
நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்திய நான் ஸ்டிக் தவாவின் டெஃப்ளான் கோட்டிங் தேய்ந்து விட்டதா? இனி அதை பயன்படுத்தவே முடியாது என நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள், அதை நீங்கள் மீண்டும் புதுப்பிக்கலாம். இந்தப் பதிவில் டெஃப்ளான் கோட்டிங் உரிந்து போன நான் ஸ்டிக் பாத்திரங்களை மீண்டும் புதுப்பிக்க சில எளிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
நான் ஸ்டிக் பாத்திரங்கள் சமையலை எளிதாகும் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவற்றின் ஆயுட்காலம் என்பது நாம் அவற்றை எந்த அளவுக்கு கவனமாகக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து மாறுபடும். அதிகப்படியான வெப்பம், மெட்டல் சமையல் கரண்டிகள் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் அதன் மேற்பூச்சு சேதமடையலாம்.
நான்ஸ்டிக் பாத்திரத்தை புதுப்பிக்கும் முறைகள்:
நீங்கள் இரும்புப் பாத்திரம் வாங்கினால் அதை சீசனின் செய்வது போல, நான் ஸ்டிக் தவாவையும் செய்ய முடியும். இதைச் செய்வதற்கு முதலில் தவாவை வெதுவெதுப்பான சோப்பு நீரில் நன்கு கழுவி உலர வைக்க வேண்டும். பின்னர், சிறிய அளவு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை அதில் தடவவும். இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தவாவை சில நிமிடங்கள் சூடாக்குங்கள். எண்ணெய் புகை வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து தவாவை ஆறவிடவும். துணியை வைத்து அதிகப்படியான எண்ணெயைத் துடைத்து எடுக்கவும். இதே போல இரண்டு மூன்று முறை செய்தால் தவாவின் ஒட்டாத தன்மையை மீட்டெடுக்கலாம்.
எண்ணெய்க்கு பதிலாக வினிகர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தியும் சீசனின் செய்ய முடியும். ஒரு கப் அளவுக்கு வினிகரை தவாவில் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர், அடுப்பை அணைத்து பேக்கிங் சோடா தூவி, தவாவை நன்கு தேய்த்து கழுவவும். இந்த முறையின் மூலம் தவாவில் ஒட்டி இருக்கும் உணவுப்பொருட்களும், கரைகளும் முற்றிலுமாக நீங்கும்.
தவாவில் கல் உப்பை பரப்பி உருளைக்கிழங்கு வைத்து நன்றாகத் பேய்த்தும் அதை சீசனிங் செய்யலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், தவாவில் உணவுப் பொருட்கள் ஒட்டாமல் சமைக்க முடியும்.
முடிந்தவரை நான் ஸ்டிக் பாத்திரங்களை கவனமாகப் பராமரிக்கவும். அதிக வெப்பத்தை அதற்கு பயன்படுத்தாதீர்கள். மர அல்லது சிலிகான் கரண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும். டெஃப்லான் கோட்டிங் உரிந்த பாத்திரங்களை தூக்கி எறியாமல், மேலே கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பின்பற்றி அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். இருப்பினும், மேற்பூச்சு அதிகமாக சேதமடைந்திருந்தால் புதிய நான் ஸ்டிக் தவா வாங்குவதே நல்லது.