

நாம் அனைவரும் மிகவும் ஆசையாக விலை உயர்ந்த குளியல் துண்டுகளை வாங்கிப் பயன்படுத்துவோம். ஆனால் சில மாதங்களிலேயே அல்லது வருடங்களிலேயே அந்தத் துண்டுகள் நிறம் மங்கியோ, நூல் பிரிந்தோ அல்லது சொரசொரப்பாகவோ மாறிவிடுவது இயற்கை. மென்மையாக இருந்த துண்டு காய்ந்த கருவாடு போல மாறும்போது, அதைத் தூக்கி எறிவதைத் தவிர நமக்கு வேறு வழி தெரிவதில்லை.
அதிகபட்சம் அதைத் தரையைத் துடைக்கும் துணியாக மாற்றுவோம். ஆனால், குப்பைக்குச் செல்லத் தயாராக இருக்கும் அந்தப் பழைய துண்டுகளை வைத்து வீட்டு உபயோகத்திற்குத் தேவையான பல அற்புதமான பொருட்களை உருவாக்க முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
துப்புரவுப் பணி!
பொதுவாக வீட்டைத் துடைக்க நாம் பயன்படுத்தும் மாப் குச்சிகளில் மாட்டப்படும் துணிகள் அல்லது பேட்கள் சீக்கிரம் பாழாகிவிடும். கடையில் சென்று புதிதாக வாங்குவதற்குப் பதிலாக, உங்கள் பழைய துண்டுகளை அந்த மாப் அளவுக்கு ஏற்றவாறு வெட்டிப் பயன் படுத்தலாம். பழைய துண்டுகள் இயல்பாகவே அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை.
இதனால் தரையில் உள்ள அழுக்கு மற்றும் தூசியை இவை மிகச் சிறப்பாகச் சுத்தம் செய்யும். துடைத்து முடித்ததும் அதைத் துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம் என்பதால், டிஷ்யூ அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய துணிகளுக்கான செலவு மிச்சமாகும்.
அழகு, சுயபராமரிப்பு!
முகத்தில் உள்ள Makeup கலைக்கக் கடையில் விற்கும் பஞ்சு அல்லது வேதிப்பொருட்கள் கலந்த துடைப்பான்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மென்மையான பழைய துண்டுகளைச் சிறிய சதுரங்களாக வெட்டி, ஓரங்களைத் தைத்து வைத்துக்கொண்டால், அவை சிறந்த மேக்கப் ரிமூவராகச் செயல்படும்.
தலைமுடிக்கு வெப்பம் தராமல் சுருள் முடி வேண்டும் என்று நினைப்பவர்கள், துண்டுகளை நீண்ட கீற்றுகளாக வெட்டி, தலைமுடியில் சுற்றி வைத்துத் தூங்கலாம். இது தலைமுடிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அழகான சுருள்களைத் தரும்.
வீட்டுத் தோட்டம், செல்லப்பிராணிகள்!
பெரிய பூந்தொட்டிகளில் செடி வைக்கும்போது, அடிப்பகுதியில் மண்ணை நிரப்பினால் தொட்டியின் எடை மிக அதிகமாகிவிடும். இதற்கு மாற்றாக, பழைய துண்டுகளைத் தொட்டியின் அடியில் வைத்துவிட்டு, அதன் மேல் மண்ணைப் போட்டால் தொட்டியின் எடை குறைவதோடு, மண்ணின் ஈரப்பதமும் நீண்ட நேரம் தக்கவைக்கப்படும்.
செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்குப் பழைய துண்டுகள் ஒரு வரப்பிரசாதம். நாய் அல்லது பூனைகளுக்குத் தேவையான மெத்தையை உருவாக்க இதைப் பயன்படுத்தலாம். மேலும், துண்டுகளைப் பின்னி, நாய்கள் கடித்து விளையாடும் ஒரு பொம்மையாகவும் மாற்றலாம். கடையில் வாங்கும் பிளாஸ்டிக் பொம்மைகளை விட இது பாதுகாப்பானது.
குளிர்காலத்தில் கதவு அல்லது ஜன்னல்களின் இடுக்கு வழியாகக் குளிர்ந்த காற்று உள்ளே வருவதைத் தடுக்க, பழைய துண்டுகளைச் சுருட்டித் தைத்து, ஒரு நீண்ட தலையணை போலச் செய்து கதவின் அடியில் வைக்கலாம். இது அறை வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும். மேலும், டிராயர்களுக்கு இடையில் பொருட்களைப் பிரித்து வைக்கும் தடுப்பான்களாகவும் இவற்றைச் சுருட்டி வைத்துப் பயன்படுத்தலாம்.
ஒரு பொருள் அதன் பயன்பாட்டை இழந்துவிட்டது என்று நினைத்துத் தூக்கி எறிவதற்கு முன், அதை வேறு வகையில் பயன்படுத்த முடியுமா என்று யோசிப்பது புத்திசாலித்தனம்.