தவறாகப் புரிந்து கொள்ளப்படும் ‘ஆட்டிட்யூட்’ எனப்படும் மனப்பான்மை!

Attitude
Attitude
Published on

ங்கிலத்தில் ‘ஆட்டிட்யூட்’ என்ற சொல்லுக்கு தமிழில் மனப்பான்மை என்று பொருள் கொள்ளலாம். மனப்பான்மை என்பது ஒருவர் சிந்திக்கிற, எண்ணுகிற அல்லது நடந்து கொள்கிற முறையைக் குறிக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் ஒரு மனிதர் ஆட்டிட்யூட் காட்டுகிறார் என்று சொல்லும்போது அது எதிர்மறையாக, தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அவரை ஆணவம் பிடித்தவர்களாக எண்ணிக் கொள்கிறார்கள்.

மனப்பான்மையின் தன்மை: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனப்பான்மை இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப, அப்போதைய மனநிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரின் மனப்பான்மையும் மாறுபடும். பலர் மனப்பான்மையை உண்மையான நடத்தையுடன் குழப்பிக் கொள்கிறார்கள். மனப்பான்மை என்பது எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல.

அணுகுமுறைகள்: அணுகுமுறைகள் எப்போதும் சூழல் சார்ந்துதான் இருக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் மக்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை கொண்டிருக்கலாம். ஆனால், பலர் சூழலின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் தனி மனிதர்களின் மனப்பான்மையை குறித்துப் பேசும்போதும் கருத்து சொல்லும் போதும் அது எதிர்மறையாக பிரதிபலிக்கிறது.

தவறான கணிப்பு: மனப்பான்மை பெரும்பாலும் எதிர்மறையான உட்பொருளை கொண்டுள்ளது. உதாரணமாக ஒருவர் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு செல்லும்போது, ‘எனக்குப் பனீர் சார்ந்த உணவுப்பொருட்கள் பிடிக்காது’ என்று சொல்கிறார். நண்பர்கள் அவரை அதைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால், அவர் மறுத்து விடுகிறார். அப்போது, ‘அவன் ரொம்பத்தான் ஆட்டிட்யூட் காமிக்கிறான். நாம இவ்வளவு சொல்றோம். கேட்க மாட்டேங்கிறானே’ என்று சொல்வார்கள். இது அந்த குறிப்பிட்ட நபரின் ஆணவம் அல்லது பிடிவாதம், மரியாதையின்மை போன்ற அர்த்தத்தை குறிப்பதாக இருக்கிறது. பனீர் சம்பந்தமான உணவுப் பொருட்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதை மறுப்பதை எதிர்மறையாக நினைத்துக் கொண்டு அவரைப் பற்றி தவறான கணிப்பிற்கு மக்கள் செல்கிறார்கள்.

புறக்கணிக்கப்படும் காரணங்கள்: அடிப்படையான காரணங்களை புறக்கணித்துவிட்டு அவர் அந்த சூழ்நிலையில் சொல்லும் சொற்களையும் உணர்ச்சிகளையும் வைத்துக் கொண்டு அவரது மனப்பான்மையை தீர்மானிப்பது தவறாகும். அந்த நபருக்கு பனீர் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். அதனால் அவர் அதை மறுக்கலாம். இதற்கு முன்பு பிடிக்காத உணவை உண்டு அவருக்கு உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டிருக்கலாம். இதைப் புரிந்து கொண்டால் அவரைப் பற்றி தவறான கணிப்பிற்கு இடமில்லை.

இதையும் படியுங்கள்:
சால்ட் அண்ட் பெப்பர் விவாகரத்து பற்றி தெரியுமா?
Attitude

எதிர்மறை விமர்சனம்: மக்கள் ஒருவரை மனப்பான்மை கொண்டவர், ஆட்டிட்யூட் மிக்கவர் என்று விவரிக்கும்போது அவர்கள் அவரின் நடத்தையை எதிர்மறையாக விமர்சனம் செய்கிறார்கள். திமிர் பிடித்தவராகவும் அவமரியாதை செய்பவராகவும் எண்ணிக் கொள்கிறார்கள்.

தவறான வார்த்தைப் பிரயோகம்: மனப்பான்மை என்பது எல்லோரிடத்திலும் இருக்கும் ஒரு விஷயம். அதனால் அவர் ஆட்டிடியூட் காண்பிக்கிறார் என்று சொல்வது முற்றிலும் தவறாகும். இந்தக் குறிப்பிட்ட சூழலில், சந்தர்ப்பத்தில் அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், வெறுமனே ஆட்டிட்யூட் காண்பித்தல் என்கிற சொல் தவறு. தற்போது இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com