தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் இலுப்பை மரம். ஒரு காலத்தில் கோவில்கள், பள்ளிக்கூடங்கள், வறண்ட தரிசு நிலங்களில் காணப்பட்ட இந்த மரம் தற்போது எங்கும் காணப்படாத மரமாக இருக்கிறது. அழிந்து வரும் மரங்களில் ஒன்றாக இருக்கும் இலுப்பை மரம் பல மருத்துவ பயன்களை கொண்டது.
நாம் இந்த பதிவில் இலுப்பை மரத்தின் பயன்களை பற்றி பார்க்கலாம்:
இலுப்பை மரத்தின் பயன்கள்:
இலுப்பை மரம் வெப்ப மண்டல மரமாகும். இதை ஆங்கிலத்தில் (Bassia longifolia) என்று கூறுவார்கள். தமிழகத்தை தாயகமாகக் கொண்டது. இலுப்பை (அ) இருப்பை (அ) குலிகம் என அழைக்கப்படுகிறது.
இலுப்பை மரம் சப்போட்டா தாவர குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். எனவே இந்த மரத்தின் இலை சப்போட்டா மரத்தின் இலையை போன்று இருக்கும். சப்போட்டா மரம் குறு வகை மரமாகும். ஆனால் இலுப்பை மரம் கம்பீரமாக வளர்ந்து காணப்படும்.
தமிழகம் தவிர குஜராத், மத்திய பிரதேஷ், பீகார், ஒடிசா, கேரளா போன்ற இடங்களில் காணப்படுகிறது. இந்த மரங்களின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகும்.
'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என பழமொழி கூறி கேள்விப்பட்டிருப்போம். இதற்குக் காரணம் இலுப்பை மரத்தின் பூக்கள் அதிக இனிப்பு சுவையுடையவை. முற்காலத்தில் உணவில் இனிப்பு சுவைக்காக இலுப்பை பூவை பயன்படுத்தி வந்தார்கள்.
நன்றாக வளர்ந்த இலுப்பை மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 300 கிலோ வரை இலுப்பை பூக்களை சேகரிக்க முடியும். இலுப்பை பூக்களை சேகரிப்பதால் அதனுடன் விதைகளும் கிடைக்கும். அதிகளவு இலுப்பை பூக்களில் இருந்து சர்க்கரை எடுக்கப்படுகிறது. மேலும் இலுப்பை விதையிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
இலுப்பை பூக்கள் உருண்டை வடிவமும், வெண்மையான நிறமும் உடையதாக இருக்கும். இலுப்பை பழம் சப்போட்டா பழம் போன்று சுவையுடையது. ஆனால் இலுப்பை விதை சப்போட்டா விதை போன்று சிறியதாக இல்லாமல் பெரியதாக இருக்கும். மேலும் இலுப்பை விதை முளைக்கும் தன்மை உடையது. சப்போட்டா விதை முளைக்கும் தன்மை அற்றது.
நன்றாக வளர்ந்த இலுப்பை மரத்தின் உள்பகுதி வலுவாக இருக்கும். மரப் பொருட்கள் செய்வதற்கு இதை பயன்படுத்துகிறார்கள். மாட்டு வண்டி சக்கரம், மர சாமான்கள், ஆகியவற்றை செய்வதற்கு பயன்படுகிறது.
இலுப்பை எண்ணெய் ஆன்மீக ரீதியாக விளக்கு ஏற்றுவதற்கு உகந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த எண்ணெயில் விளக்கேற்றும் போது தீபத்தின் வாசனை காற்றில் பரவுவதால் மன நிம்மதி ஏற்படும். இதனால் கோவில்களில் தல விருட்சமாக இந்த மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது.
மேலும் இலுப்பை எண்ணெய் மூட்டு வலி மற்றும் உடம்பு வலி ஆகியவற்றை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சற்று கசப்பு தன்மை கொண்ட இலுப்பை எண்ணெயை உணவிலும் பயன்படுத்தலாம். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும்.
இந்த மரத்தின் இலையை நீரில் காய்ச்சி குடித்து வர நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
இலுப்பை பூக்களை நிழலில் உலர்த்தி பாலில் காய்ச்சி குடித்து வர பசி உண்டாகும். மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
இலுப்பை பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
இந்த மரத்தின் பழங்கள் வெளவால்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே இந்த மரம் வீட்டின் அருகில் இருந்தால் வெளவால்கள் வரும் என்பதால் யாரும் அதிக அளவில் இந்த மரத்தை விரும்பி வளர்ப்பது இல்லை. இந்த மரத்தின் அழிவிற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.