இன்றைய தினத்தில் பலரையும் வருத்தும் ஒரு உடற்பிரச்னை என்றால், அது கழுத்து வலிதான். தற்காலத்தில் பலரும் தங்கள் அலுவலகப் பணிகளை கணினி மூலமே செய்வதால் மிகவும் சுலபமாக இந்த கழுத்து வலி வந்துவிடுகிறது. அதேபோல், உட்காரும் மற்றும் படுக்கும் நிலை சரியில்லை என்றாலும் கூட கழுத்து வலி ஏற்படும். இவை தவிர, நீண்ட நேரம் வண்டி ஓட்டுவது, குனிந்தபடியே ஃபோன் பார்ப்பதால், மன அழுத்தத்தினாலும் கூட கழுத்து வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இனி, கழுத்து வலி நீங்க சில எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* ஒரு காட்டன் டவலில் ஐஸ் கட்டிகளை போட்டு சுற்றி, அதை வலி இருக்கும் இடத்தில் இரண்டு நிமிடம் ஒத்தடம் கொடுத்தால் வலி குணமாகும்.
* நொச்சி இலையை நல்லெண்ணெயில் நன்கு காய்ச்சி, தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து, வெந்நீரில் குளித்தால் கழுத்து வலி நீங்கும்.
* பாலை காய்ச்சி, அத்துடன் கண்டந்திப்பிலி பொடி, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் கழுத்து வலி உடனே நீங்கும்.
* ஒரு பவுலில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஊற்றி, அதே அளவு சமமாக தண்ணீர் கலந்து ஒரு பேப்பர் டவலை (டிஷ்ஷுவை) அந்த கலவையில் நனைத்து, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து, ஒரு மணி நேரம் ஊறிய பிறகு குளிக்க, கழுத்து வலி நீங்கும்.
* வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து, ஒரு துணியில் எப்சம் உப்பைக் கட்டி, தண்ணீரில் முக்கி ஒத்தடம் கொடுத்து வரலாம்.
கழுத்து வலி நீக்கும் யோகாசனம்:
தரைவிரிப்பில் மண்டியிட்டு அமர்ந்து, முழங்காலுக்கு கீழுள்ள பகுதிகள் தரையில் படும்படி வைக்கவும். நெற்றி தரையில் படும் அளவுக்கு குனிய வேண்டும். இரு கால்களின் கட்ட விரல்களும் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்து, குதிகால்களின் மீது உட்கார வேண்டும். இரு கைகளையும் முன்னோக்கி வைத்துக் கொள்ளவும். மூச்சை வெளியிட்டபடி தொடைகள் இடையே உடலை கொண்டு வர வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்து சுவாசித்துக் கொள்ளுங்கள். இப்படி 8 முதல் 12 வினாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பழைய நிலைக்கு வரவும். இந்தப் பயிற்சியை 5 முதல் 7 முறை செய்யவும். இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்து வர கழுத்து வலி விரைவில் நீங்கும்.