இன்றைய விரைவு உலகில், ‘ஸ்டெரெஸ்’, ‘டென்ஷன்’ என்ற வார்த்தைகள் எங்கும் கேட்கப்படுகின்றன. நம் முன்னோர்கள் அறியாதவை இவை. இன்று
அழுத்தத்திற்கு கலர் கலராக விதம் விதமான மருந்துகள் உள்ளன. மனஅழுத்தத்தை அறியும் ‘ஹெக்சோஸ்கின்’ என்ற சட்டையைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது.
“பிரச்னையை எதிர்கொள்ளத் திறன் இல்லாதபோதும், தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இல்லாதபோதும், பிரிவு அல்லது மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலை வரும்போதும், நம்மால் தாங்க முடியாத அளவுக்கு மனம் துயரடைகிறது. வாழ்க்கை என்றால் எல்லாமும் இருக்கும், சிரிப்பும் அழுகையும் கோபமும் வருத்தமும் கலந்ததுதான் வாழ்க்கை என்ற புரிந்துணர்வு ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயம் தேவை. எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். இந்த நொடிதான் நிச்சயம். அதில் வாழப்பழகு... வேண்டியவரின் சாவு, பெரிய இழப்புதான். அதைவிட பெரிய இழப்பு, நமக்குள்ளே உள்ள மனதை சாகடிப்பதுதான்...” என்கிறார் ஜெஸிக்கா பர்ஃஸ்ட் என்ற எழுத்தாளர்.
மனதைத் தெளிவாக வைத்துக்கொள்ள பல டெக்னிக்குகள் பின்பற்றப்படுகின்றன. சிரிப்பு தலைசிறந்த நிவாரணி. ‘கடவுளுக்கும் சிரிப்பு பிடிக்கும்’ என்கிறார் பிளேட்டோ. லாஃபிங் புத்தா உருவத்தைப் பார்த்த உடன் நமக்கும் சிரிப்பு தொற்றிக் கொள்கிறதுதானே? வில்லியம் ஃபிரை என்ற அமெரிக்கப் பேராசிரியர், “வயிறு குலங்கச் சிரிப்பது ‘ஏரோபிக்எக்ஸர்’ ஸைக்கு தரப்பட்ட மருந்து ஸ்ட்ரெஸ்ஸை உருவாக்கும் ஹார்மோன்களைத் தடுக்குகிறது. அதே பணியைச் சிரிப்பு செய்கிறது. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பார். 1997ல், மாரடைப்பு வந்த 48 நோயாளிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 50% சதவிகித நபர்களை காமெடி நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தனர். அவர்களில் இருவருக்கு மட்டுமே மாரடைப்பு வந்தது. மீதி பாதிப்பேரில் 10 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நம் ஒவ்வொருவருக்குள்ளும், குறுகுறுக்கும் குழந்தை மனமும், சிரிப்பை ஏற்படுத்தும் கோமாளியும் இருக்கிறார்கள். வாழ்க்கைப் பிரச்னைகளால் அவர்களை விரட்டி விடுகிறோம். நகைச்சுவையான சினிமா, காமெடி சீரியல்கள், கார்ட்டூன்களைப் பார்த்து, மனதை பறவை இறகாய் வைத்துக் கொள்ள வேண்டும்.