
குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால் கண்டிக்காதீர்கள். அது தவறு என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். உணர்ந்துவிட்டால் திரும்பவும் செய்யமாட்டார்கள்.
நீங்கள் ஏதாவது தவறு செய்தால் தயக்கம் இல்லாமல் குழந்தைகளிடம் மன்னிப்பு கேளுங்கள். அதில் தவறில்லை. தப்பு செய்தால் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற பழக்கம் அவர்களுக்கும் வரும்.
உங்களுக்கு பிடித்த எல்லாமே உங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும் என்பது இல்லை. எனவே குழந்தையின் ரசனைக்கு மதிப்பு கொடுங்கள்.
குழந்தைகளின் சில செயல்கள் உங்களை எரிச்சல் ஊட்டும். சில சமயங்களில் அவர்கள் உங்களை மதிக்காதது போல் தோன்றும். உங்களுக்கு பிடிக்காததையும் செய்யும். பொறுமை காட்டுங்கள் அவர்கள் குழந்தைகள்தானே!
குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள். எந்த குழந்தைக்கும் சொல் ஒன்று... செயல் ஒன்றாக நீங்கள் இருந்தால் குழந்தைகளும் அப்படியே வளரும்.
என்னாலதான் முடியல, நீங்களாவதுபடிச்சு டாக்டர் ஆகணும், என உங்கள் ஏக்கங்களை அவர்களின் லட்சியங்களாக திணிக்காதீர்கள். தன் குழந்தைகளின் விருப்பங்களை சார்ந்தே அவர்களின் எதிர்காலம் அமையட்டும்!
குழந்தைகள் எதைக்கண்டும் பயப்படக்கூடாது. அம்மா அப்பா நாங்க இருக்கோம், என்று எந்த சூழலிலும் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை கொடுங்கள்!
குழந்தைகளின் ரசனைகளை ஊக்கப்படுத்துங்கள் இசை, நடனம், விளையாட்டு என்று அவர்கள் விரும்பும் பயிற்சியில் சேர்த்து விடுங்கள். ஆனால் எதையும் கட்டாயப்படுத்தி திணிக்க வேண்டாம்!
குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். குழந்தை பருவத்தில் குறும்பு செய்வதுதான் இயல்பு. அந்த குறும்புகளின் வழியே அவர்கள் வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்கிறார்கள்.
குழந்தைகளின் திறமைகளை பாராட்டுங்கள். சின்ன சின்ன வெற்றிகளை அவர்கள் அடையும்போது தட்டிக்கொடுங்கள். அவர்கள் இன்னும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள அது உதவும். பல வெற்றிகளை அவர்கள் தம் வசப்படுத்துவார்கள்!
குழந்தைகளை எப்போதும் கவனித்துக்கொண்டே இருங்கள். முகம் வாட்டமாக இருந்தால் அன்பாக விசாரித்து அவர்களின் வருத்தத்தைப் போக்குங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதை பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் மனநிலையை இயல்பாக வைத்திருப்பது முக்கியம்.
வீட்டில் சின்ன சின்ன வேலைகளை செய்ய சொல்லுங்கள். தப்பும் தவறுமாக அவர்கள் பழகட்டும். அவர்களாகவே முடிவெடுத்து எதையும் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். இவையெல்லாம் குழந்தைக்கு பொறுப்பு மற்றும் தன்னம்பிக்கை உணர்வைத்தரும்!
பள்ளிக்கோ விளையாடவோ வெளியில் சென்று திரும்பும் குழந்தைகள் தங்கள் அனுபவங்களை சொல்வதற்கு ஆர்வமாக வருவார்கள். அதை தட்டிக்கழிக்காமல் உற்றுக்கேளுங்கள். கதை கேட்பதும் கதை சொல்வதுமாக வளரும் குழந்தை நல்ல அறிவை பெறுகிறது!
குழந்தைகளுடன் குடும்பமாக அவ்வப்போது வெளியே சென்று வாருங்கள். இது குடும்ப பிணப்பை வலுவாக்கும். சமூகம் பற்றியும் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள்!
இதனையெல்லாம் செய்து குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருந்து அவர்களை முன்னேற்றுங்கள்!