பொறாமை தீயை அகற்றி மனம் குளிர வாழ்வோம்!

Let us remove the fire of jealousy and live coolly
Let us remove the fire of jealousy and live coollyhttps://angusam.com
Published on

வாழ்க்கையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது என்பது அரிதான விஷயம். நிச்சயம் கோடீஸ்வரர்களாக இருந்தாலுமே அவர்களுக்கென்று ஒருசில குறைகளுடனே படைக்கப்பட்டிருப்பார்கள். இதில் அடுத்தவரைப் பார்த்து நாம் கொள்ளும் பொறாமையும் ஆவேசமும், ‘நம்மால் இது முடியவில்லையே’ எனும் ஆதங்கத்தையும் அகற்றினால் மட்டுமே நம்மால் நிம்மதியுடன் நமது வாழ்வை வாழ முடியும்.

கை, கால், காது, கண், நாக்கு என அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும்போது, ‘கடவுளே எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்ததற்கு நன்றி’ என்று இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், நாம் அதை மறந்து விடுகிறோம். அதேசமயம், தெருவில், யாராவது கலகலவென்று சிரித்துப் பேசி செல்வதைப் பார்த்தால் ‘சிரிப்பைப் பார்... சிரிப்பை! ரோட்டில் என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு...’ என்று இயற்கையாகவே பொறாமையில் மனம் வெம்முகிறது.

அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, சிலரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இந்த பொறாமை குணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மகாபாரதக் கதை ஒன்றை அறிந்திருப்பீர்கள்.

திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி அரண்மனையில் சுகவாசியாக அனைத்து வசதிகளையும் அனுபவித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். திருதராஷ்டிரன் தம்பியான பாண்டுவின் மனைவி குந்தியோ, காட்டில் ஒரு வசதியும் இல்லாத சூழலில் வசித்து வந்தாள்.

இந்த நிலையில், குந்தி தேவிக்கு, காந்தாரிக்கு முன்னரே குழந்தை பிறந்து விட்டது. இந்தச் செய்தி நாட்டில் வாழ்ந்த காந்தாரிக்கு தெரிந்ததும், அவளுக்கு பொறுக்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் பொறாமைத் தீ, எரிமலை குழம்பாய் வெடித்து வழிந்தது. பொறாமை உணர்வைத் தாள முடியாமல் காந்தாரி ஒரு கட்டத்தில் ஒரு அம்மிக் குழவியைக் எடுத்து தனது வயிற்றில் இடித்துக் கொண்டாள். அவள் வயிற்றில் இருந்த  கரு சிதைந்து, பல சதைக் கூறுகளாக சிதறின.

இதையும் படியுங்கள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் தெரியுமா?
Let us remove the fire of jealousy and live coolly

வியாச முனிவர் அந்த சதை கூறுகளை, நூற்றியொரு குடங்களில் இட, துரியோதனன் முதலான நூறு பேர்களும், துச்சலை என்ற ஒரு பெண்ணும் உருவாயினர். தாயின் இத்தகைய பொறாமை குணத்தின் காரணமாகவே கௌரவர்கள் இயல்பிலேயே பொறாமை குணம் படைத்தவர்களாக விளங்கி, பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமையால் போரிட்டு அழிந்தனர்.

நாம் யாரைக் கண்டு பொறாமைப்படுகிறோமோ, அவர்களுக்கு ஒன்றும் நேராது; மாறாக பொறாமைப்படும் நமக்குத்தான் கேடு விளையும். எனவே, பொறாமையை மனதிலிருந்து விலக்கி, நற்சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டால் நிகழ்பவை அனைத்தும் நன்மையையே தரும் என்பது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com