அது ஒரு ஆன்மிகக் கூட்டம். ஞானி ஒருவர் தனது உரையாடலால் அந்தக் கூட்டத்தில் இருந்த மக்களைக் கட்டிப்போட்டிருந்தார். அவரது கணீர் குரலும் தெளிவான கருத்துக்களும் கேட்பவரை மகிழ வைத்துக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்து அனைவரும் கலந்தனர்.
சிலர் ஞானியிடம் சென்று அவரைப் பாராட்டி மகிழ்ந்தனர். அனைவரும் சென்றபின் ஒரு இளம் வயது பெண் அங்கிருந்து நகராமல் நின்றாள். ஞானி அவளை அழைத்து "என்ன?" என்றார். "நான் உங்கள் கருத்துகளுக்கு அடிமையாகி விட்டேன். உங்களை பின் தொடர்கிறேன். உங்களுடனே வந்து ஆன்மிக சேவையில் ஈடுபட வேண்டும்" என்றாள். ஞானி அவளை உற்று நோக்கி, "மகளே, நீ இப்போதுதான் வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைக்கிறாய். நான் சொன்ன அனைத்தும் வாழ்விலே கடைப்பிடித்து வெற்றிகரமான பெண்ணாகத் திகழப் போகிறாய். நான் சொன்னவற்றை மனதில் மட்டும் ஏற்றுக்கொள். ஆனால், அதை தீவிரமாக எண்ணிக்கொண்டு, ஆன்மிக சேவையில் ஈடுபடுவேன் என்ற எண்ணத்தை விட்டு விடு. உனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. உனது பெற்றோர் இருக்கிறார்கள். ஆன்மிக சேவை என்பதெல்லாம் அனைத்தையும் துறந்த ஞானிகளுக்கே பொருந்தும். எதையும் தீவிரமாக எண்ணுவதை விடுத்து, மிதமாக இருந்து பார். வாழ்க்கை நலமாகும்" என்றார்.
இந்த அறிவுரையை கேட்ட அந்த இளம் பெண் மனம் தெளிந்து திரும்பினாள்.
இன்னொரு சம்பவம். தனது ஒரே மகளின் மீது அதீத அன்பு வைத்திருந்தாள் ஒரு தாய். அந்தப் பெண்ணுக்கு பள்ளி இறுதி படிப்பு முடிந்ததும் ஒரு சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், தனது மகளைப் பிரிய மனமில்லாத அந்தத் தாய் அவளை கல்லூரிக்கு அனுப்ப சம்மதிக்கவில்லை. இதனால் அந்த மகளுக்கோ ஏமாற்றம்.
தனக்குத் தெரிந்த ஒரு பெரியவரிடம் சென்று தனது நிலையை சொன்னாள் அந்த இளம் பெண். அவளது தாயிடம் பெரியவர் சொன்னார், "இந்த அன்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி தான். ஆனால், அது என்றும் மிதமாகத்தான் இருக்க வேண்டும். தீவிரமாக மாறுவதால் உனது மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். நல்லதொரு வாய்ப்பை அவள் இழந்து, வாழ்வில் வேதனைப்படும் சூழல் வரும். ஆகவே, உன்னுடைய அன்பை மகளிடமிருந்து வேறொன்றில் செலுத்து" என்று ஆலோசனை சொன்னதன் பேரில் அந்தத் தாய் மனம் மாறி, தனது மகளை கல்லூரிக்கு அனுப்பினாள்.
இந்தத் தீவிரவாதம் , மிதவாதம் என்பது நமது வாழ்க்கைக்குள்ளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. நம் வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கும் சக்தி கொண்டது இந்த தீவிரவாதம் அல்லது மிதவாதம். எதிலும் தீவிரவாதம் என்பது வாழ்வை பின்னடைவையே சந்திக்க வைக்கும். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.
ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்வரும் தோல்விகளை சமாளித்து முன் செல்லும் பிடிவாத குணத்திற்கும் தீவிரவாதம் என்றுதான் பெயர். இந்தத் தீவிரத்தை தொழிலில் காட்டும்போது அது வெற்றி ஆகிறது (ஆனாலும் சிலவற்றை இழக்க வேண்டியிருக்கும்). இது விதிவிலக்கு. ஆனால், முன் சொன்ன அந்த இரண்டு சம்பவங்களில் மிதவாதம் என்பதுதான் நன்மையைத் தருகிறது. அன்பு காட்டுவதிலும், மதக் கொள்கைகளை கடைப்பிடிப்பதிலும், நாம் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் , உண்ணும் உணவிலும் , ஓட்டும் வாகனத்திலும் கூட மிதவாதமே சிறந்தது. ஆம், மிதமான உணவு நலமும், மிதமான வேகம் பாதுகாப்பும் தரும். எதிலும் தீவிர ஆசை நிம்மதிக்குக் கேடு. எனவே, எந்நாளும் மிதவாதிகளாகவே இருந்து நிம்மதியாக வாழ்வோம்.