யாராவது நம்மை வார்த்தைகளால் அல்லது செயல்களால் காயப்படுத்தி விட்டாலோ அல்லது நமக்குத் தீங்கிழைத்து விட்டாலோ அவர்களை தண்டிப்பதற்கு பதில், அவர்களை மனதார மன்னித்து விட்டால் நமக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
சில சமயங்களில் நாம் பிறருக்கு அளவற்ற நன்மைகள் செய்திருப்போம். ஆனால், அவற்றையெல்லாம் நினைத்துக் கூட பார்க்காமல் அவர்கள் நம்மை காயப்படுத்தி, துன்புறுத்தி விடுவார்கள். இப்போது நமது மனம் அவர்கள் மீது கோபமும் கசப்பும் கொள்ளும். நமக்கு இப்படி ஒரு கெடுதலை செய்து விட்டார்களே என்று எண்ணி எண்ணி மாய்ந்து போவோம்.
அந்த துரோகத்தை நினைத்து நினைத்து பார்க்கும்போது நம் மனதையும் உடலையும் நாம் காயப்படுத்திக் கொள்கிறோம். மன அமைதியும் நிம்மதியும் தொலைந்துபோய் மகிழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். அவர்கள் செய்த தீய செயலை மறக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களை மனதார மன்னிக்க வேண்டும். மன்னிக்காமல் இருப்பதன் மூலம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறோம். மனக் காயத்திற்கு மன்னிப்பு எனும் மாமருந்தை பூச வேண்டும். நம்மிடம் சுய இரக்கம் பேண வேண்டும். நம்மை நாமே கருணையுடன் பொறுமையுடன் புரிதலுடன் நடத்த வேண்டும். நடந்துபோன சம்பவங்களை நினைத்து நினைத்து பார்ப்பதன் மூலம் நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம்.
தவறு செய்த நபர்களை மன்னித்தல் என்றால் இனி மேலும் அவர்கள் செய்யப்போகும் தீமைகளை சகித்துக் கொள்வதோ அல்லது அவர்களை மீண்டும் உங்கள் வாழ்வில் அனுமதிப்பதோ என்பது அல்ல. எதிர்கால தீங்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது அவசியம். மீண்டும் பழைய மாதிரியே அந்த நபரோடு உறவை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வருங்காலத்தில் அவர்கள் நமக்கு தீங்கு செய்வார்களோ என்று நினைத்து கவலைப்படாமல், என்றென்றும் தீயவர்கள்தான் என்று அவர்கள் மீது தீர்ப்பும் எழுதாமல் நிகழ்காலத்தில் அவர்களை மனதார மன்னித்து விட வேண்டும். இதனால் மனதிற்கு அதிக அமைதியும் தெளிவும் கிட்டும்.
வலி மிகுந்த அனுபவங்களை புரிந்துகொள்வது கடினமாக இருக்கும் அதே நேரத்தில் அவை வளர்ச்சி, ஞானம், இரக்கம், பொறுமை, நிதானம், அன்பு, கருணை போன்ற நல்ல குணங்களை ஆழமாக என்னுள் அதிகரிக்கச் செய்து இருக்கிறது என்று பக்குவப்பட்ட மனதோடு நினைக்க வேண்டும். இந்தப் பாடத்தை கற்றுக்கொடுத்த அவர்களுக்கு மனதார நன்றி சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளலாம்.
தீங்கு செய்தவரையே மன்னிக்கும்போது மனதில் விவரிக்க முடியாத ஆழ்ந்த அமைதியும் ஆனந்தமும் கிட்டும். இதை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே புரியும். தவறு செய்பவர்களை மன்னிப்போம்! நாம் மன நிறைவோடு வாழ்வோம்!