
குழந்தை வளர்ப்பில், இந்த குறிப்பிட்ட மாதத்தில்தான் திட உணவு தர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. குழந்தையின் பசியைத் தீர்க்கப் போதுமான பால் கிடைக்காதபோது குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆக. இப்போது ஒரு சிறிய ஸ்பூன் அளவுக்கு வாழைப் பழத்தை நசுக்கிக் கொடுக்கலாம்.
ஆறு மாதத்தின்போது பொதுவாக திட உணவுகளை ஆரம்பிக்கிற கட்டாயம் நிச்சயம் உண்டு. ஏனென்றால், பிறந்த குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்து ஆறு மாதம் வரை குழந்தையின் உடலில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆறாவது மாதத்தில் இருந்து நாம் கொடுக்கிற திட உணவிலிருந்துதான் இரும்புச் சத்தைப் பெற வேண்டிய கட்டாயம் குழந்தைக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு திட உணவை ஆரம்பிக்கும்போது சில அடிப்படையான விஷயங்களை கவனித்துக்கொள்வது நல்லது.
குழந்தை பசியாக இருக்கும்போது உணவு கொடுங்கள்.
புதிய உணவை குழந்தை பசியின்றி இருக்கும்போது கொடுத்துப் பரிசோதிக்காதீர்கள்.
ஒரு புதிய உணவைக் கொடுத்து குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் உடனே அடுத்த உணவை பரிசோதிக்காதீர்கள். குறைந்தபட்சம் அதற்கு ஒரு வாரம் இடைவெளி விடுங்கள்.
குழைத்த அரிசிக் கஞ்சியை குழந்தைகள் எளிதில் சாப்பிட்டு ஜீரணிக்கும். தவிர, இந்த உணவில் 'ஒவ்வாமை' எதுவும் நிச்சயமாக வராது.
முதலில் மூன்று, நான்கு ஸ்பூன் உணவு கொடுங்கள். பின் மெல்ல மெல்ல அளவை அதிகரிக்கலாம்.
பழங்கள் கொடுக்க ஆரம்பிக்கும் முன்பு காய்கறிகளைப் பழக்குங்கள். ஏனென்றால், பழங்கள் ருசியாக இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு விட்டால் பிற்பாடு குழந்தைகள் காய்கறிகளைச் சாப்பிடாமல் ஏமாற்றும். காய்கறிகளில் காரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை முதலில் அறிமுகப்படுத்தலாம்.
ஆறு முதல் ஒன்பது மாதம் வரை: இப்போது உங்கள் குழந்தை எடை இரண்டு மடங்காக ஆகியிருக்கும். உங்கள் குடும்பத்தில் எல்லோரும் எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்களோ, அதே நேரத்தில் குழந்தைக்கும் உணவு கொடுத்துப் பழக்கலாம்.
ஸ்பூன் வைத்து உணவைக் கொடுக்கும்போது நாக்கின் பின்புறம் உணவை வைத்துப் பழக்குங்கள். ஒரு கப் அல்லது தம்ளரில் வைத்துத் தண்ணீர் குடிக்கப் பழக்குங்கள். பிஸ்கெட், ஒரு பிரட் பீஸ் அல்லது ஒரு துண்டு சப்பாத்தி (தயவுசெய்து முழு சப்பாத்தியைக் கொடுத்து வேடிக்கை பார்க்காதீர்கள்) கொடுத்து கடிக்கப் பழக்குங்கள்.
பட்டாணி, பாப்கார்ன், நீளமான பீன்ஸ், விரல் மாதிரி நறுக்கிய காரட் போன்றவற்றை கட்டாயமாக குழந்தையிடம் கொடுக்கக் கூடாது. இவை தொண்டையில் சென்று அடைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
சில குழந்தைகளுக்கு எதைச் சாப்பிட்டாலும் ஒவ்வாமை ஏற்படும். அம்மாதிரி குழந்தைகளுக்குக் கண்டிப்பாக முட்டை, சாக்லேட், கடல் உணவுகள் போன்றவற்றைத் தரக்கூடாது.
10 - 12 மாதம்: இப்போது குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பித்திருக்கும். பழக்கப்படுத்தியிருக்கிற உணவுகளைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டு வாருங்கள். எதுவாக இருந்தாலும் கப்பில் கொடுத்துப் பழக்குங்கள். பாட்டில் பிடிக்கிற பழக்கமெல்லாம் இந்த நேரத்தில் குழந்தை விட்டு விட வேண்டும். தானே சாப்பிட மெல்ல பழக்கலாம். டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறவர்கள், டேபிள் மேல் சில உணவுகளை பிரித்து வைப்பது நல்லது. குழந்தையின் பசி அதனால் அதிகரிக்கும். பால் குடிப்பது மெல்ல குறைய ஆரம்பிக்கும். உங்களோடு சேர்ந்து மூன்று வேளை சாப்பிட குழந்தையைப் பழக்குங்கள். பிடித்தால், பசித்தால் சாப்பிடட்டும். வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள். இந்த முறை தேவையற்ற பிடிவாதங்களைத் தவிர்க்கும். எப்போது உங்கள் குழந்தை சாப்பிட்டாலும் கவனித்துக்கொண்டே இருங்கள்.
1 - 2 வருடம்: குழந்தையின் வளர்ச்சி மாறிக்கொண்டே இருப்பதால் உணவுத் தேவைகளும் மாறும். குழந்தையின் எடை இப்போது பிறந்தபோதிருந்த எடையை விட மூன்று மடங்காக ஆகியிருக்கும். இந்தச் சமயத்தில் குழந்தைகளின் விருப்பம், உணவுகள் மீது வெகுவாகக் குறைந்திருக்கும். அவர்கள் தங்களுடைய உலகத்தைக் கண்டுபிடிப்பதைத் தீவிரமாக செய்துகொண்டிருப்பார்கள். நிச்சயமாக பசியோடு இருக்கும்போதுதான் சாப்பிடுவார்கள். இல்லையென்றால் ஒரே தள்ளு. எனவே, சாப்பாட்டு நேரத்தின்போது நீங்கள் குழந்தையைக் கவருகிற மாதிரி அழகான தட்டுகள், கப் மற்றும் பார்த்தால் வசீகரிக்கிற உணவு வகைகளை அவர்கள் முன்பு வைக்க வேண்டும்.
சில குழந்தைகள் இந்த நேரத்தில் பால் குடிப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு தயிர், வெண்ணெய் போன்றவற்றைக் கொடுக்கலாம். பழங்கள் கொடுப்பது இந்த வயதில் மிகவும் முக்கியம். அப்போதுதான் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்களும், தாதுச் சத்துக்களும் கிடைக்கும். பழங்களைப் பிழிந்து ஜூஸ் தயாரித்துக் கொடுக்கும்போது, சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். பதப்படுத்தப்பட்ட பழங்கள், ஜூஸ்களை கண்டிப்பாகக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். அதேபோல், காபி, டீ கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது.
டாக்டர் வஸந்த் செந்தில்