

பிறரின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடக்கூடாது:
பிறரிடம் பேசும்பொழுது அன்பைப் பிரதானமாக கொண்டு பேசுவது நல்லது. எக்காரணம் கொண்டும் பிறரின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி அவர்கள் சொல்லாமல் நாமாக கேட்கக்கூடாது. அது நாகரீகம் கிடையாது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனிநபரின் அந்தரங்க தகவல்களை மதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் குடும்ப உறவுகளையும், சமூக சூழலையும் பாதிக்கும். தேவையற்ற பிரிவினைகளை உண்டாக்கும். பிறரின் தனிப்பட்ட விஷயங்களை மதிக்கும் பொழுது தான் உறவுகளுக்குள் நம்பிக்கையும், பிணைப்பும் வலுவடையும்.
தற்பெருமை கூடாது:
தற்பெருமை என்பது ஒரு சுயவிளம்பரம் தேடும் மனநிலை. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவும் தற்பெருமை பேச மனம் தூண்டப்படுகிறது. ஒருவரிடம் பணிவு இல்லாத பொழுது அந்த இடத்தை தற்பெருமை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது. தற்பெருமை ஒருவரின் வீழ்ச்சிக்கு காரணமாகும். தற்பெருமை பேசினால் பிறரால் நாம் வெறுக்கப்படுவோம்.
தற்பெருமை, செருக்கு போன்றவை மன அமைதியைக் கெடுத்து தனிமனித முன்னேற்றத்தை தடுப்பதுடன், மற்றவர்களும் நம்மைக் கண்டாலே ஒதுங்கி ஓட ஆரம்பித்து விடுவார்கள். நம்மை பிறர்தான் பாராட்ட வேண்டுமே தவிர, நாமாக நம்மை புகழ்ந்து கொள்வது கூடாது. தற்பெருமை அற்ற எளிமையான வாழ்வே உண்மையான சிறப்பைத் தரும்.
பிறரைப் பற்றி புறம் பேசுவது:
புறம் பேசுவது என்பது ஒருவரின் முதுகுக்குப் பின்னால் அவர் இல்லாத பொழுது, அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதோ அல்லது உண்மையை குறைத்தோ பேசுவதாகும். பிறரை பற்றி புறம் பேசுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நம்முடைய தரம் குறைந்துவிடும். மற்றவர்களின் குறைகளை துருவித் துருவி ஆராய்வதும், அதை மற்றவர்களிடம் பரப்புவதும் ஒருவரது நற்பெயரை கெடுக்கும் செயலாகும். எனவே பிறரைப் பற்றி புறம் பேசாமல் இருப்பது நல்லது. அத்துடன் புறம் பேசுபவர்களுடன் பழகுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஆணவம் கொண்ட வார்த்தைகள்:
தான் என்ற அகந்தை அழிவை ஏற்படுத்தும். எனவே பணிவை கடைப்பிடித்து, மற்றவர்களுடன் இணக்கமாக செல்வது நன்மதிப்பை பெற்றுத் தரும். மற்றவர்களை மட்டம் தட்டும் நோக்குடன் எனக்குத் தான் எல்லாம் தெரியும், என்னால் மட்டுமே முடியும் போன்ற அகந்தை மிகுந்த வார்த்தைகளை பேசுவதைக் குறைத்து, பணிவுடன் பேசுவது நல்லது. மற்றவர்களை தாழ்த்தி பேசுதல், அதீத தன்னம்பிக்கை காட்டுதல் மற்றும் அனைத்தையும் கட்டுப்படுத்த நினைக்கும் தொனியைத் தவிர்த்து, உண்மையான தன்னம்பிக்கையுடன் பிறரை மதித்து பேசவும் பழகவும் வேண்டும்.
எதிர்மறை வார்த்தைகளை தவிர்ப்பது:
பிறரிடம் பேசும் பொழுது எதிர்மறையாக பேசுவது அவர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும். உன்னால் முடியாது, இது சரியில்லை, ஒன்றும் உருப்படாது போன்ற வார்த்தைகளை தவிர்த்து நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை பேசுவது நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும்.
தேவையற்ற எதிர்மறை வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்ப்பது, வார்த்தைகளை யோசிக்காமல் பேசிவிட்டு பின்பு மனம் வருந்துவது போன்றவை கூடாது. பேசுவதற்கு முன்பு வார்த்தைகளை நன்றாக யோசிக்கவேண்டும். பேசிய பிறகு யோசிப்பதில் பயனில்லை. முடிந்த அளவு எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
அதிகம் உணர்ச்சி வசப்படுவது:
எக்காரணம் கொண்டும் பிறருடன் பேசும் பொழுது உணர்ச்சி வசப்படக்கூடாது. காரணம் உணர்ச்சிவசப்படும்போது நம் மனமானது வார்த்தைகளும், வாக்கியங்களும், சொற்களும் கிடைக்காமல் தடுமாறி தேவையில்லாத விஷயங்களைப் பற்றி எல்லாம் பேசி விடுவோம். பிறகு அப்படி பேசி இருக்கக் கூடாது என்று சுயபச்சாதாபமும், கழிவிரக்கமும் கொள்வோம். எனவே உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை தவிர்ப்பது நல்லது.