
பீக்காக் பேரென்ட்டிங் (Parenting) என்றால் என்ன?
மயில் தன் அழகை பிறர் புகழ்ந்து ரசிக்க வேண்டும் என்பதற்காக வண்ண மயமான தன் தோகையை, அடிக்கடி விரித்து நடனம் ஆடுவதைப்போல், சில பெற்றோர்கள் தங்கள் சுயமதிப்பு மற்றும் ஈகோவை காப்பாற்றிக்கொள்ள, அவர்கள் விருப்பத்தை எல்லாம் பிள்ளைகள் மீது திணித்து, அதற்கேற்றபடி பிள்ளைகள் செயலாற்ற வேண்டுமென கட்டாயப்படுத்தி அவர்களை வளர்த்து வருவது பீக்காக் பேரென்ட்டிங் எனலாம்.
அப்படிப்பட்ட பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாமல், அவர்களின் திறமைகளையும், சாதனைகளையும் வெளிக்கொணர்ந்து அதை சோஷியல் மீடியாவில் காட்டி தங்களுக்கு பெருமையும் மதிப்பும் தேடிக்கொள்ள விரும்புவார்கள்.
இதற்காக அவர்கள் தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து முதல் ரேங்க் வாங்கணும், விளையாட்டுகளில் சிறந்து விளங்கணும், கராத்தே, ஓவியம் போன்ற பிற கலைகளிலும் பங்கேற்று பரிசு பெறணும் என்றெல்லாம் ஆசைப்படுவார்கள். அதன் மூலம் பிறர் தம்மை மரியாதைக்குரியவர் என போற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
பீக்காக் பேரென்ட்ஸ் எப்பவும் பிற குழந்தைகளின் சாதனைகளை தன் குழந்தையின் சாதனையோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒரு பொறாமை உணர்ச்சியை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
பீக்காக் பேரென்ட்ஸ் அடிக்கடி குழந்தைகளின் தனிப்பட்ட எல்லைகளை மறந்து, அவர்களை கட்டுப்படுத்த, சூழ்ச்சியுடன் ஒரு குற்றவாளி போலவே குழந்தைகளை நடத்துவார்கள். அவர்களின் கவனம் முழுவதும் தன்னலத்தை சுற்றியே இருக்கும். இவ் விதமாக நடத்தப்படும் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, சோகமாகவும் சுயமதிப்பிழந்தும் காணப்படுவார்கள்.
பீக்காக் பேரென்ட்ஸிடம் சிக்கிய குழந்தை தன் உணர்ச்சிகளை பெற்றோர் சிறிதும் மதிக்கவில்லை என்பதை சீக்கிரமே உணர்ந்து கொள்ளும். "நீ ரொம்ப சென்சிடிவ்", "உனக்கு, சுற்றிலும் என்ன நடக்கிறதென்று புரியவில்லை" போன்ற வார்த்தைகளை அடிக்கடி பெற்றோர் கூறுவதைக் கேட்கும்போது, தான் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களாலும் கையாளப்படுகிறோம் என்பது குழந்தைக்குத் தெரியவரும்.
இந்த மாதிரி, தன் தேவைகள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தை பிற் காலத்தில் குறைந்த சுயமதிப்பீடு கொண்டு, சுயசார்பற்ற நிலையில், குழப்பம் நிறைந்த, பிறரை திருப்திப்படுத்தும் ஒரு அவலமான வாழ்க்கையையே வாழ வேண்டி வரும். தங்கள் குழந்தை துன்பப்படுவதைக் கண்ட பின்னும், பீக்காக் பேரென்ட்ஸ் தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ளவோ, மன்னிப்புக் கேட்கவோ தயாராக இருக்கமாட்டார்கள்.
சோஷியல் மீடியாவில் பிள்ளைகளின் பெருமைகளைப் பேசி மதிப்பும் மரியாதையும் பெற முயற்சிப்பதை தவிர்த்து, பிள்ளைகள் முழு கவனத்துடன் கல்வி கற்பதை ஊக்குவித்து பேரென்ட்ஸ் அவர்களை வளர்ப்பார் களானால் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும்.