பிறர் மனம் குளிரும்படி, மனம் திறந்து பாராட்டுவோம்!

Let's open our hearts and appreciate
Let's open our hearts and appreciatehttps://appetitetoplay.com

பாராட்டு என்பது அற்புதமான விஷயம். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் அலுவலகத்திலும் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகத் திகழ்வது பாராட்டு. தனது செயல்கள் மற்றும் சாதனைகளை பிறர் பாராட்ட வேண்டும் என்று விரும்புவதும், பாராட்டுக்காக ஏங்குவதும் மனிதனுடைய இயல்பு.

தினசரி வாழ்வில் நமக்காக உதவி செய்பவர் பலர். அது நமது சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அலுவலக தொழிலாளர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள், நாம் பயணிக்கும் பேருந்து, ரயில் இவற்றை இயக்குபவர்கள், தெருவை சுத்தம் செய்யும் தொழிலாளி, தூய்மைப் பணியாளர் என்று நம் தினசரி வாழ்வில் நமக்காக இயங்குபவர்கள் பலர். இவர்களை எல்லாம் பாராட்டுகிறோமா என்றைக்காவது? ஊதியம் வாங்கிக்கொண்டுதானே பணி செய்கிறார்கள் என்று நினைப்பு உள்ளே ஓடினாலும், தம் பணியை சிறப்புறச் செய்பவர்களையாவது மனம் திறந்து பாராட்டுவோமே?

சரி, அப்படித் தான் பாராட்டுவதால் என்ன ஆகப்போகிறது? எத்தனையோ நன்மைகள் உண்டு. அது கொடுப்பவர், பெறுபவர் என இரு சாராரையும் மகிழ்விக்கும். பலர் பிறரின் செயல்களை பார்த்து மனதிற்குள் மெச்சிக்கொள்வார்களே, வாய் வார்த்தைகளாக, வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். பாராட்டுதல் என்கிற உயரிய பண்பைப் பற்றி சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

பிறரை பாராட்டுவதால் உண்டாகும் நன்மைகள்:

பிறரை (கேட்பவரை) மகிழ்விக்கும்: பிறரை பாராட்டும்போது அவர்களுடைய உள்ளமும் முகமும் மலரும். மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். விளக்கேற்றியது போல முகத்தில் அழகிய புன்னகை மிளிரும். நம்மைக் கூர்ந்து கவனித்து நம் மேல் தனிப்பட்ட அக்கறை செலுத்தி இருக்கிறார் என்கிற எண்ணம் உங்கள் மேல் தனிப்பட்ட மரியாதையாக மாறும்.

உங்களையும் (சொல்பவரை) மகிழ்விக்கும்: பிறரை பாராட்டும் போது தான் இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்கிறீர்கள். அதேசமயம் பிறருக்குக் கொடுத்த அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் ஒரு மனநிறைவைத் தரும். அது மனநிலையையே மாற்றி உற்சாகத்தை அளிக்கும். எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.

முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்: அந்த ஒருவர் மிகுந்த சிரமங்களுக்கிடையே முயன்று வெற்றி பெற்று இருக்கிறார். பிறரால் பாராட்டப்படும்போது அந்த வெற்றிக்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைகிறது. முயற்சிக்கு, பாராட்டு ஒரு கௌரவமாக அமைகிறது.

ஊக்குவிப்பு: மனந்திறந்து பாராட்டும்போது அது அவர்களுக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக அமைகிறது. அவர்களுடைய முயற்சியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்ற உணர்வை அவர்களுக்குத் தரும். இன்னும் நன்றாக, செம்மையாக செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைத் தரும். இனி மேலும், தமது செயல்களை சிறப்பாக செய்வோம் என்கிற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அவர்களுக்குத் தரும்.

நல்ல நட்புணர்வை வளர்க்கும்: பிறரை பாராட்டுவதன் மூலம் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல புரிதலை உண்டாக்கும். இவர் நம்மவர் என்கிற நெருக்கத்தை மனதிற்குள் ஏற்படுத்தும். அதோடு அவர் மீது மரியாதையும் ஏற்படும்.

வளர்ச்சி கிடைக்கும்: ஒரு நிறுவனத்தின் முதலாளி தன்னுடைய ஊழியர்களை மனந்திறந்து பாராட்டும்போது அவர்கள் இன்னும் நன்றாக வேலை செய்வார்கள். உற்பத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். நிறுவனமும் வளரும். அதேபோல வீட்டு பணியாளர்களைப் பாராட்டினால் இன்னும் நன்றாக வேலை செய்வார்கள்.

யாரைப் பாராட்டுவது, எப்படிப் பாராட்டுவது? பெரிய பெரிய சாதனை செய்தவர்களைத்தான் பாராட்ட வேண்டும் என்பதில்லை. நம்மை சுற்றியுள்ள சாமானியர்களைப் பாராட்டலாம். ஆகா, ஓஹோ என்று செயற்கையாகப் பாராட்ட வேண்டியதில்லை. சாதாரணமான இரண்டு மூன்று வார்த்தைகள் போதும்.

இதையும் படியுங்கள்:
கழுத்து வலிக்கு நிவாரணம் தரும் சில எளிய ஆலோசனைகள்!
Let's open our hearts and appreciate

தினமும் சமைத்துப்போடும் அம்மாவையோ மனைவியையோ மனதாரப் பாராட்டலாம். தினமும் சலிக்காமல் மூன்று வேளையும் அடுக்களையில் உழலும் அவர்களிடம், ‘’சமையல் ஏ ஒன், வீட்டை ரொம்ப சுத்தமா வெச்சுருக்கே’’ என்ற வார்த்தைகள் போதும்.

‘’அட, நல்லா பளபளன்னு தேய்ச்சிருக்கியே பாத்திரத்தை’’ என்றால் நம் வீட்டுப் பணியாளின் முகம் சுவிட்ச் போட்டாற் போல மலரும். ‘’என்ன சமத்தா சிந்தாம சாப்பிடிருக்கு என் தங்கம்?’’ என்றால் நம் வீட்டு சுட்டிகள் முகம் பவுர்ணமி நிலவாகி விடுமே?

‘’உங்க ஆபீஸ் டென்ஷனுக்கு இடையிலும் மறக்காம நான் கேட்ட காய்கறிகள் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டீங்களே” என்று கணவரிடம் சொல்லிப் பாருங்கள், அடுத்த முறை கேட்காமலேயே வாங்கி வருவார்.

நாள் முழுக்க கால் கடுக்க நின்று கொண்டு போக்குவரத்தை சரி செய்யும் காவலரை, ‘’ரொம்ப பொறுமையா, அழகா டிராபிக்கை ஒழுங்குபடுத்தறீங்க சார்’’ என்று சொல்லிப் பாருங்கள், தன் முரட்டு மீசைக்குள் புன்னகை செய்வார் அவர்.

பிறர் முகத்தில் மலர்ச்சியை உண்டுபண்ண முடியுமானால் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள் தாராளமாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com