பரிகாரம் செய்தும் பலன் தாமதமா? காத்திரு, காலம் கனிந்து வரும்!

கடவுளின் அருள் மழை போல இடைவிடாமல் பொழிந்துகொண்டே இருக்கிறது; பரிகாரம் என்ற குளத்தை வெட்டி வைத்து பொறுமையுடன் காத்திருப்பவர்களின் வாழ்க்கையில்தான் மகத்தான மாற்றங்கள் தாமதமாகினும் நிச்சயம் நிகழும்.
majestic-delay-grand-results
majestic-delay-grand-results
Updated on

குடும்பத்தில் குழந்தைகளுக்கு படிப்பு, ஆரோக்கியம், நல்ல வேலை,  திருமணம், பிள்ளைப்பேறு என்று ஏதோ ஒன்றுக்காக கோவில்களுக்குச் சென்று தினமும் பிரார்த்தனை செய்வது எல்லோருக்கும் வழக்கந்தான்.  இதைத் தவிர கூடுதலாக சில விஷயங்கள் நிறைவேறுவதில்  தடையோ தடங்கலோ இருந்தால் உடனே ஒரு ஜோதிடரை நாடி அதற்கு பரிகாரம் வேறு கேட்டு அதையும்  பயபக்தியாக செய்வோம்.   

ஆனாலும் நம் மனதில் எப்போதும் ஒரு சந்தேகமும் ஒரு ஒப்பிடுதலும் இருந்து கொண்டேயிருக்கும். 'நம்மைப்போல்தான் இவர்களும்  கோவிலுக்குப் போகிறார்கள். தெய்வத்தை வலம் வருகிறார்கள்.   பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.  ஆனால் அவர்களின் பிரார்த்தனை மட்டும் உடனே நிறைவேறுகிறதே? நான் இரண்டு வருடங்களாக கோவில்களுக்கு செய்ய வேண்டியதை செய்து வழிபட்டு கொண்டு தானே இருக்கிறேன்? நான் என்ன தவறு செய்துவிட்டேன்? எந்த பரிகாரம் செய்வதில் குறைவைத்தேன்? ஏன்  என் பிரார்த்தனை மட்டும் ஏன் இன்னமும் நிறைவேறவில்லை?' என்று.    இதற்கு பதில் கூறுமுகமாக கதை ஒன்றை பார்ப்போமா?

ஒருமுறை ஒரு நாயும் ஒரு யானையும் ஒரே நேரத்தில்  கருவுற்றனவாம்.  மூன்று மாதங்கள் கழித்து நாய் ஆறு குட்டிகளை பிரசவித்தது.  திரும்ப ஆறு மாதங்கள் கழித்து நாய் மீண்டும் கருவுற்று சில மாதங்களில் மீண்டும் சில குட்டிகளை ஈன்றது.  ஒன்பது மாதங்கள் கழித்து மூன்றாவது முறையாகக் கருவுற்ற நாய் ஒரு டஜன் குட்டிகளை ஈன்றது. இப்படியே தொடர்ந்து பதினெட்டு மாதங்கள் சென்றுவிட்டன.  

இப்பொழுது நாய் யானையிடம் சந்தேகமாக, "நீயும் நானும் ஒன்றாகத்தான் கருவுற்றோம்.  ஆனால் எனக்கு இந்த கால கட்டத்தில் மூன்று முறை பிரசவமாகி மொத்தமாக ஒரு டஜன் குட்டிகளை ஈன்றெடுத்தும் விட்டேன்.  அவை பெரிதாகியும் விட்டன.  ஆனால்   நீ இன்னும் அப்படியே இருக்கிறாயே.  என்ன நடக்கிறது?  நீ நிஜமாகவே கருவுற்றிற்றிருக்கிறாயா? உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?" என்றதாம்.

தன்னம்பிக்கையுடையவர்கள் இயல்பான பெரு மிதத்துடன் கம்பீரமாக இருப்பதை பார்க்கலாம்.  யானையும் கம்பீரமாக அதேசமயத்தில் மிகப் பொறுமையாகப் பதில் சொல்லிற்றாம்.

"நீ ஒன்றை முக்கியமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  நான் என் கருவில் சுமப்பது நாய்க் குட்டியல்ல.  ஒரு யானை.   இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஒரு யானையின் கர்ப்பம் பூர்த்தியாகி பிரசவம் நடக்கும். என் குட்டி யானையை நான் ஈன்று அது இந்த மண்ணை ஸ்பரிசிக்கும் மகத்தான அந்த நொடியில் இந்த பூமி அதை உணர்ந்து சிலிர்க்கிறது.  என் குட்டி கம்பீரமாக நடந்து  சாலையைக் கடக்கும்போது ஜனங்கள் ஒரு கணம் நின்று அதை பெருமிதத்தோடு பார்க்கிறார்கள்.   என் குட்டி  எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் வல்லமை உள்ளது.  நான் சுமக்கும் குட்டி யானை பெரியதாகவும் மிகுந்த வல்லமை படைத்ததாகவும் உள்ளதால் அதற்குத் தகுந்தாற்போல் அது வெளியில் வர நிச்சயம் மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கிறது.  இந்த தாமதம் மகத்தான ஒரு நிகழ்விற்கே!  அதற்கு பொறுமையாகக் காத்திருக்கத்தான் வேண்டும்".

இதையும் படியுங்கள்:
வெற்றிலைக்கு வெற்றிலை என்று பெயர் வந்தது எப்படி? வெற்றிலைப் பயன்பாடு குறைந்து போனது ஏன்?
majestic-delay-grand-results

இப்போது பரிகாரம் செய்யும் விஷயத்திறகு திரும்ப வருவோம். மழை விடாமல் பெய்து கொண்டேயிருக்கிறது.  மழை நீரெல்லாம் கடலில் போய் கலந்துவிடுகிறது.  குளம், குட்டை, ஏரி என்றெல்லாம் வெட்டி வைத்திருந்தால் மழை நீரைத் தேக்கி வைத்துக்கொள்ள முடியும்.  இல்லாவிட்டால் வீணாகக் கடலில் போய் கலந்துவிடுகிறது.

கடவுளின் கருணை மழையும் அப்படித்தான் விடாமல் பொழிந்து கொண்டேயிருக்கிறது.  நாம் பரிகாரம் என்ற குளத்தை வெட்டி விட்டால் நம்மால் அவரின் அளவு கடந்த  அருளைத் தேக்கிக்கொள்ள முடியும்.  குளம் வெட்டி விட்டு மழைக்காகக் காத்திருப்பதைப்போல பரிகாரம் செய்துவிட்டு கடவுளின் அருள் மழைக்கும்  காத்திருக்கத் தான்  வேண்டும்.  ஏனென்றால் நமக்கு வாழ்க்கையில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மகத்தான விஷயங்கள் நடக்க போகிறது அல்லவா?

logo
Kalki Online
kalkionline.com