ரூ. 10 செலவில் வீடு முழுவதையும் மின்ன வைக்கலாம்! சமையல் சோடாவின் மேஜிக் வித்தை!

சமையலறை, குளியலறை மற்றும் வரவேற்பறையை ஒரே பொருளில் பளிச்சிட வைக்கும் ஸ்மார்ட் வழிகள்!
சமையல் சோடா
சமையல் சோடாAI image
Updated on

வீட்டின் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சி அளிக்க சமையல் சோடா தரும் தீர்வுகள்!

வீட்டை சுத்தமாக வைத்திருக்க விலை உயர்ந்த கிளீனிங் பொருட்கள்தான் தேவை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், நம் சமையலறையில் இருக்கும் சமையல் சோடா அதைவிட பல மடங்கு பயனளிக்கும். சமையலுக்கு மட்டுமல்லாமல், வீட்டின் பல இடங்களில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு, துர்நாற்றம், கருகிய கறைகள் போன்றவற்றை எளிதாக நீக்கவும் இது உதவுகிறது.

குறைந்த செலவில் அதிக பலன் தரும் இந்தப் பொருளை சரியான முறையில் பயன்படுத்தினால், வீடு எப்போதும் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

சமையலறையில் இது செய்யும் மேஜிக்

சமையலறை சிங்க், சமையல் மேடை, அடுப்பு போன்ற இடங்களில் எண்ணெய் பிசுக்கு விரைவாகப் படிந்துவிடும். சிறிதளவு சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பசைபோல் கலந்து, அந்த இடங்களில் தடவி மென்மையான ஸ்பாஞ்சால் தேய்த்தால் அழுக்கு எளிதில் நீங்கும். ஸ்டீல் பாத்திரங்களும் மீண்டும் பளபளப்பாக மாறும்.

ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வராமல் இருக்க உதவும்

மீன், இறைச்சி அல்லது நீண்ட நாட்களாக வைத்திருக்கும் உணவுப் பொருட்களால் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் ஏற்படுவது இயல்பு. இதைத் தவிர்க்க, ஒரு சிறிய கிண்ணத்தில் சமையல் சோடாவை வைத்து ஃபிரிட்ஜுக்குள் வையுங்கள்.

அது துர்நாற்றத்தை உறிஞ்சி, ஃபிரிட்ஜை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். மாதம் ஒருமுறை சோடாவை மாற்றினால் போதும்.

கருகிய பாத்திரங்களும் புதிதுபோல் மாறும்

கருகிய பாத்திரத்தைப் பார்த்தாலே சுத்தம் செய்வது கடினம் என்று தோன்றும். ஆனால், பாத்திரத்தில் சமையல் சோடாவைத் தூவி வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடுங்கள். பிறகு மெதுவாகத் தேய்த்தால் பிடிவாதமான கருகிய கறைகளும் எளிதில் நீங்கும்.

சலவையின் சகத்தோழன் வெண்மையின் ரகசியம்

வெள்ளை ஆடைகள் பொலிவுடன் இருக்க சலவைத் தூளுடன் கால் கப் சமையல் சோடாவை சேர்த்து துவைத்தால், வெள்ளை ஆடைகள் மேலும் பிரகாசமாக இருக்கும். வியர்வை நாற்றமும், சிறிய கறைகளும் குறையும்.

சமையல் சோடா
சமையல் சோடாAI image

குளியலறை எப்போதும் சுத்தமாக இருக்க உதவும்.

குளியலறை டைல்ஸ் இடுக்குகளில் படிந்திருக்கும் கருமையை அகற்ற, சமையல் சோடாவுடன் சிறிது தண்ணீர் அல்லது வினிகர் சேர்த்து பசை செய்து தடவுங்கள். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து பழைய பல் துலக்கும் பிரஷ் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி டைல்ஸ் சுத்தமாகத் தெரியும்.

இதையும் படியுங்கள்:
தூக்கி எறியாதீங்க! பழைய சூட்கேஸை மாற்றுங்கள்: அசத்தல் வீட்டலங்கார ஐடியாக்கள்!
சமையல் சோடா

படுக்கையறை வரவேற்பறையின் பாதுகாவலன்.

இதனை மெத்தை, சோஃபாவிலும் பயன்படுத்தலாம். மெத்தை, சோஃபா அல்லது குஷன்கள் மீது சிறிதளவு சமையல் சோடாவைத் தூவி அரை மணி நேரம் கழித்து வாக்யூம் செய்தால், துர்நாற்றமும் தூசியும் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

சமையல் சோடாவின் இன்னும் பல பயன்கள் உண்டு இதோ அதன் பட்டியல்:

1. குப்பைத்தொட்டியில் தூவினால் துர்நாற்றம் குறையும்.

2. காய்கறிவெட்டும் பலகையை எலுமிச்சையுடன் சேர்த்து தேய்த்தால் கறைகளும் நாற்றமும் நீங்கும்.

3. மைக்ரோவேவ், ஓவன் ஆகியவற்றில் படிந்த எண்ணெய் அழுக்கை எளிதாக அகற்றலாம்.

4. சமையலறை சிங்க் மற்றும் குளியலறை வடிகாலில் பயன்படுத்தினால் துர்நாற்றம் குறையும்.

5. குழந்தைகளின் பிளாஸ்டிக் பொம்மைகளை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

6. ஸ்டீல் குழாய்கள், கைப்பிடிகள் மற்றும் பாத்திரங்களுக்கு மீண்டும் பளபளப்பு கிடைக்கும்.

7. காலணிக்குள் சிறிதளவு தூவினால் துர்நாற்றம் குறையும்.

இதையும் படியுங்கள்:
மொட்டை மாடியில் கொத்தமல்லி வளர்ப்பு: ஆண்டு முழுவதும் நறுமண அறுவடைக்கு எளிய ரகசியங்கள்!
சமையல் சோடா

பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை:

பளிங்குக் கல், இயற்கைக் கல் மற்றும் அலுமினியப் பொருட்களில் அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய மேற்பரப்புகளில் பயன்படுத்துவதற்கு முன், ஒரு சிறிய பகுதியில் முதலில் சோதித்துப்பாருங்கள். மேலும், சமையல் சோடாவையும் வினிகரையும் கலந்து மூடிய பாத்திரத்தில் வைத்திருக்கக் கூடாது.

குறைந்த செலவில் அதிக பலன்:

வீட்டை சுத்தமாக வைத்திருக்க எப்போதும் விலை உயர்ந்த பொருட்கள் தேவைப்படாது. வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சமையல் சோடாவை சரியான முறையில் பயன்படுத்தினாலே சமையலறை, குளியலறை, படுக்கையறை என வீடு முழுவதையும் சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் வைத்திருக்க முடியும். குறைந்த செலவில் அதிக பலன் தரும் இந்த எளிய யோசனைகளை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். அதன் பயனை நீங்களே உணர்வீர்கள்.

உங்கள் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்காமல், மிகக் குறைந்த செலவிலேயே வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் துர்நாற்றமின்றி எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க இது பேருதவி செய்யும்.

logo
Kalki Online
kalkionline.com