
வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம், அதில் கரடு முரடான பாதைகளும் முட்புதர்களும் கடக்கமுடியாத இடர்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
நாம் பொதுவாகவே நட்பு அல்லது உறவுகளின் துணையில்லாமல் காலச்சக்கரத்தை ஓட்டுவது கடினம். நமக்கென பல உள்ளங்களை சம்பாதித்து வைத்துக்கொள்வது நல்லது.
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது பொருளாதார சங்கடங்களில் உள்ளவர்களுக்கு பொருள் ஈட்ட வாய்ப்பு தேடித்தருவது. வயது முதிா்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு உதவிசெய்வது, இப்படி பல வகையிலும் உதவும் மனப்பான்மைதான் நமக்கு பல நல்ல வழிகளை இறைவனால் காட்டமுடியும்.
ஒருவர் வீட்டில் திருமண நிகழ்வுகள் நடந்தால் ஏனையோ் நமக்கேன் என ஈகோ பாா்க்காமல் உடல் ரீதியான ஒத்துழைப்பை நல்கலாம்.
அதேபோல ஒரு நண்பரோ, உறவினர் இல்லங்களில் துக்க நிகழ்வு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யலாம் இதுவே மனித நேயத்தியன் வழிபாடு.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விரோதம் கடைபிடிக்காமல் ஒற்றுமையாக வாழ்வதே சாலச்சிறந்தது.
பணரீதியான தேவைகளை பூா்த்தி செய்யும்போது நிதானம் கடைபிடிப்பதே மிகவும் பயன் தரவல்லது. வாழ்ந்து கெட்ட உறவுகளிடம் கொஞ்சம் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் அதுவே மனிதநேயத்தின் உச்சம்!
மருத்துவரீதியாக ஒருவருக்கு ஒருவர் இன்முகத்தோடு உதவும் நிலை வளரவேண்டும்.
அடுக்குமாடி வீடுகளில்குடி இருப்பவர்கள் பக்கத்து வீட்டில் யாா் இருக்கிறாா்கள் என்றே தொியாத நிலையில் இயந்திர கதி வாழ்க்கைதான் பல இடங்களில் நிலவுவதைப்பாா்க்கிறோம்.
அது ஆரோக்கியமான யதாா்த்தமான வாழ்க்கையா என்றால் பதில்… கேள்விக்குறிதான் மிச்சம் இதுதான் வாழ்க்கையா?
நமக்கென நாலுபோ் கூட சமரசமாக அனுசரிப்பாக இல்லை என்றால் நம்மிடம் ஏதோ குறை அந்த நேரத்தில் சுய பரிசோதனையும் தேவைதானோ!
இதுபோல ஒருவருக்கு ஒருவர் மனிதநேயத்தோடு உதவி செய்வது தொடா்பாக ஈசாப் நீதிக்கதையில் குதிரையும் கழுதையும் என ஒரு கதை வரும் கிராமத்திலுள்ள பெரு வணிக வியாபாாிஒருவர் பலசரக்கு கடை நடத்தி வந்தாா் அவர் ஒரு குதிரை மற்றும் கழுதையை வளர்த்துவந்தாா்.
நகரம் சென்று பலசரக்குகள் வாங்கி மூட்டையாக கட்டி, அவைகளின் முதுகில் ஏற்றி வருவாா். அப்போது தொலைதூரம் வந்த களைப்பில் கழுதைக்கு உடல் நலன் குன்றிய நிலையில் குதிரையிடம் தோழரே குதிரையாரே எனக்கு உடல் நலம் சுகவீனமாக உள்ளது, என் முதுகில் உள்ள சுமைகளை உன் முதுகில் ஏற்றி வர முடியுமா என கெஞ்சியது.
மனிதாபிமானம் பாா்க்காத குதிரையோ உன் பாவத்தை நீதான் சுமக்கவேண்டும், என்னால் முடியாது எனக் கூறியது.
கொஞ்ச தூரம் வந்ததும் கழுதை கால் தடுக்கி கீழே விழுந்து இறந்துபோனது. அதைப்பாா்த்த வியாபாாி உடனே கழுதை சுமந்து வந்த சுமைகளை குதிரை முதுகில் ஏற்றியதோடு கழுதையின் தோலை உறித்து குதிரை மீதே ஏற்றிவிட்டாா். இதிலிருந்து குதிரை மனிதாபிமானம் பாா்த்திருந்தால் கழுதை இறந்திருக்க வாய்ப்பு குறைவுதான்!
அதே போலத்தான் நான், நான் மட்டுமே என்குடும்பம் மட்டுமே, போதும் என சுயநலம் கருதாமல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சகோதரத்துவமாக பழகி அன்பு பாராட்டி பழகுவது மற்றும் சொந்த பந்தங்களுன் நட்பு பாராட்டி வாழ்வதே நல்லது!
"கூடி வாழ்ந்தால்கோடி நன்மைதான்" ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி, நல்ல மனப்பக்குவத்துடன் மனிதநேயம் மரிக்காமல், வாழ்வதே நல்ல ஆரோக்கிமான அணுகுமுறை, நாமும் கடைபிடிப்போமா தோழிகளே."