‘நவதி விழா’ பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

Navathi Festival
Navathi Festival

ரு மனிதன் தொண்ணூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது என்பது மாபெரும் சாதனை. மேலும், ஒரு மனிதன் தொண்ணூறு ஆண்டுகள் தனது துணையுடன் மனநிறைவுடன் வாழ்வாங்கு வாழ்வது என்பது பாக்கியம். இந்த சாதனையை தொண்ணூறு வயது நிறைந்தவருக்கு அவர்களுடைய பிள்ளைகள், பெயரன், பெயர்த்தி, கொள்ளுப் பெயரன், கொள்ளுப் பெயர்த்திகள் இணைந்து ஒரு நன்னாளில் உற்றார் உறவினர்களை அன்போடு அழைத்து ஒரு திருமணத்தைப் போல கோலாகலமாக நடத்துவதுதான் ‘நவதி விழா’ என அழைக்கப்படுகிறது.

வழக்கமாக நாம் 61வது வயதின் தொடக்கத்தில் நடத்தப்படும் ஷஷ்டியப்த பூர்த்தி, 70வது வயதின் தொடக்கத்தில் நடத்தப்படும் பீமரத சாந்தி, 80 வருடங்கள் 8 மாதங்கள் முடிந்ததும் நடத்தப்படும் சதாபிஷேகம் முதலான விழாக்களை அதிகம் அறிந்திருக்கிறோம். இத்தகைய விழாக்களில் கலந்து கொண்டு ஆசியும் பெற்றிருக்கிறோம்.  தொண்ணூறு வயது பூர்த்தியான ஒரு நிறை வாழ்வு வாழ்ந்த மனிதருக்கு நடத்தப்படும் நவதி விழாவைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.

நவா என்ற சொல் ஒன்பதைக் குறிக்கிறது. ஒரு தசாப்தம் என்பது பத்து வருட காலமாகும். நவதி என்பது ஒன்பது தசாப்தங்களின் நிறைவைக் குறிக்கிறது. தொண்ணூறு வயது நிறைவடைந்த ஒருவருக்கு அவருடைய நட்சத்திரத்தின் அடிப்படையில் ஒரு நாளைத் தேர்வு செய்து அத்தம்பதியருக்கு நவதி விழாவானது பிள்ளைகள், பெயரன், பெயர்த்திகள், கொள்ளுப் பெயரன், பெயர்த்திகளால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கழுத்து விசிறிகள், கழுத்து ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வோம்!
Navathi Festival

நவதி விழாவின்போது கனகாபிஷேகம் செய்வது வழக்கம்.  தங்க நாணயங்களை அவர்கள் மீது பொழிவதே கனகாபிஷேகம் எனப்படுகிறது. நான்காவது தலைமுறையின் கொள்ளுப் பேரன் முதல் தலைமுறை தாத்தாக்களுக்கு கனகாபிஷேகம் செய்யும் பாக்கியம் பெற்றவராவார். நான்காவது தலைமுறையில் கொள்ளுப் பேரன் இல்லாதவர்களுக்கு கனகாபிஷேகம் இன்றி நவதி விழா மட்டுமே நடத்தப்படுவது மரபு. இந்த நன்னாளில் உதகசாந்தி மற்றும் ஆயுஷ் ஹோமம் முதலாவை முக்கியமாக செய்யப்படுகின்றன.

பொதுவாக, நவதி விழா மற்றும் கனகாபிஷேகத்தைக் கொண்டாடும் அதிர்ஷ்டம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இந்த விழாவில் கலந்து கொண்டு ஆசி பெறும் பாக்கியமும் பலருக்குக் கிடைப்பதில்லை.  இதனால்தான் இந்த விழா கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விழாவில் சம்பிரதாயச் சடங்குகள் முடிந்ததும் பரிசுப் பொருட்களை வழங்கி நிறை வாழ்வு வாழ்ந்த பெரியோர்களை தம்பதி சமேதராக சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து அவர்களின் ஆசி பெறுவது மரபு.  இந்த விழாவில் கலந்து கொண்டு தம்பதி சமேதராக ஆசி பெறும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும் என்பதும் ஐதீகம். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளாவிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com