பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக தற்போது ‘யூஸ் அண்ட் த்ரோ’ எனப்படும் கலாசாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை உபயோகப்படுத்தி விட்டு விரைவில் அவற்றை மாற்றுவது அல்லது குப்பையில் எறிவது என்கிற மோசமான கலாசாரம் பரவி வருகிறது.
இதனால் சுற்றுச்சூழலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் மற்றும் மின்னணுக் கழிவுகள் நிலப்பரப்பை சிதைத்து இயற்கை வளங்களை குறைக்கிறது. இதனால் பிற உயிர்களின் வாழ்விட அழிவு மற்றும் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கிறது. நுகர்வோர் சுழற்சியை வளர்க்கிறது. அதிகமான நிதி விரயத்திற்கு இட்டுச் செல்கிறது. மேலும், மின்னணுக் கழிவுகளை முறையற்ற விதத்தில் அகற்றும்போது மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதடைந்தால் அவற்றை சரி செய்து மீண்டும் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
வீட்டுப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பழுது பார்த்து பயன்படுத்தும் விதங்கள்:
பழைய ஆடைகளில் இருந்து பைகள்: தற்போது ஆடைகள் வாங்கும் கலாசாரம் மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. ஒரு வருடம், இரண்டு வருடம் போட்டு பழையதான துணிகளை குப்பையில் எறிவது அல்லது அவற்றை வீணாக்குவது என்று மனிதர்கள் செயல்படுகிறார்கள். பழைய ஆடைகளில் இருந்து பைகள் தைத்து ஷாப்பிங்கிற்கு பயன்படுத்தலாம்.
ஃபர்னிச்சர் வகைகள்: பழைய பர்னிச்சர்களை கொடுத்துவிட்டு புதியவை வாங்குவதற்கு பதிலாக அவற்றை ரிப்பேர் செய்து பயன்படுத்தலாம். பழைய மர சோபாக்கள், நாற்காலிகள், டீபாய்கள் மேஜைகள் போன்றவற்றிற்கு புதிதாக பெயிண்ட் அடித்து கறை படிந்த தோற்றத்தை மாற்றி புதியது போல பயன்படுத்தலாம்.
பழைய துண்டுகள்: வீணான பழைய துண்டுகளை குப்பையில் எறிவதற்கு பதிலாக அவற்றை வெட்டித் வைத்து துப்புரவு பணிகளுக்கு, சமையலறையில் கைப்பிடித் துணிகளாக உபயோகிக்கலாம்.
சமையலறைப் பொருட்கள்: பழையதாகிப்போன குக்கர் போன்றவற்றில் கைப்பிடி மாற்றம் செய்தல் மற்றும் சின்ன சின்ன ரிப்பேர்கள் செய்து பயன்படுத்தலாம். அதே போல பழைய மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றிலும் ரிப்பேர் செய்து பயன்படுத்தலாம். பழைய பாத்திரங்களை யாருக்கேனும் தேவைப்படும் நபர்களுக்குத் தரலாம். ஓரளவு நன்றாக இருக்கக்கூடிய காலணிகளை பழுது பார்த்து அணிந்து கொள்ளலாம்.
மின்னணுப் பொருட்களின் மறு பயன்பாடு: பயன்படுத்த முடியாத பழைய பிளண்டர்கள் அல்லது மிக்ஸர்கள் போன்ற பொருட்களை பெயிண்ட் அடித்து கைவினைப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புது மொபைல் போன் வாங்கத் துடிக்காமல் அவற்றுக்கு புதிதாக கவர் போட்டு வைத்துக் கொள்ளலாம். முற்றிலும் உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே அவற்றை மாற்றலாம். அதுபோல பழைய டிவியிலும் படம் பார்க்கலாம். அவற்றைக் கொடுத்துவிட்டு புதிது வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சின்ன சின்ன ரிப்பேரை சரி செய்துக் கொள்ளலாம். பழைய செல்போன்களை போட்டோ எடுக்க வைத்துக் கொள்ளலாம்.
ஜீரோ பர்சன்ட் வட்டியில் பொருள்களைத் தருகிறோம் என்று கடைக்காரர்கள் கூவிக் கூவி அழைத்தால் அதில் மயங்காமல் வீட்டில் உள்ள பொருட்களை நன்றாக உபயோகப்படுத்தப் பழக வேண்டும். அடிக்கடி புதிய பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணமும் வீணாவதுடன் இயற்கைக்கும் நாம் கெடுதல் செய்கிறோம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.