
தினமும் நாம் உண்பதில் இருந்த உறங்குவது வரை அது அதற்கு உண்டான பொருட்களை முறையாகப் பயன்படுத்தினாலே தினசரி வாழ்க்கை என்பது எளிமையாகவும், இனிதாகவும், தூய்மையாகவும் நடந்தேறும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தற்போது சேமியா, இடியாப்பம், நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதற்கு நடுவே பள்ளமாக உள்ள தட்டுக்கள் வந்துள்ளன. பள்ளத்தில் இதுபோன்ற பொருட்களை அமிழ்த்தினால் எடுத்து சாப்பிட எளிதாக இருக்கும். குழந்தைகள் உணவை சிந்தாமல் சாப்பிடுவார்கள். அதுபோன்ற தட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அழகழகான பெரிய கிண்ணங்களாக வாங்கி வைத்தால் அதில் போட்டு சாப்பிடுவதும் எளிது. முள் கரண்டிகளையும் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
2. உப்பட்டு செய்வதற்கு அந்த மாவைத் தட்டுவதற்கு ஏற்ப மெலிதான தோசை கல் போன்ற பிடியுடன் கூடிய பாத்திரம் உள்ளது. அதை வாங்கி வைத்துக் கொண்டால் அதில் உப்பட்டுகளை செய்து அப்படியே தோசை தவாவில் கவிழ்ப்பதற்கு எளிமையாக இருக்கும்.
3. நான்ஸ்டிக் பணியாரக் கல்லை வாங்கி வைத்துக்கொண்டால் அதில் அதிக எண்ணெய் செலவு இல்லாமல், சிந்தாமல் சிதறாமல் பணியாரத்தை சுட்டு எடுக்கலாம். இரும்பு வாணலில் செய்யலாம் என்றாலும் அதில் அவ்வப்பொழுது ஒட்டிக்கொண்டு எடுக்க வராமல் போவதும் உண்டு. எண்ணெய்யும் அதிகமாக ஊற்ற வேண்டும்.
4. செம்பு பாத்திரங்களில் தண்ணீர் வைத்து வாரத்திற்கு மூன்று நாள் அருந்தினால் சருமம் பளபளப்பாகும். தாமிர சத்தும் உடம்புக்குக் கிடைக்கும்.
5. வீடு கட்டும்போதே கதவோரத்தில் சின்னதாக மேடை ஒன்றை அமைத்து விட்டால் அதில் டஸ்ட் பின், துடைப்பம், அதற்கான முறம் போன்றவற்றை வைத்து விடலாம். யார் கண்ணிலும் படாது. வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். துடைப்பத்தை படுக்க வைக்காமல் அடி பாகம் தரையிலும் நுனிப்பகுதி மேல் நோக்கியும் இருக்குமாறு வைத்தால் அது வளையாமல் எப்பொழுதும் நேராக இருக்கும். சுத்தப்படுத்தும்பொழுது சிரமப்பட வேண்டி இருக்காது.
6. மளிகை சாமான்கள் வாங்கி இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ டப்பாக்களில் அடைக்கும்பொழுது அதில் மீந்திருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு கிராம்பு, பிரிஞ்சி இலை, வேப்பிலை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை போட்டு அடைத்தால் பூச்சி புழு அண்டாது.
7. ஷோகேஸ், ஃபிளவர் வாஸ் போன்றவற்றை அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்து வித்தியாசமான பொருட்களால் அலங்கரித்தால் வீடு அழகாக இருக்கும். வரவேற்பறை பார்ப்பதற்கு அழகாக மிளிரும்.
8. வீட்டில் லைப்ரரி வைத்திருப்பவர்கள் அதன் ஷெல்ப்புகளில் மூடி திறக்கும்படியான கதவமைப்பை வைத்திருப்பது நல்லது. இல்லையேல் புத்தகத்தில் அதிகப்படியான தூசு படியும். அதை சுத்தப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். மேலும், அந்த ஷெல்ப்புகளின் இடையே புகையிலை, வசம்பு போன்ற பொருட்களை போட்டு வைத்தால் சில்வர் பூச்சிகள் மற்றும் கரையான் அரிப்பிலிருந்தும் தடுக்கலாம்.
9. பீரோ, பாத்ரூம் நிலைக்கண்ணாடி என்று எதுவாக இருந்தாலும் அவ்வப்பொழுது கண்ணாடி சரியாக ஆணியில் மாட்டப்பட்டு இருக்கிறதா? கண்ணாடி பதிந்த அந்த பெட்டிகள் உறுதியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஆடும் பட்சத்தில் அதை நீக்கிவிட்டு புது கண்ணாடி பொருத்திய புது ஷெல்ப்பை பொருத்தினால் எப்பொழுதும் பயமின்றி அவற்றைத் திறந்து மூட வசதியாக இருக்கும்.