
சில நினைவுகள் எப்பொழுதும் அலைமோதிக்கொண்டே இருக்கும். குடும்பத் தலைவன் என்ற முறையில் அப்பாதான் எல்லோருக்கும் பார்த்து பார்த்து ஒவ்வொரு பொருளாக வாங்கித்தருவார். ஆனால் அவருக்கு யாராவது பரிசாக எதையாவது கொடுத்துவிட்டால் அன்று முழுவதும் எல்லோரிடமும் சொல்லி சொல்லி மகிழ்வார். அதுபோல் நடந்த ஒரு நிகழ்வை இந்தப் பதிவில் காண்போம்.
பள்ளியில் படித்த பருவத்தில் என்னுடன் அமர்த்திருக்கும் தோழி ஒரு பிரிவேளைக்கும் அடுத்த பிரிவேளைக்கும் இடையில் 5 நிமிடம் இருந்தால் கூட, அப்பொழுது ஆசிரியை வருவதற்கு சிறிது கால தாமதம் ஆனாலும், டெஸ்க்குக்கு அடியில் கையை வைத்து குனிந்து ஏதோ ஒரு வேலை செய்துகொண்டே இருப்பாள்.
அது என்ன என்பதை ஒருநாள் நானும் குனிந்து பார்த்தேன். அப்பொழுது தீக்குச்சிகளை ஒரு பெரிய டப்பாவில் நல்லதாக தேர்ந்தெடுத்து வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். அதுபோல் ஒவ்வொரு டப்பாவாக அடைத்து சேர்த்து கொடுத்தால் அதற்கு கூலி அப்பொழுது 15 பைசா கிடைக்கும்.
அதேபோல் அவர்கள் வீட்டிற்குச் சென்றாலும் லேயர் லேயராக ஒரு பெரிய அடுக்கு இருக்கும். அதில் ஒவ்வொரு அடிக்கிலும் தீக்குச்சிகளை அடுக்கி கொடுக்கவேண்டும். அதற்கு ஒரு கூலி கிடைக்கும். இப்படியாக எப்பொழுதும் வேலை செய்து பணம் சம்பாதிப்பாள். அப்படி சேர்ந்த பணம் இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு அருகில் இருக்கும் துணி கடைக்கு சென்று அவளின் அப்பாவிற்கு ஒரு பனியன் வாங்கி வந்தாள்.
என் அப்பா எல்லோருக்கும் ஏதாவது துணிமணிகள் வாங்கித் தருகிறார். ஆனால் அவர் பனியன் எல்லாம் கிழிந்து போய்விட்டது. என்றாலும் அவருக்காக எதையும் வாங்கிக்கொள்வதில்லை. சொன்னாலும் கேட்கமாட்டார். அவ்வளவு வசதியும் கிடையாது. அதனால் நாமாக ஏதாவது சம்பாதித்து சேர்த்து அப்பாவிற்கு ஒரு பனியன் வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்று ஆசை. அதனால் தான் இதை சேமித்தேன் என்று கூறி பனியன் வாங்கி அவள் அப்பாவிடம் நீட்டினாள்.
அவருக்கு வந்த சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே! மகளை வாரி அனைத்து முத்தம் கொடுத்தார். அவர் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. என் தாய் என்று கொஞ்சினார். அந்த வீடே அந்த நேரம் ஆனந்த கண்ணீரில் மிதந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கண்களில் நீர் கசிந்தது. இதற்குப் பெயர்தானே பாசம். இந்தப் பாசத்திற்காகத்தானே உலகமே ஏங்கிக் கிடக்கிறது.
இது நடந்தது 1976 இல் நான் ஆறாம் வகுப்பு படித்தபோது. அப்பொழுது இதுபோன்ற தந்தையர் தினமோ, பிறந்தநாள் என்று எதுவும் கொண்டாடப்படாத காலம். அதுபோன்ற நேரத்தில் அவள் கொடுத்த பரிசு சிறிதுதான் என்றாலும், அப்பாவிற்கு தேவையானதை பார்த்து வாங்கி கொடுத்த அந்த மகளை மறக்க முடியுமா? என்றென்றும் என் நினைவில் நீங்காத இடம் பிடித்துவிட்டாள்.