Abbreviation codes
Abbreviation codes

சுருக்கக் குறியீடுகள் பற்றித் தெரிந்து கொள்வோமா?

Published on

ரு சொல் (Word) அல்லது சொற்றொடரின் (Phrase) சுருக்கப்பட்ட வடிவமே ‘சுருக்கக் குறியீடு’ என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Abbreviation என்று அழைக்கிறார்கள். சுருக்கக் குறியீடுகளைப் பற்றியும் அவை எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும் இந்த பதிவில் அறிந்து கொள்ளுவோம்.

ஆங்கிலத்தில் சுருக்கக் குறியீடுகள் அதிக அளவில் பயன்படுத்தபடுகின்றன. ஆங்கிலத்தில் Doctor என்பது Dr. என்று குறிப்பிடப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதுபோல, பேராசிரியர் அதாவது Professor என்பது Prof. என்று குறிப்பிடப்படுகிறது. காலை நேரமானது ஆங்கிலத்தில் AM என்று சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. Ante Meridian என்பதன் சுருக்கமே AM ஆகும். பெரும்பாலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொற்றொடர்களுக்கே சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சுருக்கக் குறியீடு SMS ஆகும். Short message service என்பதன் சுருக்கமே SMS ஆகும். இதுபோல ஒவ்வொரு துறையிலும் சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழிலும் சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, எ.கா. என்ற சுருக்கக் குறியீட்டை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இதற்கு ‘எடுத்துக்காட்டு’ என்று பொருள். தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவோர் தமது கட்டுரைகளில் சுருக்கக் குறியீடுகளை அதிக அளவில் பயன்படுத்துவர். ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வேட்டின் அடிக்குறிப்பில் இடத்திற்கேற்பவும், பொருளுக்கேற்பவும் சுருக்கக் குறியீடுகளை பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக, பக்கம் என்பதை ப. என்றும் பக்கங்கள் என்பதை பக். என்றும் முற்காட்டிய நூலிலிருந்து என்பதை மு.நூ. என்றும், பதிப்பாசிரியர் என்பதை பதி. என்றும், அதன் பொருளாவது என்பதை அ.பொ. என்றும், மொழிபெயர்ப்பு என்பதை மொ.பெ. என்றும் குறிப்பட்டு பயன்படுத்துவர்.

மாநில அரசு அலுவலகங்களிலிருந்து நமக்கு வரும் கடிதங்களில் ந.க.எண்: என்று ஒரு பார்வை எண்ணைக் குறிப்பிட்டு தேதியையும் குறிப்பிட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ந.க.எண்: 00000/2024/அ1 நாள்: 00.00.2024 என்பது போல ஒரு எண்ணும் தேதியும் மாநில அரசு கடிதங்களின் மேற்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
‘மலை பேய்கள்’ என அழைக்கப்படும் பனிச் சிறுத்தைகளின் சிறப்பியல்புகள்!
Abbreviation codes

ந.க.எண் மட்டுமின்றி. ஓ.மு.எண், மூ.மு.எண், ப.மு.எண், நி.மு.எண், தொ.மு.எண், ப.வெ.எண், நே.மு.க.எண் என ஒவ்வொரு கடிதத்திலும் இதுபோன்ற சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவை ஒவ்வொன்றும் அந்தக் கடிதத்தின் பொருள் சார்ந்த ஒரு அர்த்தத்தைக் கொண்டிருக்கும். அதைப் பற்றி இப்போது நாம் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

ந.க.எண் என்றால் ‘நடப்புக் கடித எண்’ என்பதாகும். தொண்ணூறு சதவிகித மாநில அரசுக் கடிதங்களில் இந்த எண்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். இதைத்தவிர வேறு சில எண்களும் நடைமுறைப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைப் பற்றியும் இப்போது நாம் தெரிந்து கொள்ளுவோம்.

ஓ.மு.எண் என்றால் ‘ஓராண்டு முடிவு எண்’ என்று பொருள். மூ.மு.எண் என்றால் ‘மூன்றாண்டு முடிவு எண்’ என்று பொருள். ப.மு.எண் என்றால் ‘பத்தாண்டு முடிவு எண்’ என்று பொருள். நி.மு.எண் என்றால் ‘நிரந்தர முடிவு எண்‘ என்றும், தொ.மு.எண் என்றால் ‘தொகுப்பு முடிவு எண்‘ என்றும் பொருள்படும். ப.வெ.எண் என்பதன் விரிவாக்கம் ‘பருவ வெளியீடு எண்’ ஆகும். நே.மு.க.எண் என்பதன் விரிவாக்கம் ‘நேர்முகக் கடித எண்’ ஆகும்.

நாம் நமது அன்றாட வாழ்வில் இதுபோன்ற பல சுருக்கக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனி, நமது கண்களில்படும் சுருக்கக் குறியீடுகளை கவனித்து அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுவோம்.

logo
Kalki Online
kalkionline.com