
மூன்று குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் என ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்துக்கு மூன்று உயர்ரக மாம்பழங்கள் தருகிறார் ஒருவர். குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் கொள்ளை ஆசை. அது அப்பா, அம்மாவுக்கும் தெரியும். அதனால், "நாங்க இப்போதான் சாப்பாடு சாப்பிட்டோம். எங்களால மாம்பழம் சாப்பிட முடியாது. நீங்க சாப்பிடுங்க" என ஆளுக்கு ஒரு மாம்பழத்தைக் கொடுத்தனர். குழந்தைகள் சந்தோஷமாகச் சாப்பிட்டனர்.
இப்படிச் சின்னச்சின்னத் தியாகங்கள் தொடங்கி, பெரிய தியாகங்கள் வரை செய்தே குழந்தைகளைப் பெற்றோர்கள் வளர்க்கின்றனர். குறிப்பாக அம்மாக்களின் தியாகம் அளப்பரியது.
வீட்டில் சும்மாதானே இருக்கிறாய்' என்று ஹோம் மேக்கர்களாக இருக்கும் பெண்களைப் பலரும் வார்த்தைகளால் காயப்படுத்துவதுண்டு. அப்படிச் 'கம்மா' இருக்கும் ஒரு பெண்ணின் நேரம் எப்படிக் கழிகிறது. என்பதை உணர்த்தும் ஒரு சிறிய வீடியோ காட்சியைச் சமீபத்தில் பார்த்தோம்.
அதிகாலையில் பரபரப்பாக எழுந்து சமைத்து முடித்து, குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி அனுப்பிவிட்டு, கணவருக்கும் எல்லாம் செய்துகொடுத்து அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, சற்றே ஓய்வாக அமர்ந்து காபி குடிக்கிறார் ஒரு பெண். ஒரு மிடறு குடிப்பதற்கு முன்பாகவே காலிங்பெல் அடிக்கிறது, கதவைத் திறந்தால், கொரியரில் ஒரு பார்சல் வருகிறது. அதை வாங்கி டேபிளில் வைக்கும்போது பார்த்தால், பைக் சாவியைத் தேடுகிறேன் என்று டேபிளைக் கலைத்துப் போட்டிருந்தார் கணவர்.
டேபிளை ஒழுங்குபடுத்தி அடுக்கிவிட்டுக் குளித்து பார்த்தால், வீடும் குப்பையாகக் கிடக்கிறது, ஹாலைப் பெருக்கியபடி பெட்ரூமுக்குள் போனால், மொட்டை மாடியில் காயப்போட்டு எடுத்து வந்திருந்த துணிகள் அப்படியே படுக்கையில் கிடந்தன. அவற்றை மடித்து பீரோவில் வைத்துவிட்டு நிமிர்ந்தால், மீண்டும் காலிங் பெல் அடித்தது.தண்ணீர் கேன் போடுபவர் வந்திருந்தார். கேனை வாங்கி உருட்டி எடுத்துப்போய் கிச்சனில் வைக்கும்போது, சமையல் செய்து முடித்த பாத்திரங்கள் சிங்க் முழுக்க நிரம்பியிருந்தன.
அவற்றை எல்லாம் கழுவிக் கவிழ்த்துவிட்டு நிமிர்ந்தபோதுதான், பெருக்கும் வேலையைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்தோம் என்பது அவருக்கு உறைத்தது. பெருக்கி முடிக்கும்போது, பாத்ரூமில் சேர்ந்திருந்த அழுக்குத் துணிகள் நினைவுக்கு வந்தன. அவற்றை வாஷிங் மெஷினில் போட்டு ஓடவிட்டு ஹாலுக்கு வந்து ஃபேன் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபோதுதான் மீண்டும் காபியைப் பார்க்கிறார். அது ஆறிப்போய் இருந்தது. காலையில் பல் துலக்கியதிலிருந்து, தான் எதுவுமே சாப்பிடவில்லை என்பது அப்போதுதான் அவருக்கு உறைக்கிறது.
ஒன்றரை நிமிட நேரமே ஓடும் இந்தக்காட்சி, பார்த்து பல நாட்கள் ஆனபின்பும் மனதைவிட்டு அகலவில்லை. பெரும்பாலான பெண்களின் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நகர்கிறது.
குழந்தைகள் தினத்தில் எப்போதும் குழந்தைகளைப் பற்றியே பேசுகிறோம். அத்துடன், குழந்தைகளிடம் அம்மாக்களின் அருமை பற்றியும் பேசுவோம். பெற்றோர்களின் உழைப்பையும் தியாகத்தையும் பேசுவோம். அவர்கள் பொறுப்பான தலைமுறையாக உருவெடுப்பார்கள்.