முதுமையை போற்றப் பழகுங்கள்!

Let's cherish old age
Old father
Published on

பொதுவாக, தந்தையர்களின் இறுதிக்காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும், சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது. இதனால்தான் தந்தையர்கள் ‘தாம் கடைசி வரை உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்து விட வேண்டும்’ என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை  கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன்தான் பல பிள்ளைகள், தந்தையரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தனது குடும்பத்தினரிடமிருந்து மிகவும் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில், கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே, வயதான காலத்தில் வாய் திறந்து கேட்க மாட்டார். குடும்பத்தினர்தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்தபட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள். சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள். மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள். பேரன், பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் பிசுபிசுப்பான கடாயை பளபளக்க வைக்க ஒரு சூப்பர் டிப்ஸ்!
Let's cherish old age

குடும்பத் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம் பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு. ஒருவர் மறைந்த பின்னர் அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதை விட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது. ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி. இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விடுங்கள். அதிலும் தனது மனைவியை இழந்த தந்தையரின் தனிமை மிக மிகக் கொடுமையானது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனது கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தனது பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்துகொள்வாள். பெண் என்பவள் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பவள். ஆனால், குடும்பத் தலைவன் அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தனது அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக்கூடிய மற்றும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளக் கூடிய மனைவியை இழந்த பின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பணம், பொருள் போன்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது எது தெரியுமா?
Let's cherish old age

வயதான முதியோர்களும் தங்கள் கவனத்தில் சில விஷயங்களை வைத்துக்கொள்வது, அவர்களை மட்டுமின்றி, அவர்களைச் சுற்றி இருப்போரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருக்கும். உதாரணமாக,

1. பாத்ரும் செல்லும்பொழுது (வீட்டில்) கதவை சும்மா சாத்தி வையுங்கள். தாழ் போட வேண்டாம்.

2. தண்ணீர் கொண்டு வீட்டின் தரையை துடைக்கும்பொழுது அங்குமிங்கும் நடக்க வேண்டாம்.

3. ஸ்டூல், நாற்காலி, பெஞ்ச் போன்றவற்றின் மீது ஏறி பொருட்களை எடுப்பது, சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது போன்ற வேலைகளைத் தவிர்க்கவும்.

4. கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது. கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

5. மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.

6. உங்களை எந்த விஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டாம்.

7. வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம். துணையுடன் செல்லவும்.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு மரச் சாமான்கள் செய்வதற்கும் பயன்படும் மர வகைகள் தெரியுமா?
Let's cherish old age

8. வீட்டில் தனியாக இருக்கும்பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும் அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும்.

9. கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும்.

10. சைக்கிள் முதல் கார் வரை அனைத்து வாகனங்கள் ஓட்டுவதையும் முடிந்த அளவு தவிர்க்கவும்.

11. வாழும் காலத்தில் உடல் நலம், மன அமைதி, மன மகிழ்ச்சி, உறவினர், நண்பர்கள் தொடர்பு மற்றும் துணை போன்றவை அதிமுக்கியம். எல்லோரிடமும் இனிமையோடு பழகவும்.

12. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் வேண்டாம். நிகழ்காலம் உன்னதமானது. அதை முழுமையாக, மகிழ்ச்சியாக, இனிமையாக அனுபவித்து வாழுங்கள்.

ஒவ்வொரு மகனும் மகளும் தாய், தந்தையருக்கு மரியாதை செய்யுங்கள். அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்! ஒவ்வொருவருக்கும் முதுமை உண்டு. இன்று அவர்கள்; நாளை நாம்! முதுமையை புறம் தள்ளாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com