
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லும் ஆண்கள் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். இவர்கள் தேவையற்ற சண்டைகளைத் தவிர்த்து வீட்டில் அன்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்குகிறார்கள். குடும்பத்தில் உள்ள பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உறவுகளை முறிந்து போகாமல் வளர்க்கிறார்கள். இப்படி தனிப்பட்ட பண்புகள் நிறைந்த ஆண்கள் நம் சமூகத்தில் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களின் இந்த தனிப்பட்ட பண்பு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும், ஸ்திர தன்மைக்கும் பெருமளவில் பங்களிக்கிறது.
உறவுகளை பலப்படுத்துதல்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்லும் ஆண்கள் குடும்ப உறவுகளிடையே அன்பு, பாசம் மற்றும் புரிந்துணர்வை வளர்த்து உறவுகளை பலப்படுத்துகிறார்கள். சுயநலமின்றி குடும்பத்தின் நலனை முதன்மையாகக் கருதி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தரும் மனரீதியான ஆதரவு குடும்பத்தில் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது. இப்படி உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவது உறவுகளை பலப்படுத்துவதுடன், பிறருக்கு ஆரோக்கியமான முன் உதாரணமாகவும் திகழ்கிறார்கள்.
அமைதியான சூழலை உண்டாக்குதல்: குடும்பத்தின் நலனுக்காக சில சமயங்களில் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைக் கூட தியாகம் செய்யவும் தயாராக இருக்கும் இவர்கள், குடும்பத்தில் அமைதியான சூழலை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும், கருத்துக்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயலாற்றும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். குடும்ப உறவுகள் வெற்றிகரமாக அமைவதற்கு இவர்களின் அனுசரித்துச் செல்லும் தன்மையும் ஒரு காரணமாகும்.
சிக்கல்களை கையாளும் குணம்: உறவுகளில் ஏற்படும் சின்னச் சின்ன சறுக்கல்களையும், சிக்கல்களையும் பொறுமையுடனும் நிதானத்தடனும் கையாளத் தெரிந்தவர்களாக இருப்பதால் சண்டைகள் மற்றும் மனக்கசப்புகளை பெருமளவில் குறைத்து மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகிறார்கள். சில சமயங்களில் பிரச்னைகளை பெரிதுபடுத்தி குளிர் காய நினைக்கும் சொந்தங்களை ஒதுக்கி குடும்பத்தை அமைதிப் பூங்காவாக ஆக்குகிறார்கள்.
தன்னம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு: இத்தகைய ஆண்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதுடன், குடும்பத்தின் மீதான பொறுப்பை உணர்ந்தும் அழகாக செயலாற்றுகிறார்கள். எந்த நடைமுறை சிக்கல்களையும் பொறுமையுடன் கையாளுகிறார்கள். குடும்பத்தில் அன்பையும் ஆதரவையும் தருவதுடன், வீட்டு வேலைகள் மற்றும் குடும்பப் பொறுப்புகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள். இத்தகைய ஆண்கள் இக்கட்டான சமயங்களில் கூட தன்னம்பிக்கை இழக்காமல் எந்தவிதமான போராட்டங்களையும் எளிதில் கடந்து வந்து விடுகிறார்கள்.
குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு: எதற்கெடுத்தாலும் எரிந்து விழாமல் பிரச்னைகளின் ஆழத்தைப் புரிந்து கொண்டு அனுசரித்துச் செல்வதும், குடும்பத்தில் தேவையற்ற சண்டைகளை தவிர்ப்பதும், குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலில் வளர்வதற்கும் உதவுகிறார்கள். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரின் மன அழுத்தமும் குறைந்து நேர்மறையான மனநிலையை வளர்க்க உதவுகிறார்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வது, அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவது, அவர்களுக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் வழங்குவது, சிறந்த வழிகாட்டியாக இருந்து செயல்படுவது என தாயுமானவனாகவும், பொறுப்புள்ள தந்தையாகவும் இருக்கிறார்கள்.