‘எதிர்பார்ப்பு இல்லாத மனிதர்களிடம் ஏமாற்றமும் குறைவாக உள்ளது’ - இது மகிழ்வான வாழ்க்கைக்கு நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய பொன்மொழி. இன்றைய காலச்சூழலில் வாழ்க்கை என்பது பலவிதமான எதிர்பார்ப்புகளோடு பரபரப்புடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது. ‘என்னால் எல்லாம் முடியும். எனக்கு எல்லாம் வேண்டும்’ என்கிற பிடிவாதமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதனால்தான் பொருள் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கூட முதுமையின்போது இயலாமையால் தவிக்கிறார்கள்.
அந்த நேரத்தில், வாழ்வில் பெற்ற அனைத்து நலன்களும் வீண் என்றே அவர்கள் கருதுகின்றனர். எதிர்பார்ப்பற்ற வாழ்வில் வேதனைகள் இல்லை என்ற சிந்தனையை உள்வாங்கி வாழ்வை நகர்த்தினால் நாம் இயல்பாக வாழ முடியும்.
ஒரு கிராமத்துக்கு துறவி ஒருவர் வருகிறார். ‘அவரிடம் சென்றால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து போகிறது’ என சென்றவர்கள் கூற, ‘தனது வாழ்வில்தான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லையே’ என்ற புலம்பலோடு இளைஞன் ஒருவன் துறவியை தேடிச் செல்கிறான்.
துறவியைப் பார்த்ததும் தனது அனைத்து குறைகளையும் கொட்டித் தீர்க்கிறான். சில நிமிட மவுனத்துக்கு பிறகு அந்த துறவி இளைஞனை பார்த்து, ‘உன் வாழ்வின் எதிர்பார்ப்பு என்ன?’ என்று கேட்கிறார். உடனே இளைஞன், ‘எனக்கு மகிழ்ச்சி வேண்டும்’ என்று துறவியிடம் கூறினான்.
‘மகிழ்ச்சி வேண்டும் எனக் கேட்கும் நீ, மகிழ்ச்சிக்காக என்ன செய்தாய்? எதை எல்லாம் இதுவரை இழந்திருக்கிறாய்?’ என்று துறவி கேட்டார்.
துறவியின் கேள்விக்கு இளைஞனால் எந்த பதிலும் கூற முடியவில்லை. அவன் அப்படியே அமைதியாக நிற்கிறான். ஆம், அவன் அந்தத் துறவியினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கேட்டான். மகிழ்ச்சி என்பது கடையில் விற்கும் பொருளா என்ன? கேட்டதும் கிடைக்க. அதற்கான விலையாக எதையும் போடாமல் மகிழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை அந்த இளைஞனுக்கு புரிய வைத்தார் துறவி.
அந்த இளைஞனைப் போலத்தான் நாமும் ஏராளமான எதிர்பார்ப்புகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு வாழ்கின்றோம். ஆனால், நல்லது எதையும் இழப்பதற்கு நாம் முன்வருவதில்லை.
நல்ல கல்வி, வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கத் தயாராக இருக்க வேண்டும். நல்ல சம்பளம் வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் அதற்கான உழைப்பை அதிகப்படுத்த வேண்டும். இதுபோன்ற விலைகளைத் தந்தால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகாது. இது பொதுவான ஆசைகள். ஆனால், அடுத்தவரைப் பார்த்து அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப்பட்டு எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும்போதுதான் வாழ்வில் சலிப்பு, சங்கடங்கள் வருகின்றன.
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் உதவிக்கு நன்றியை கூட எதிர்பார்க்கக் கூடாது இந்தக் காலத்தில். முக்கியமாக எல்லாம் வேண்டும் என எதிர்பார்க்காமல் தேவைக்கு இருக்கிறது இனி எதுவுமே வேண்டாம் என சிந்திப்பது மிகவும் நல்லது.
எதிர்பார்ப்புகள் அற்று வாழ்வது சற்று கடினம்தான். ஆனால், அதே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படும்போது அதனால் உடல்நலமும் மனநலமும் பாதித்து அல்லல் படப்போவதும் நாம்தான் என்பதை மனதில் நிறுத்தி எதிர்பார்ப்பற்ற வாழ்வை வாழ்ந்து ஏமாற்றங்களைத் தவிர்ப்போம்.