
இறைவன் நமக்கு நல்லதொரு வாழ்க்கையைத்தான் வழங்குகிறான். ‘ஜனனி ஜன்ம செளக்யானாம்’ என்ற வரிகளுக்கேற்ப ஜனனம் ஆனதில் எடுத்ததில் செளக்கியமான வாழ்க்கை வாழவும் நமது முன்னோா்கள் மற்றும் நாம் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவும், ஏற்ற இறக்கத்துடன் வாழும் வகையில், சிருஷ்டிக்கப்படுகிறோம்.
பொதுவாக, இயற்கை மற்றும் ஜீவராசிகள் அனைத்தும் பிரதி பலன் எதையும் எதிா்பாா்க்காமல் தனது கடமைகளைச் செய்கின்றன. ஆனால், மனிதன் மட்டும் பிரதி பலனை எதிா்பாா்த்து செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறாா்கள். நமது குணம் போலவே நமது செயல்பாடுகள் அமையும். நமக்குத் தேவைப்படும்போதும், தேவையில்லாதபோதும் நமது குணங்களை மாற்றிக்கொள்வதே சிறப்பானதாகும்.
‘உங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம்தான் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திட முடியும்’ என வால்டர் டோயஸ் ஸ்டேபிள் என்ற அறிஞர் தனது கருத்தாக சொல்லியுள்ளாா். நமக்கு ஒரு முக்கியமான காாியம் நடைபெற வேண்டும் என்ற நிலை வந்தால், அதே வேலையாக நாம் முயற்சி செய்வோம். யாரைப் பாா்க்கலாம், எப்படி அந்தக் காாியத்தை முடிப்பது என்ற சிந்தனையோடு பழகுவோம்.
நம்மோடு வயதில் குறைந்தவராயினும் அவரிடம் போய், ‘அண்ணே’ என்றெல்லாம் சுயநலமாகப் பேசுவோம். எப்படியாவது அந்தக் காாியத்தை முடிக்க அலைவோம். சமயத்தில் அந்த விஷயம் தோல்வியில் முடிந்துவிட்டால் அவர் தயவே இனி தேவையில்லை என வசைபாடுவது தவறுதானே! ‘அவர் உறவே தேவையில்லை’ என வைராக்கியமாய் இருப்பதும் உண்டு. அதேபோலத்தான் இறைவனிடம் ஒரு காாியமாக வேண்டுதல் வைப்போம். அது நியாயமானது அல்லது அதர்மமானது என நமக்கும் தொியும். நம்மைப் படைத்த ஆண்டவனுக்கும் தொியுமே! அந்த வேண்டுதல் பலிக்காமல் போனால், ‘இறைவனே இல்லை, சாமியே கிடையாது’ என்றெல்லாம் ஆத்திரத்தில் புலம்புவதும் உண்டல்லவா!
ஆக, நமது எண்ணமானது எப்படி பச்சோந்தி போல மாறுகிறது. அதுதான் இறைவனின் விளையாட்டு. நாம் செய்த பலாபலன்களுக்கேற்பவே நமது வாழ்க்கை அமையும். காாியம் நடந்தால் பாராட்டுவது, நடக்காவிட்டால் நமது நிலையை மாற்றிக்கொள்வது இது தவறான முன்னுதாரணமாகுமே! பொதுவாக, நமது உடலில் உள்ள அவயவங்கள் நம்மிடம் எதையும் எதிா்பாா்க்காமல் தனது கடமையைச் செய்கிறதல்லவா! அது போலவே, மனிதன் ஆத்திரம் கொள்வது, நிதானம் தவறுவது, பொறுமையைக் கைவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடவே கூடாது.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் பாா்த்து அவரிடம் ஒரு பிடி அவலை ஏழை குசேலர் தனது அன்பு மேலீட்டால் கொடுக்கவில்லையா? பிரதி பலனை எதிா்பாா்த்தா கொடுத்தாா்? அதேபோல, ஶ்ரீ ராமபிரானை நினைத்து சிறு வயதிலேயே பூஜைகள் செய்து வயதான காலத்தில் சபரி எலந்தை பழத்தைக் கொடுக்கவில்லையா? அதுபோலவே நாமும் நமது உயர்ந்த எண்ணத்துடன் மேற்கொள்ளும் காாியத்தில் நம்பிக்கை வைத்து செயல்படவேண்டும். ஆக, சுயநலம் தவிா்த்து நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் நட்பு பாராட்டி, தூய சிந்தனை, நல்ல எண்ணத்தோடு வாழப் பழகிக் கொள்வோம். அதுவே நமக்கும், நம்மைச் சாா்ந்தவர்களுக்கும் நல்லது!