
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு அளவிட முடியாதது. குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
முன் உதாரணமாக இருக்க வேண்டும்:
எந்த ஒரு செயலையும் குழந்தைகள் தக்க தருணத்தில் சரியானபடி செய்யவேண்டும் என்றால், தினசரி தாம் ஆற்றும் பணிகளில் பெற்றோர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும். சில வீடுகளில் தூரத்தில் ஒருவர் வருகிறார் என்றால் அவரைப் பார்த்ததும் பெற்றோர்கள் உள்ளில் மறைந்து கொண்டு அவர் கேட்டால் நாங்கள் இல்லை என்று கூறி விடு என்று கூறுவார்கள். இது குழந்தைகளுக்கு முரண்பாடாக தோன்றும்.
இதனால் குழந்தைகளும் அதுபோல் பிறகு பெற்றோர்களிடமே அதை செய்ய முன்வருவார்கள். ஆதலால் இது போன்ற விஷயங்களை கட்டாயமாகத் தவிர்த்து விடவேண்டும். அவர்களை நீங்கள் கையாளும் முறையைப் பார்த்தே குழந்தைகள் இது போன்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற மரியாதையையும், பண்பையும் கற்றுக் கொள்வார்கள்.
குறை கூறாதீர்கள்:
வளரும் குழந்தைகளிடம் உறவினர்களை பற்றியோ, நண்பர்களைப் பற்றியோ அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பேசுங்கள். குறை இருந்தால் அதை அப்படியே எதுவும் சொல்லாமல் விட்டு விடுங்கள். இதனால் அவர்களைப் பார்க்கும் பொழுது அந்யோன்யமாக பழகும் தன்மை குழந்தைகளுக்கு ஏற்படும்.
தேர்வு:
அவர்களுக்கான காமிக்ஸ் புக்ஸ், துணிமணி, விளையாட்டுப் பொருள் போன்றவற்றை பிள்ளைகளையே தேர்வு செய்ய விட வேண்டும். இதனால் தங்கள் தேவைகளையும், வாழ்வையும் நன்றாக புரிந்துகொண்டு பின் நாட்களில் எந்த ஒரு செயலிலும் தீர்க்கமான, தெளிவான முடிவை எடுக்க கற்றுக்கொள்வார்கள்.
கேளுங்கள்:
குழந்தைகள் ஏதாவது பாதிக்கப்பட்டு அழுதால் பெற்றோராகிய நீங்கள் உங்களது பிள்ளையை நேசிப்பதாக கூறவேண்டியது கட்டாயம். அத்துடன் அது விரைவில் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி, அதை சரி செய்ய முனைய வேண்டும். அப்படி முனையும் போது அவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். பிள்ளைகளுடன் சேர்ந்து அந்த விஷயத்தை கையாளும் பொழுது அவர்கள் எப்பொழுதும் அம்மா, அப்பா இருக்கிறார்கள் நமக்கு எதையும் செய்து தருவார்கள் என்று பெற்றோர்கள் மீது தனி விருப்பத்தை உண்டாக்கி உங்களுடன் அவர்கள் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள முன் வருவார்கள்.
தயக்கத்தை வெளிப்படுத்துதல்:
தங்கள் வரவுக்கு மீறி குழந்தைகள் செலவு செய்ய கேட்டால், அது போன்ற சமயங்களில் பிள்ளைகளுக்கு இதை நம்மால் செய்ய முடியாது. அது தேவையில்லை என்று மறுப்பு தெரிவிப்பதையும் தயங்காமல் தெரிவிக்கவேண்டும். சில வேலைகளில் இல்லை என்பது முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் இருக்கலாம். ஆதலால் நயம்பட அது ஏன் கூடாது என்பதற்கான கருத்தை தெரிவிப்பது அவர்கள் மனதில் உங்கள் மீதான மதிப்பை உயர்த்தி காட்டும். மேலும் நீங்கள் கூறும் காரணமும் அவர்களை சிந்தித்து செயல்பட தூண்டும்.
திறமை:
குழந்தைகளிடம் உள்ள தனித்திறமையை கண்டறிந்து அதற்கான குருவை நாடி அந்த கலையை கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு மனதிருப்தியை அளிக்கும். ஓய்வான நேரங்களில் அந்த கலை மேலும் வளர்ச்சி அடைய வழி வகுக்கும். இதனால் நேரத்தை கணக்கிட்டு செலவு அளிப்பார்கள். இதனால் எப்பொழுதும் சுறுசுறுப்படைவார்கள். அவர்களின் தனித்திறமை வெளிப்படுவதற்கு சரியான சான்றும் தக்க தருணமும் இதுதான்.
தோல்வி:
அவர்கள் ஏதாவது போட்டிகளில் சேர்ந்து தோல்வியைத் தழுவினால் வாழ்வில் தோல்வி ஒரு சர்வ சாதாரணமான பகுதி தான். அதில்தான் அதிக கற்றல் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துங்கள்.
இதுபோல் பொறுமையை கையாண்டால் குழந்தைகள் நல்ல விதமாக வளர்வது நிச்சயம். இருவரும் வேலைக்குச் செல்லும் பெற்றோராக இருந்தால் அங்கு நிம்மதியாக வேலை செய்ய முடியும். வீட்டிலும் சந்தோஷமாக இருக்க முடியும். அதற்கு கையாள வேண்டிய வழிகள் இவைகள்தான்.