செவிமடுப்போம் செம்மையாக!

செவிமடுப்போம் செம்மையாக!
Published on

ம்மில் எத்தனை பேர் பிறர் பேசும்போது குறுக்கிடாமல், கவனமாகக் கேட்கிறோம்? கண்கள் மட்டும் அவர்கள் மீது நிலைத்திருக்கும். மனம் எங்கோ அலைபாயும். எதிராளி பேசத்தொடங்கும்போதே குறுக்கிட்டு, நம் கருத்தைச் சொல்கிறோம். ஏனெனில், நாம் பிறரைச் சந்திக்கும்போது நம்மையே முன்னிலைப்படுத்தி, நமது பெருமைகளையும், சாதனைகளையும் கூறி நம்மை முக்கியமானவராகக் காட்டுவதில் கவனம் செலுத்துவதுதான் இதற்குக் காரணம்.

ஒருவருடைய பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்பதாலேயே பெரும்பாலான தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கின்றனர். பெற்றோர் தங்களின் பிள்ளைகள் சொல்வதைக் கவனமாகக் கேட்டால், அவர்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகளைக்கூட தடுக்கலாம். நம்மிடம் யாரேனும் தங்கள் துயரங்களைக் கொட்டும்போது, கவனமாகக் கேட்க வேண்டும். இதனால் அவர்களின் மன பாரம் குறையும். முடிந்தால் அவர்களின் பிரச்னைக்கு தீர்வு சொல்லலாம்.

எதிராளி தனது நிலையைச் சொல்ல அவகாசம் தந்து, அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டாலே வீடு மற்றும் பணி செய்யும் இடம் அமைதிப்பூங்காவாக திகழும். சிலருக்கு, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக லீவு எடுத்தால் கோபம் தலைக்கேறும். அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போய் இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது முக்கியக் காரணமாக இருக்கலாம். அவர் மறுபடியும் வேலைக்கு வந்ததும், அவரைப் பேச விடாமல் கத்தித் தீர்த்த பின், பணிப்பெண் காரணம் சொல்லும்போது, ‘அவசரப்பட்டு விட்டோமோ’ என்று குற்ற உணர்வு குறுகுறுக்கும். அதற்கு பதில், அவர் சொல்வதை பொறுமையாக செவிமடுத்தால் அடுத்த முறை அனாவசியமாக லீவு எடுக்க மாட்டார் அவர்.

பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்காமல்போனால் நஷ்டம் நமக்குத்தான். ஒரு நிறுவனத்தின் எம்.டி. ஒரு நாள் திடீரென்று தன்னுடைய கிளை அலுவலகத்துக்கு விசிட் செய்தார், அலுவலர்கள் முறையாக வேலை செய்கிறார்களா என்று பார்ப்பதற்காக. அங்கே சிலர் வேலை செய்யாமல் போனில் அரட்டை அடித்துக் கொண்டும், இன்னும் சிலர் தனது சீட்டில் இல்லாமல் கேண்டீனில் பொழுதுபோக்கிக் கொண்டும் இருந்ததைப் பார்த்த எம்.டி.க்கு ஆத்திரம் வந்தது.

ஒரு இளைஞன் பால்கனி பக்கம் நின்று கொண்டு ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் காதுகளில் இயர் போன் மாட்டி இருந்தான். எம்.டி.க்கு பி.பி எகிறியது. ‘’இங்க வா’’  என்று அவனை அழைத்து, ‘’வேலை செய்யாம இங்கே வெட்டியா நின்னுட்டு பாட்டு கேட்டுட்டு இருக்கியா?’’ என்று கத்தினார். அவன் ஏதோ சொல்ல முயல, ‘’இதுக்குதான் உனக்குத் தண்டச் சம்பளம் கொடுத்து உட்கார வெச்சிருக்கா இந்த ஆபீஸ்ல?’’ என்று கோபமாகக் கத்தினார்.

மறுபடியும் அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘’நீ ஒண்ணும் சொல்லி சமாளிக்க பார்க்காதே. நான்தான் உன்னை கையும் களவுமாப் புடிச்சிட்டேன்ல. இந்த மாதிரி வெட்டித்தனமா இருக்குற ஆள் இனிமே என் கம்பெனிக்கு தேவையே கிடையாது. உனக்கு மாதம் எவ்வளவு சம்பளம்?’’ என்று கேட்க, அவன், ‘’10,000 ரூபாய் சார். ஆனால்’’ என்று மறுபடியும் அவன் ஏதோ சொல்ல முயல, “ஷட் அப்’’ என்று இரைந்தார்.

தனது கோட் பாக்கட்டில் இருந்து செக் புக் எடுத்து, ‘’உன் பேரு என்ன?’’ என்று கேட்டு, ‘’இந்தா உன் ஆறு மாத சம்பளம் 60,000 ரூபாய்’’ என்று கையெழுத்து போட்டு அவனிடம் கொடுத்தார். ‘’இனிமே இந்த ஆபீஸ்ல உனக்கு வேலை இல்லை. கிளம்பு’’ என்றதும் அவன் மறுபடியும் ஏதோ  சொல்ல வர, ‘’கிளம்பு முதல்ல’’ என்று அதிகபட்ச கோபத்தில் கத்த, அவன் கையில் செக்குடன் ஓடியே போனான்.

அப்போது அங்கே வந்த கம்பெனி மேனேஜர், ‘’சார், ஏன் அந்தப் பையன் இப்படி ஓடுறான்?’’ என்று கேட்க, எம்.டி.யும் விஷயத்தை சொன்னார், ‘’சார், அவன் கொரியர் டெலிவரி பண்ண வந்தவன் சார் ‘’ என்று மேனேஜர் அலற,  எம்.டி.க்கு தலை சுற்றியது. ‘’அடக்கடவுளே! அவனை பேசவிட்டு கேட்டு இருந்தால் 60 ஆயிரம் கஷ்டம் ஏற்பட்டிருக்காதே’’ என்று வருந்தினார்.

இதுதான் நிதர்சனம். பல நேரங்களில் வாய்க்கு வேலை தருவதை நிறுத்தி விட்டு, காதுகளைத் திறந்து வைத்து கேட்க ஆரம்பித்தாலே சிக்கல்கள் தீர்ந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com