ஓய்வு காலம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு அற்புதமான கட்டமாகும். இது நம்மை ஓய்வெடுக்கவும், வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை ஆராயவும், அன்புக்குரியவர்களுடன் அதிகமான நேரத்தை அனுபவிக்கவும் வாய்ப்பளிக்கிறது. இதுபோக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கவும், அவர்களின் ஓய்வு காலத்தை இன்னும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கழிக்க சில இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வது நிறைவான மகிழ்ச்சியைத் தரும். அப்படி தமிழகத்திலே மிக அருகிலே இருக்கும் இடங்கள் என்னென்ன என்பதை அறிந்து பயணம் மேற்கொள்ளலாமே...
ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய கோடை காலத்தை இனிமையாக அனுபவிப்பதற்கு என சில சுற்றுலா தலங்கள் இருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொல்லிமலை (Kolli Hills), பசுமையான அருவிகள் சூழ்ந்த இயற்கை எழிலுக்கும் மற்றும் பழமையான அரபலீஸ்வரர் கோயிலுக்கும் பெயர் பெற்ற ஓர் அமைதியான இடமாகும். இதுபோக அங்கு உணரப்படும் குளிர்ந்த தட்பவெப்ப நிலையும் (cool climate), அமைதியான சூழ்நிலையும் வயதானவர்களுக்கு மனநிம்மதியைத் தரும்.
கொடைக்கானலுக்கு அருகிலுள்ள வட்டக்காணலில் (Vattakanal) உள்ள அழகிய நீர்வீழ்ச்சி கண்களுக்கு விருந்தளிக்கும் இடமாக உள்ளது. அதை சுற்றியுள்ள இடங்கள், நமக்கு நிதானமான நடைப்பயணத்திற்கும், ஓய்வெடுப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். இங்கு நிகழும் அமைதியான சூழல் ஓய்வு பெற்றவர்கள் தங்கள் பொன்னான நேரத்தைக் கழிக்கச் சிறந்த தேர்வாக அமைகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள ட்ரான்குபார் (Tranquebar) அல்லது தரங்கம்பாடி, ஒரு கடற்கரை நகரம். அங்குள்ள கடற்கரைகள் சூழ்ந்த டேனிஷ் கட்டடக் கலைகள் நமக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். அங்குள்ள அமைதியான சூழ்நிலையும், வளமான வரலாறும் நமக்குப் புத்துணர்ச்சியூட்டும் கோடை அனுபவத்தை வழங்குகிறது.
‘அலை அலையான மலைகள்’ (High Wavy Mountains) என்று அழைக்கப்படும் மேகமலை (Megamalai), பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்ட, சொர்க்கத்தைப்போல் உணர வைக்கும் இடமாகும். குளிர்ந்த தட்பவெப்பநிலையும், இயற்கையை ரசித்தவாறு நாம் மேற்கொள்ளும் நடைபயணமும், வித்தியாசமான பறவைகளின் காட்சிகளும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓர் இனிமையான அனுபவத்தை வாரி வழங்குகிறது. பின் தேனிக்கு அருகில் அமைந்துள்ள கும்பக்கரை நீர்வீழ்ச்சியும் கோடை காலத்தில் கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும்.
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ (Spa of South India) என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் (Courtallam) ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உண்டு. இயற்கை நீரூற்றுகளில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதால் உடல் உபாதைகள் நீங்கி, மனஅமைதி பெறுகின்றனர். அங்கு குளிர்ந்த காற்றோட்டமான சூழ்நிலை நிலவுவதால், புத்துணர்ச்சி பெற விரும்புபவர்களுக்கு இதமான கோடைகால இடமாக அமைகிறது.
ஆனைமலையில் அமைந்துள்ள வால்பாறை (Valparai), பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுடன் சூழ்ந்த மற்றொரு மெய்சிலிர்க்கும் இடமாகும். அங்கு திகழும் இதமான வானிலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் கோடை காலங்களில் நம் ஓய்வுக் காலத்தைக் கழிக்க சிறந்த இடமாக அமைகிறது.
மற்றொரு மலை பிரதேசமான ஏலகிரி (Yelagiri) நமக்கு அமைதியான சூழலையும், ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் விரும்புவர்களுக்கு என பல பிரத்யேக சாகச விஷயங்களையும் வழங்குகிறது.
ஆக, ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வு காலத்தை அர்த்தமுள்ள அனுபவமாக மாற்ற, மேலே குறிப்பிட்டதுபோல் பல இடங்களுக்குச் சென்று வந்தால், அவர்களுடைய உடல்நலத்தையும், மன நலத்தையும் இருக்கும் காலம் வரை நிம்மதியாக பேணி காத்து சந்தோஷமாக வாழலாம்.