
அறிவியல் முன்னேற்றங்களால் உலகம் முழுவதும் நவீன மயமாகி வரும் வேளையிலும் தகுந்த பணியின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமை ,பசி, நோய்களின் தாக்கத்தில் தவிக்கும் மனிதர்கள் நம்மிடையே அநேகர் வாழ்ந்து கொண்டுள்ளனர். வறிய நிலையில் உள்ள இதுபோன்ற மக்களை மீட்டெடுத்து அவர்கள் பசி போக்கி நல்வாழ்வு அளிப்பதை நோக்கமாக்கி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 20ம் தேதி சர்வதேச மனித ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகளவில் வறுமையால் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட சதவீதம் இருந்தாலும் இந்தியாவில் அதிகம் என்ற கருத்து உலக நாடுகளில் உள்ளது. இந்தியாவில் இந்த சர்வே துல்லியமாக பதிவு செய்யப்படவில்லை என்ற கருத்து இருந்தாலும் உலக வங்கி கடந்த ஆண்டு (2022) வெளியிட்ட தரவுகளின்படி இந்தியாவில் 5.6 கோடி பேர் தீவிர வறுமையில் இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. சரி இந்த சர்வதேச மனித ஒற்றுமை தினத்தில் வறுமையில் வாடும் சக மனிதர்களுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒரு மனிதனின் வறுமைதான் அவருக்கான தேவைகளை முழுமையாக கிடைக்காமல் செய்கிறது. இதில் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அத்தியாவசியங்களைக் கடந்து பசியால் தவிப்பவரே அதிக சதவீதம் உள்ளனர். அன்றாடத் தேவைகளுக்கே கையேந்தும் விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஓரிடம் இல்லாமல் பிழைப்புக்காக ஊர் சுற்றுலா நாடோடிகள், வருமானத்துக்காக கொத்தடிமைகளாக இருப்பவர்கள் போன்றவர்களே பசியால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மனிதநேய ஆர்வலர்களின் கருத்து.
உலகளாவிய அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் 90 மில்லியன் டன்னுக்கு அதிகமான உணவு தூக்கி எறியப்படுகிறது. கடைகள் வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்கு கிடைக்கும் உணவுகளில் 17 சதவிகிதம் குப்பை தொட்டிக்கு செல்கிறது என்றும் ஐநா சபையின் சுற்றுச்சூழல் திட்ட குறியீடுகள் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் என்ன?
வீட்டிலும் விழாக்களிலும் சரியான முறையில் திட்டமிடாமல் உணவுப் பொருட்களை தயாரிப்பதே இதற்கு முக்கிய காரணம். இப்படி அதிகமாக சமைத்து மீதமான உணவுப் பொருட்களை சம்பந்தப்பட்டவர்கள் அருகில் வசிக்கும் வெளியே வறியவர்களுக்கு தந்து பசியை போக்கலாம். ஆனால், அதற்கான மனமும் நேரமும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை. குப்பைக்கு செல்லும் உணவுகள் அதற்காக ஏங்கும் ஏழைகளின் வயிற்றுப்பசியைத் தீர்க்க உதவும் என்ற எண்ணம் முதலில் நமக்கு வரவேண்டும்.
கொரோனா காலத்தில் இந்த உணவு வீணாகும் நிலை வெகுவாக குறைந்து உணவின் மதிப்பை அறிந்து திட்டமிட்டு உணவுகளை சமைத்து பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆங்காங்கே மக்கள் வழங்கினர். இதனால் அப்போது வழக்கத்தை விட வீணாகும் உணவுகளின் அளவு 22 சதவீதம் குறைந்து இருந்தது என்பது உணவுப் பொருட்கள் பயன்பாடு சார்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவலாக இருக்கிறது.
பசி நீக்கும் பல திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் பசியின் அடிப்படையான வறுமை ஒழிய இன்னும் வழி பிறக்கவில்லை. மக்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்து அதன் மூலம் அனைத்து மனிதரிடத்தும் மூன்று வேளை உணவு அருந்தும் அளவுக்காவது பொருளாதார நிலை மேம்பட ஆவன செய்தால் மட்டுமே பசியால் நலம் குன்றி சத்துக்களை இழந்து முடங்கிப்போகும் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை தவிர்க்க முடியும் என்பதே சமூகநல ஆர்வலர்களின் கருத்து.
இதில் பொதுமக்களாகிய நாம் செய்யக் கூடியது ஒரே விஷயம் இதுதான். ஆம்... இந்த சர்வதேச மனித ஒற்றுமை தினத்தில் சக மனிதர்களின் பசிப்பிணியை போக்கவும் அதன் மூலம் அவர்களின் வாழ்வில் சூழ்ந்துள்ள வறுமையை ஒழிக்கவும் ஒவ்வொரு தனிமனிதனும் ஒற்றுமையுடன் முன்வர வேண்டும் என்பதே இன்று நாம் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாக இருக்க வேண்டும்.