
வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது என்பது வாகன ஓட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பளிக்கும். இந்த சிறந்த தலைக்கவசத்தை அணிவது விபத்து ஏற்படும் சமயங்களில் நம் உயிரைக் காக்க உதவும். ஹெல்மெட் இன்றி பயணிக்கும் நபர்கள்தான் விபத்தின்பொழுது கடுமையான பாதிப்புகளை சந்திப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஹெல்மெட் வாங்கும்பொழுது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.
1. கண்களைப் பாதுகாக்கும் வகையில் பைபர் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை வாங்குவது நல்லது. இது வெயில் காலத்தில் வண்டி ஓட்டும்போது சூரியக்கதிர்களால் கண்கள் பாதிப்படையாமல் இருக்க உதவும். அத்துடன், கண்களில் தூசி, பூச்சி போன்றவை விழாமல் காக்கும்.
2. ஹெல்மெட் வாங்கும்பொழுது நம்முடைய தாடைப் பகுதியை பாதுகாக்கும் வகையில், நம்முடைய முகத்திற்கு ஏற்றவாறு பார்த்து வாங்குவது நல்லது.
3. புதிய ஹெல்மெட் வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், அது நமக்கு மிகவும் வசதியாக இருக்க வேண்டும். அவை நம் தலையில் எந்த அழுத்தத்தையோ, வலியையோ ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
4. ஹெல்மெட்டின் உட்பகுதிகளை தனியாக கழற்றி எடுத்து மீண்டும் பொருத்தும் வகையிலான ஹெல்மெட்டை வாங்குவது இன்னும் சிறந்தது. இதன் மூலம் நம்மால் எளிதில் இவற்றை சுத்தம் செய்து பராமரிக்க முடியும்.
5. விபத்துகளின்பொழுது நம் மண்டை ஓட்டை பாதுகாப்பதற்காகத்தான் ஹெல்மெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விபத்து ஏற்பட்டால் குஷனிங் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, ஹெல்மெட் வாங்கும்பொழுது தட்டையாகவோ, கடினமாகவோ இல்லாமல் இருப்பது அவசியம்.
6. வெப்பம் மிகுந்த நம் நாட்டில் ஹெல்மெட்டை தேர்ந்தெடுக்கும் பொழுது காற்றோட்டம் என்ற முக்கிய காரணியை மனதில் கொள்ள வேண்டும். அத்துடன் கருப்பு நிறம் அதிக வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால் கருப்பு நிற ஹெல்மெட் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது.
7. வாங்கும் ஹெல்மெட் நம்முடைய தலையில் சரியாகப் பொருந்தக்கூடிய அளவில் சரியான அளவில் தேர்ந்தெடுப்பது முக்கியம். அவை மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புருவங்களுக்கு சற்று மேலே ஹெல்மெட்டின் முன் விளிம்பு இருக்க வேண்டும். கன்னத்தின் கீழ் இருக்கும் பட்டை இறுக்கமாகப் பொருத்தும் வகையில் சரியான அளவில் வாங்குவது சிறப்பு.
8. ஹெல்மெட் என்பது தலையைக் காக்கும் உயிர் கவசம். எனவே, அவற்றை வாங்கும்போது தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். DOT அல்லது ISI போன்ற தரநிலைகள் ஹெல்மெட்டின் பாதுகாப்பைக் குறிக்கின்றன. நாம் வாங்கும் ஹெல்மெட்டுகள் பாதுகாப்பு தர நிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
9. ஹெல்மெட்டில் குறைந்தபட்சம் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த முத்திரை அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஹெல்மெட்களுக்கு ஐஎஸ்ஐ முத்திரை ஜூன் 1, 2021 முதல் கட்டாயமாக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தரமான ஹெல்மெட்டுகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
10. ஹெல்மெட் வாங்கும்பொழுது அதில் இருக்கும் விசர்களையும் (Visor) ஆராய வேண்டும். குறிப்பாக, மழை மற்றும் பனிக்காலத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும், ஆன்டி கிளார் அம்சம் கொண்டதாக இருப்பதும் அவசியம். இவைதான் நம்மை இரவு மற்றும் மழைக்காலங்களில் தடையில்லா பயணத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
11. பார்க்க அழகாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் மட்டுமே வாங்கி விடக்கூடாது. அவற்றை அதிக நேரம் பயன்படுத்தும் வகையில் இலகுவான எடை கொண்டதாக இருக்கிறதா, உறுதியானதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.
12. பட்ஜெட்டிற்கு ஏற்ற, அதேசமயம் பாதுகாப்பில் சமரசம் செய்யாத ஹெல்மெட்டை தேர்ந்தெடுக்கவும்.
13. ஹெல்மெட்டுகளில் பல வகைகள் உள்ளன. ஃபுல் ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், மாடுலர் போன்ற வகைகள் உள்ளன. நாம் தேர்ந்தெடுக்கும் பைக் மற்றும் சவாரி செய்யும் முறையைப் பொறுத்து ஹெல்மெட்டை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
14. மொத்தத்தில் ஹெல்மெட் வாங்கும்பொழுது சரியான அளவு, பாதுகாப்பு தரநிலை, வடிவமைப்பு, தலைக்கு பொருத்தமான, பட்ஜெட்டிற்கு ஏற்ற விலையில் தரமானதாக, உத்தரவாதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாங்குவது நல்லது.