மலச்சிக்கல் போன்றதே மனச்சிக்கல்!

Mental disorder is like Constipation
Mental disorder is like Constipationhttps://qbi.uq.edu.au

ல்ல வளமான ஆரோக்கியமான குடும்பம் என்றால் கருத்து வேறுபாடுகளே இல்லாத குடும்பம் என்று அர்த்தமல்ல. எந்த ஒரு சமுதாயத்திலும் இடத்திலும் நிசப்தமும் அமைதியும் தேவைதான். ஆனால், ஒரு மயானத்தில் இருக்கும் நிசப்தத்தை விட ஒரு மகிழ்ச்சியான இடத்தில் இருக்கும் குழப்பமும் கூச்சலுமே மேல் என்று யாரும் ஒப்புக்கொள்வார்கள்.

எந்த ஒரு குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குடும்பங்களில் இருக்கும் அங்கத்தினர்கள் தங்களுடைய கருத்துக்களை மனம் விட்டு, ஒளிவுமறைவில்லாமல் பேசுவார்கள். பேசுவதற்கு சுதந்திரம் அளிக்கப்படும். எந்தவிதமான தங்குதடையில்லாமல் மனம் திறந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வார்கள்.

நம் எல்லோருக்கும் மலச்சிக்கல் என்றால் என்னவென்று தெரியும். எந்த ஒரு உயிரினமும் இயற்கையின் விதிகளுக்குட்பட்டு அந்தந்த நேரங்களில் சரியாகக் கழிவுகளை வெளியேற்றித்தான் ஆக வேண்டும். இதில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு. சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து வரக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

மலச்சிக்கல் எப்படி உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்குமோ அந்த அளவிற்கு 'மனச்சிக்கல்' ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். மனதில் ஏற்படும் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் வெளிப்படையாக சொல்லி கருத்துக்களைப் பரிமாற சந்தர்ப்பம் இல்லாவிட்டால், அந்தச் சூழ்நிலை எல்லோருக்கும் தீமையை உண்டுபண்ணும்.

ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலவ வேண்டுமென்றால் மனம் திறந்து பேசக்கூடிய சூழ்நிலையும், கருத்து வேறுபாடுகளை நல்ல ஆரோக்கியமான வழியில் தீர்த்துக்கொள்ளும் மனப்பக்குவமும் இருக்க வேண்டும். இதுபோன்ற குடும்பங்களில் எந்த ஒரு முடிவும், திட்டமும் காரணமில்லாமல் தள்ளிப்போடுவது போலவும், சண்டையில் முடிவது போலவும் இருக்கும். குழப்பமாகவும் இருக்கலாம். ஆனால், அந்தக் குழப்பத்திலும் ஒரு சுகமிருக்கும். அந்த ஒரு கருத்து வேறுபாட்டிலும் ஒரு ஆரோக்கியம் இருக்கும்.

இந்த மனம் விட்டுப் பேசி, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் சூழ்நிலை ஒரு குடும்பத்தில் இருக்க வேண்டுமானால், கீழ்கண்டவை அங்கு இருக்க வேண்டும்.

ஒருவர் மனதை மற்றொருவர் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய கருத்துக்கு எதிர்மாறான கருத்து ஏன் சொல்கிறார் என்பதைச் சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்மாறான நம்முடைய கருத்தைச் சொல்லும்போது, அந்தக் கருத்து மற்றவருக்குத் தேவைதானா என்று நினைத்துப் பார்த்து, பிறகு சொல்ல வேண்டும். சொல்லப்படும் கருத்துக்கள் குறிப்பிடும்படியாகவும், குழப்பமில்லாமலும் (SPECIFIC) இருக்க வேண்டும். மற்றவர் நம்முடைய கருத்தை எதிர்பார்க்கவில்லை என்று நாம் நினைத்தால் அனாவசியமாக நம்முடைய கருத்தை அவர் மேல் திணிக்கக்கூடாது. அவர் தன்னைப் பற்றிய விஷயங்களில் சுயமாக சிந்தித்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்கக்கூடிய மனப்பக்குவம் படைத்தவர் என்று நாம் நம்ப வேண்டும்.

மாறுபட்ட கருத்தைச் சொல்லும்போது, அதற்குரிய நேரத்தில் காலம் கடத்தாமல் சொல்ல வேண்டும். நடந்து முடிந்து பல மாதங்கள் கழித்தும் நீ அப்படிச் செய்திருக்கக்கூடாது, இப்படித்தான் செய்திருக்க வேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. தன்னுடைய கருத்தைச் சொல்லி முடித்தபின் அது சரியாக புரிந்துகொள்ளப்பட்டதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாம் சொல்வது ஒன்றாகவும், புரிந்துகொள்வது ஒன்றாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

குடும்பத்திலிருப்பவர்கள் தங்களைப் பற்றியே நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். தனது நல்ல குணங்கள் என்ன, பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். அதேபோன்றே மற்றவர்களைப் பற்றியும் உணர்ந்துகொள்ள வேண்டும். தன்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் நன்றாக உணர்ந்துகொண்டு, நமது கருத்தை மற்றவர்களுக்குச் சொல்லி, மற்றவர்கள் கருத்தை நாமே முன்வந்து கேட்டால் நமக்குள்ளே இருக்கும் மனித நேயமும், சுமுகமும் வளரும்.

ஒரு குடும்பத்தில் ஏற்படும் அபிப்பிராய பேதங்களை (CONFLICT) ஆக்கபூர்வமாக உபயோகிக்க வேண்டும். இதுபோன்று செய்வதால் குடும்பத்திலுள்ளவர்கள் தங்களை ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. அபிப்பிராய பேதங்களை நேரிடையாகப் பேசித் தீர்க்காமல், ஒருவருக்குப் பின்னால் வம்பு, புரளி போன்ற அரசியலில் ஈடுபட்டு உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதால் யாருக்கும் எந்த லாபமும் இருக்காது. இந்த அணுகுமுறை மனக்கசப்பை உண்டுபண்ணி மக்களைப் பிரித்து நம்பிக்கையைத் தகர்த்து சண்டையைத்தான் உண்டுபண்ணும்.

கருத்துக்களைப் பரிமாற்றம் செய்துகொள்ளும்போது மிகவும் அவசியமாகத் தேவைப்படுவது ஒருவர் சொல்வதை மற்றவர் நன்றாகவும் உன்னிப்பாகவும் கேட்டுக்கொள்வது (LISTENING) நமது காதில் விழுவதெல்லாம் நாம் கேட்டுக்கொள்வது என்பதாகாது. காதில் விழுவது (HEARING) என்பது வேறு, கேட்பது (LISTENING) என்பது வேறு.

கேட்பது என்பது சொல்லக்கூடிய கருத்தை, சொல்பவரின் மனநிலையை அறிந்து நன்றாகவும் மனப்பக்குவத்துடன் புரிந்துகொள்வதாகும். நாம், ஒருவர் சொல்லும் கருத்துகளைக் கேட்டு ஆக்கபூர்வமாகச் செயல்பட கீழ்க்கண்டவைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குடும்ப வேலைகளைப் பகிர்ந்து கொள்வோமே!
Mental disorder is like Constipation

ஒருவர் பேசும்போதே, அவர் பேசுவது சரியா தப்பா என்று எடை போடாதீர்கள். முதலில் முழுமையாகக் கேளுங்கள். மற்றவர் சொல்லும் கருத்தில் நமக்குச் சாதகமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவர் பேசும்போது நமது கவனம் முழுவதையும் அவரின் மேல் செலுத்த வேண்டும். அதை விடுத்து, இங்கும் அங்குமாகப் பார்த்துக்கொண்டு அவர் சொல்வதில் பாதியை மட்டும் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வருவது நல்லதல்ல.

ஒரு குடும்பத்தில் மாறுபட்ட கருத்துக்களைச் சொல்லும் ஆரோக்கியமான, சூழ்நிலை இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் புதிய வித்தியாசமான தீர்வுகள் கிடைக்கலாம். பிரச்னைகளில் மூழ்கியிருக்கும் ஒருவரை விட, பிரச்னைக்கு அப்பால் இருப்பவர்களுக்கு மனத் தெளிவு நன்றாக இருப்பதால், அவரால் அந்தப் பிரச்னைகளைப் பற்றி நன்றாக யோசிக்கக்கூடிய மனநிலை இருக்க சாத்தியமுண்டு.

நன்றி: மங்கையர் மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com