
குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் பொழுதே நாம் அமைதியாகவும் தெளிவாகவும் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எளிமையான சொற்றொடர்களை அமைத்து நாம் பேசக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு நாம் பேசுவதை பார்த்தால்தான் குழந்தைகள் தெளிவாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்கு பெற்றோர்களும், பெரியோர்களும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
வேலை செய்யும் பெற்றோர் தன் மகள் சிறுமியாக இருக்கும் பொழுது, அவர்களின் பெற்றோரிடம் அனுப்பி வைத்தார்கள். அப்படி அனுப்பி வைக்கும் பொழுது பாட்டிக்கு வயதாகிவிட்டது. அங்குச் சென்று குறும்பெல்லாம் செய்யக்கூடாது.
பாட்டி என்ன சாப்பாடு தருகிறார்களோ அதையே சாப்பிடு. எந்த வேலையை விடுகிறார்களோ, அதையே செய். அப்பொழுதுதான் நீ இருப்பது ஒரு சுமையாக இருக்காது. இல்லை என்றால் அம்மா, அப்பா வளர்த்த முறை சரியில்லை என்று எங்களைத்தான் குறை கூறுவார்கள். ஆதலால் குறை எதுவும் சொல்லாதபடிக்கு நல்ல பிள்ளையாக நடந்துகொள். அப்பொழுதுதான் பாட்டியும் உன்னை புகழ்வார்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
அங்கு சென்றாள். தன்னிடம் அனுப்பியதால் சிறுமியை நாம் மிகவும் கவனமாக கண்டித்து வளர்க்க வேண்டும். இல்லை என்றால் தம்மை குறை கூறுவார்கள் என்று பயந்து பேத்தியை மிகவும் கண்டிப்பாக வளர்க்க ஆரம்பித்தார்.
சிறுமியும்தான் மிகவும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவித பயத்துடனே பெற்றோர்கள் என்ன சொன்னாலும், பாட்டி என்ன சொன்னாலும் அப்படியே ஏற்று தனக்கு என்ன விருப்பம் என்று கூட கூறாமல் வளர்ந்து வந்தார். அனைவருக்கும் பிள்ளை நல்ல பிள்ளையாக இருப்பதில் சந்தோசம்.
சிறுமி பெரியவரானதும் ஒருவித தனிமையை உணர ஆரம்பித்தார். அந்த தனிமையால் தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தார். அப்படி மாற்றி அமைப்பது தன் சுயமதிப்பை வளர்க்கும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், பிரச்னைகளையும் தானே எதிர்நோக்கும் மனோதிடமும் வளரும் என்று நம்பினார். அதேபோல் மாறினார்.
அதன் பிறகு அவளுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பொழுது குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்பு காட்டாமல் அவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்க ஆரம்பித்தார்.
குழந்தைகள் எந்த முயற்சி எடுத்து எந்த வேலையை செய்தாலும் அந்த முயற்சியை பாராட்டினார். அவர்களுக்கும் அதை கற்றுக் கொடுத்தார்.
உங்கள் செய்கைக்கும், நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும், அதற்கு காரணம் நீங்கள் செய்யும் வேலைகளும், உங்களை நீங்களே உணர்ந்து வளர்ந்து கொண்ட முறையும் தானே தவிர மற்றவர்களை குறை சொல்லக்கூடாது என்பவற்றை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தார். அதற்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வளர்த்து வந்தார். இதனால் குழந்தைகள் யாரையும் குறை கூறாமல் வளர்வதற்கு கற்றுக்கொண்டார்கள்.
பெற்றோர் வீட்டிற்குச் சென்றாலும் தனக்கு என்ன தேவை என்பதை கேட்டு வளரும்படி அறி வுறுத்தினார். உங்களை தாழ்த்தி நசுக்கும் படியான சூழல் நேருமாயின் அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்காமல், உங்களை நீங்களே ஊக்குவித்து, ஊக்குவிக்கும் மாற்று சக்திகளை, மாற்று வழிகளை கண்டுபிடித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள். அதையே மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வளர்த்தார். இதனால் குழந்தைகள் எல்லா நேரத்திலும் சுயத்தை இழந்துவிடாமல் எல்லோரிடமும் கருணை உள்ளத்துடனும், அன்பு பிறழாமலும் வாழக் கற்றுக் கொண்டார்கள்.
ஆதலால், சொல்லித்தரும் பொழுதே அனுபவமாக கற்றவற்றை சொன்னால் தெளிவுடன் குழந்தைகள் புரிந்துகொண்டு வளர்வார்கள் என்பது உறுதி.