
ஒருவரின் வாழ்வில் மங்கல விஷயங்கள் ஏதாவது நடைபெற்றால் பெரியவர்களிடம் ஆசி பெறுவது அக்காலம் முதல் இக்காலம் வரை நடைபெற்று வரும் வழக்கமாகும். தம்மை விட வயதில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவதன் தாத்பரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பெரியோர்களிடம் ஆசி பெறுவது என்பது நம் கலாசாரத்தோடு இரண்டறக் கலந்த ஒரு பழக்கமாக உள்ளது. விசேஷ தினங்களில் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் காலில் விழுவது, கூழை கும்பிடுதான் போடக் கூடாதே தவிர, பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்குவதில் கலாசார மற்றும் விஞ்ஞான அடிப்படையும் உண்டு. கலாசாரம் என்பது மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதையை வெளிப்படுத்தும் முறையாகும்.
நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு மூல காரணமாக இருந்த தாய், தந்தையர் காலில் விழுந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாதத்தைத் தொட்டு வணங்குகிறோம். பெரியோர்கள், வயதானவர்களின் காலில் விழுந்து ஆசி பெறும்போது நம்மிடம் சக்தி அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பெரியோர்களின் காலில் விழுந்து பெறும் ஆசி என்பது, நமக்கு மிகப் பெரிய சக்தி எனும் பலத்தைக் கொடுக்கிறது.
பாதங்களில் அதிகமான சக்தி ஓட்டம் நடைபெறுவதாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் பெரியோர்களின் காலில் விழும் பழக்கம். ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும்போது, அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுகிறோம் எனில், அவர்களின் சக்தி நமக்கும் கிடைப்பதோடு, அவர்களின் காலை தொடுவதன் மூலம் ஒரு சக்தி பரிமாற்றம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, அவர்களிடம் ஆசி பெறும்போது சொல்லப்படும் வார்த்தைகள் நமது பல பாவங்களையும் தோஷங்களையும் கூட போக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கோயில்களுக்குச் சென்றால் ஆண்கள் உடம்பு முழுவதும் தரையில் படும்படி விழுந்து கடவுளை ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ செய்ய வேண்டும். அதேபோல், பெண்கள் ‘பஞ்சாங்க நமஸ்காரம்’ செய்ய வேண்டும். அதாவது தலை, கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் படும்படி வணங்க வேண்டும். இப்படி வணங்குவதன் மூலம் நமது உடல் வழியாக கோயிலில் இருக்கும் நேர்மறை ஆற்றலும், சக்தியும் நம் உடலுக்குள் செல்லும் என்பது ஐதீகம். பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது மட்டுமல்ல, ஆசீர்வாதம் செய்வதும் ஒருவருக்கு சக்தியை அதிகரிக்க வல்லது.
கோயில்களில் கடவுள் சக்தி ரூபமாக விளங்குவதால் அங்கிருக்கும் சக்தியை பெற்றுக்கொள்ள மனமும், உடலும் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பாலானோர் மனக்குழப்பத்தில் இருக்கும்போதுதான் கோயிலுக்குச் செல்வதால், மனமும் அறிவும் நேர்மறை ஆற்றலையும் சக்தியையும் பெரும் தன்மையை இழக்கிறார்கள். உடலுக்கும், கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ஒருவரை ஆசிர்வாதம் செய்யும்போது, பெண்கள் என்றால், ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்றும், ஆண்கள் என்றால், ‘தீர்க்காயுஷ்மான் பவ’ எனவும் வாழ்த்த வேண்டும். இதற்கு நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று பொருள். மணமக்களை ஆசிர்வதிக்கும்போது, ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்தலாம்.
மார்கண்டேயன், ஆஞ்சனேயர் போன்றோர் இறைவன் மற்றும் தேவாதி தேவர்களின் ஆசிகளைப் பெற்றே இன்றும் சிரஞ்சீவியாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.