

வீடு என்பது வெறும் செங்கல், மணலால் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அன்பால் உருவான கட்டுமானம்.
வீடு எப்போதும் ஒரே மாதிரி அமைதியாக இருந்தால், அது சுவாரஸ்யமற்ற இடமாக மாறிவிடும். குடும்ப வாழ்க்கையில் கொண்டாட்டங்களும், சில மன வருத்தங்களும் இருக்கத்தான் செய்யும்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, நம்முள் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பே. அந்த மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள் உள்ளன.
முதலில், உங்கள் கருத்துகளைத் தெளிவாகவும் தாராளமாகவும் சொல்லுங்கள். “குடும்ப அமைதி மற்றும் நலனை காக்கிறேன்” என்று நினைத்து, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மறந்து விடாதீர்கள்.
மகளோ, மகனோ அல்லது மருமகளோ—யாரிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம்.
நீங்கள் உங்கள் கருத்துகளைப் பகிரும்போது, அவர்களது கருத்துகளையும் கேட்டு புரிந்துகொள்ளுங்கள்.
திட்டமிட்டு உங்கள் வேலைகளைச் செய்து கொண்டாலும் மன அழுத்தம் குறையும்.
அதிக மனஅழுத்தம் ஏற்பட்டால், நம்பகமான தோழி அல்லது உறவினரைச் சந்தித்து, மனம்விட்டு பேசி உங்கள் மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவர்கள் ஏதேனும் ஆலோசனை தந்தால், உங்களுக்கு ஏற்புடையதை மட்டும் செயல்படுத்துங்கள்.
நடந்த கசப்பான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்காமல், வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை நினைவில் கொண்டு மகிழுங்கள். ஏதேனும் வெளி ஊருக்கு தோழிகளுடன் சென்று வாருங்கள்.
மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தினமும் நம் சிந்தனைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்து, தியானம் செய்வது, பிடித்த இசையைக் கேட்பது அல்லது தோட்ட வேலை செய்வது போன்ற செயல்கள் மனதை அமைதியடையச் செய்யும்.
உங்கள் வாழ்க்கையில் உள்ள சிறு சிறு மகிழ்ச்சிகளை நினைவுகூர்ந்து, அதனை குடும்பத்துடன் பகிர்ந்தால் மனஅழுத்தம் தணியும்.
தங்களது கோபம், கசப்புகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், நேர்மையாகப் பேசினால் குறுகிய நேரத்தில் பிரச்னைகள் தீர்வாகும்.
உண்மையான அன்பு என்பது ஒருவரின் தவறை உணர்த்துவது மட்டுமல்ல; அவர் அதனை புரிந்துகொண்டு, அதனை மீண்டும் செய்யாமல் இருப்பதே மன நிம்மதியைத்தரும்.
மற்ற நேரங்களில், குடும்ப உறவுகள் மகிழ்ச்சியில் மலர்ந்து, மழலைகளின் சிரிப்பில் மூழ்கி இருக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு தொடர்ச்சியான பயணம்; அதில் ஒவ்வொரு தடையும் ஒரு அனுபவமாகும். அந்த அனுபவங்களை நேசமாக ஏற்று, வீடு என்ற அந்த அன்பு உலகத்தை ஆளக்கற்றுக்கொள்ளுங்கள்.