நட்பை பாதிக்கும். அதேபோல், வேறு ஏதாவது புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டால், பழைய நண்பர்கள் பொறாமைப்படுவதும், அதை வெளிப்படையாக சொல்லாமல் நடவடிக்கைகள் மற்றும் செயல்களின் மூலம் தெரிவிப்பதும் நட்பு முறியக் காரணமாகிறது. நட்புகள் மற்றும் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் பொறாமை, மன அமைதியை கெடுப்பதுடன், நம்மை சுயநலவாதியாகவும் மாற்றுகிறது. மன அழுத்தம், கோபம் மற்றும் விரக்தி போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் உருவாக்குகிறது.
3. பணப் பிரச்னைகள்: நண்பர்களுக்கு இடையில் பணப்பரிமாற்றம் ஏற்படும் பொழுது நட்பை முறிக்கும் அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடன் வாங்குவதும், கொடுப்பதும் நட்பை முறிக்கும் செயலாக அமைகிறது. அத்துடன் அதைத் திருப்பி செலுத்துவதில் பிரச்னைகள் ஏற்படும்போது நட்பு முறியக் காரணமாகிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க நண்பர்கள் நிதி விஷயங்களில் வெளிப்படையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒருவருக்கொருவர் நிதி நிலைமைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றி பேசிக்கொள்வது பிளவுகளைத் தவிர்க்க உதவும்.
4. நேரமின்மை: நட்பில் தகவல் தொடர்பு என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் பேசுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது புரிந்துகொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டாலோ நட்பு முறிவதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலை, படிப்பு, குடும்பப் பொறுப்புகள், திருமணத்திற்கு பின்பு பொறுப்பு கூடுதல் போன்றவை காரணமாக ஒருவருக்கொருவர் பேசுவதற்கோ, தொடர்பு கொள்வதற்கோ நேரம் இல்லாமல் போய்விடுகிறது. இது சில சமயங்களில் நட்பை பலவீனமாக்கும்.
5. எதிர்பார்ப்புகள்: நட்பில் எதிர்பார்ப்புகள் மற்றும் புரிதலில் உள்ள வேறுபாடுகள் பிளவுகளை ஏற்படுத்தலாம். ஒருவருக்கொருவர் அதிக எதிர்பார்ப்புகளை வைப்பதும், அதை பூர்த்தி செய்ய முடியாமல் போகும்பொழுது அவை நட்பை பெருமளவில் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிறகு நட்பிற்காக அதிக நேரம் செலவிடுவது, நட்பின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது போன்றவை இயலாத காரியமாகி விடுகிறது. இதனால் திருமணத்திற்குப் பிறகு பெண்களின் நட்பில் இது அதிகமாக நடக்கிறது.
6. நம்பிக்கை இழத்தல்: எந்த உறவுக்கும் அடிப்படை நம்பிக்கைதான். நட்பில் மிகவும் முக்கியமான நம்பிக்கையை ஒருவர் உடைக்கும்பொழுது, அதாவது நம்பிக்கை துரோகம் செய்யும்பொழுது அது நட்பை முடிவுக்குக் கொண்டு வரும். சிலர் பழைய நட்பின் நினைவுகளைப் பற்றிக் கொண்டு அதை விட்டு நகர முடியாமல் இருப்பதும், அவர்கள் எதிர்பார்த்த அளவு இப்போது நட்பைத் தொடர முடியாமல் போகும்பொழுது நட்புகள் முறிய காரணமாகி விடுகிறது. ஒருவர் எதிர்பார்ப்பதை மற்றவர் செய்யாமல் போகும்பொழுது அது ஏமாற்றத்திற்கும், நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும்.
7. வாழ்க்கைப் பாதை மாறுபடுதல்: படிப்பு, வேலை விஷயம் தொடர்பாக ஒருவருக்கொருவர் வெவ்வேறு திசைகளில் செல்லும்போது அவர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் ஆர்வங்கள் மாறலாம். இதன் காரணமாக பழைய நண்பர்களுடன் பழகுவது கடினமாகலாம் அல்லது நண்பர்களுக்குள் வேறுபாடுகள் தோன்றலாம்.